அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/334-383

விக்கிமூலம் இலிருந்து

5. ஒருமனிதனைத் தீண்டலாம் தீண்டக்கூடாதென்னும் விவரம்

பெருந்திரட்டு

தன்னதுநெஞ்சந் தனக்கு சான்றது வாய்த்/தத்துவநன்குணராதே

வன்னெஞ்சனாகி கூடமேபுரிவோன்/ வஞ்சகக் கூற்றினுங் கொடியோன்

பன்னுங்காலவன்தன் தெரிசனம் பரிசம் / படிற்வழு தைய வேதுவுமாம்
புன்னெஞ்சாலவனும் போய்நரகெய்திப் / பூமியுள்ளளவு மேரானால்.

மக்களின் குணானுபவத்தைக் கொண்டு தீயச் செயல்களையும் நியாயச் செயல்களையும் அநுசரித்து சில மனுக்களைத் தீண்டலாம் சில மனுக்களைத் தீண்டலாகாதென விவேகமிகுத்த மேன்மக்கள் வகுத்திருக்கின்றார்கள். அதாவது வஞ்சினத்தாலும் பொறாமெயாலுங் குடிகளைக் கெடுத்து துன்புறச்செய்யும் ஓர் கொடியவனை, நன்மெய் பயக்கும் சீலமுள்ளோன் ஒருவனணுகி பரிசிக்கவும் நேசிக்கவுமிருப்பானாயின், துர்ச்சனனின் குணச்செயல்கள் இவனையும் பற்றி சீலங்கெட்டு தாழ்ந்தபிறவிக்கேகித் தவிப்பானென்னும் பரிதாபத்தால் வஞ்சகர், பொறாமெயோர், கள்வர், தூர்த்தர், மிடியர், சிறியசிந்தையர், காலடர், பேராசையோர், கபடராகுந் தீயச்செயலுள்ளவர்களை தீண்டலாகாதென்றும் அவர்களையடுத்து நேசிக்கலாகாதென்றும் கூறியிருக்கின்றார்கள்.

மூதுரை

தீயாரைக் காண்பனவுந் தீதேதிருவற்ற/தீயார் சொற் கேட்பனவுந் தீதே - தீயார்
குணங்களுரைப்பனவுந் தீதே யவரோ/டிணங்கியிருப்பனவுத் தீது.

நீதிநூலோர் இவ்வகையாகக் கூறினபோதிலும் வைத்திய நூலோர்களில்

அகஸ்தியர், கன்மகாண்டம்

குட்ட நோய் குறிகி நிற்போர் கொம்பனால் பேதிகண்டோர்
வெட்டை வைசூரிகண்டோர் மேலெங்கும் பிளகையுண்டோர்
அட்டதுற் கன்மநோய்க ளணுகிய விவரைத்தீண்டில்
துட்டவாதனைகள் சேருந்தூரவே யகல்வீர்கண்டாய்.

மநுக்களுள் தோன்றும் நாலாயிரத்தி நானூற்றி நாற்பத்தியெட்டு வகை வியாதிகளில் எட்டுவகை வியாதி கண்டவர்களை தீண்டலாகாதென்றும் அத்துற்கந்தங்களை நாசியில் முகரலாகாதென்றுங் கூறியிருக்கின்றார்.

வியாதிகளாவன:

குறை குஷ்டம்
படையிற் பிளவை ...... (சில வரிகள் தெளிவில்லை)

தற்காலம் (பிளேக்கென்று வழங்கும் மாறியும் பனைமுகிறி என்னும் ஓர்வகை வைசூரியேயாம். இவ்வைசூரி கண்டதுண்டங்களில் கட்டிகளாக எழும்பிக்கொல்லும்.

இதனை வன்னெஞ்சங்கொண்டு வாசிப்போருட்சிலர் எங்கள் சாதியாசாரப்படிக்கும், சமையாசாரப்படிக்குங் மற்றவர்களைத் தீண்டப் படாதென்றுங் கூறுவர். அவர் கூற்றும் அவலமேயாம். அதாவது சாதிபேதங்களையும் சமைய பேதங்களையும் ஒழித்தவர்களுக்கே ஆசாரமென்னும் வார்த்தைப் பொருந்துமேயன்றி சாதிசமயங்களைக் கவிழ்ந்துநிற்போருக்கு ஆசாரமென்னும் வார்த்தைப் பொருந்தாவாம்.

தேவிகாலோத்திரம்

சமையா சார சங்கற்பலிகற்பமும் அமையாதாங்குவ
வாசாரமானதும் இமையாதாரும் விடாத லில்வாழ்க்கையும்
அமையார் தோளாய் விடுத லாசாரமே.

சாதன பேதத்தால் சாதி யென்னும் மொழியும், காலபேதத்தால் சமையமென்னும் மொழியும் உதித்துள்ள மையான் ஆசாரம் என்னும் மொழி அவற்றைத் தழுவாவாம். ஆ - சாரம், ஆ - லயம், ஆ - காயம்

- 1:6; சூலை 24, 1907 -