அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/355-383
26. கூட்டத்தால் தேட்டமும் வாட்டமும் உண்டாம்
தற்காலத்தில் நமது தேசத்தோர் சிற்சிலக்கூட்டங்கள் கூடுவதியல்பாம். அக்கூட்டங்களிற் சிலர் எங்கள் பிரமம் அரசனாகப் பிறந்து அழிக்குந்தொழில் நடாத்துகிறதென்றால் தேட்டம். சிலர் அங்ஙனமில்லை எங்கள் பிரமம் பன்றியாகப் பிறந்து மலத்தைத் தின்பதென்றால் வாட்டம். மற்றுஞ்சிலர் எங்கள் பெரியோர் நால்வர், அவர்கள் மேலோகத்திற்குப்போய் கீழ்லோகத்திற்கு வருகிறவர்கள், கீழ்லோகத்தினின்று மேலோகத்திற்குப் போகின்றவர்கள் என்னில் மிகுதேட்டம். சிலர் அடடா, மேலோகத்தினின்று கீழ்லோகத்திற்கு வந்தவர்களைக் கண்டவர்கள் யார் கீழ்லோகத்தினின்று மேலோகத்திற்குப் போனவர்களைக் கண்டவர்கள் யாரென்றால் வெகு வாட்டம். சிலர் எங்கள் தேவனை நம்பினால்தான் மோட்சம்பெருவீர்கள், எங்கள் தேவனை நம்பாதவர்கள் நரகத்தில் வாதனைப்படுவீர்களென்றால் தேட்டம், அதிற் சிலர் மோட்சம் எங்குளது, நரகம் எங்குளது மோட்சம் பெறுவான் என்பதின் முன்னடையாளமும் குணக்குறிகளும் என்ன, நரகத்திற் சேருவானென்னும் முன்னடையாளமும் குணக்குறிகளுமென்ன. உன் தேவனென்பதற்கு உனக்குள்ள சுயாதீனப்பட்டயமென்னவென்று கேட்டால் வாட்டம். இத்தகையத் தேட்டங்களும் வாட்டங்களும் உண்டாகக்கூடியக் கூட்டங்கள் கூடி போட்டியிட்டு கைகளை நீட்டிவிட்டுப் பேசுவதால் யாதுபயன். மதச்சண்டைக் கூட்டங்களால் மாளா துக்கமும் சமயச்சண்டைக் கூட்டங்களால் சால துக்கமும் பெறுகி ஒற்றுமெய்க்கேடுண்டாகி, உள்ள சுகமுங் கெடவேண்டியதேயாகும்.
கூட்டங்கள் கூடி உலகமக்களுக்கு யாதொரு பயனுமிறாது வாட்டமுந் தேட்டமும் உண்டாகத்தக்கச் செயலால் தேசம் சீர்கெடவேண்டியதாகும். ஆதலின் கூட்டங்கள் கூடுவோர் தங்கள் ஆசிரியனும் அறியாது தாங்களுங் கண்டறியாத விஷயங்களைக் கண்டதுபோல் மனப்புர்த்தியானப் பொய்யைச் சொல்லிப் பொருள் சம்பாதித்து சிவிப்பதிலும் கூட்டங்கள் கூடி மெய்யைச்சொல்லி உழைத்து சம்பாதித்து உண்பது உத்தமமாகும்.
பிரமமென்னும் மொழிதோன்றிய காரணமென்னை. அப்பெயர் வடமொழிப்பெயரா, தென்மொழிப்பெயரா. அப்பெயர் காரணப்பெயரா, காரியப்பெயராவென்றாய்ந்துணராது வீண்சங்கங்கள் கூட்டி காண்பவர் தங்களை மெச்சக்காட்டிப் பேசுவதினால் வாட்டமுந் தேட்டமும் பெருகி வாணாட்கள் யாவும் வீணாட்களாகக்கழிகின்றது.
நாம் மநுகுல மேல்வகுப்பினராகத் தோன்றியும் மற்றதேச மனுக்கள் வித்தைவிருத்தியிலும் புத்தி விருத்தியிலும், ஈகை விருத்தியிலும், சன்மார்க்க விருத்தியிலும் முன்னேறுவதைக் கண்டுணராது, நாங்கள் வேதாந்திகள், எங்களுக்கு வித்தையு மித்தை, புத்தியு மித்தை, ஈகையு மித்தை, சன்மார்க்கமு மித்தையெனக் கூறி சதா சோம்பேறிகளாய், பெண்டுகள் கூறுவது போல், அக்குத்துக்கில்லா ஆணவமும் வெழ்க்கஞ்சிக்கியில்லா வீராப்புங்கொண்டு, வித்தையுள்ளோர் பொருளுக்கும், புத்தியுள்ளோர் பொருளுக்கும், ஈகையுள்ளோர் பொருளுக்கும், சன்மார்க்கமுள்ளோர் பொருளுக்குங் கையேந்தி பெண் பிள்ளைகளைக் காக்குங் கூட்டம் பெருங்கூட்டமாகிவிடுமாயின் வித்தையும் புத்தியு மிகுத்தோர் கூட்டம் நாளுக்குநாள் குறைந்து தேசமும் சீரழிந்துபோம். வேதமின்னது, வேதத்தின் அந்தமின்னது, வேத விசாரிணை யாருக்குரியது, வேத அந்தத்தின் விசாரிணை யாருக்குரியது, சித்துக்களெது, சித்துக்களின் அந்தமெது, சித்துக்குரியச் செயல்களெவை, சித்தின் அந்தத்திற்குரிய செயல்களெவை எனும் விசாரிணையற்று வேதாந்திகளென்றும் சித்தாந்திகளென்றுங் கூட்டங்கூடி வாட்டங்களுந்தேட்டங்களும் அடையாது சருவஜனவிருத்திகூட்டங்கள் கூடி பொய்சொல்லுவதினால் உண்டாங்கேடுகளையும், மெய்பேசுவதினால் உண்டாம் சுகங்களையும், அன்னியப் பொருட்களை அபகரிப்பதால் உண்டாங்கேடுகளையும், அன்னியருக்கு உபகாரஞ் செய்வதினால் உண்டாகும் சுகங்களையும், அன்னியர் தாரத்தை இச்சிப்பதனால் தனக்கும் தன்சந்ததியோருக்கும் உண்டாகும் கேடுகளையும், அன்னியர் தாரத்தை தாய் தந்தையர் போல் கருதி ஆதரிப்பதினால் தனக்கும் தன்சந்ததியோருக்கும் உண்டாஞ்சுகங்களையும், சீவிப்பிராணிகளை வதைத்து துன்பஞ் செய்வதினால் உண்டாங் கேடுகளையும், சீவப்பிராணிகளை தன்னுயிர்போல் காப்பதினால் உண்டாம் சுகங்களையும், இலாகிரி வஸ்துக்களைப் பானஞ்செய்து மதிகெட்டு அதினாலுண்டாங் கேடுகளையும், இலாகிரி வஸ்துக்களை அகற்றி நிதானத்திலும் ஜாக்கிரதையிலுமிருக்கும் சுகங்களையும் யாதாமோர் உழைப்பின்றி சோம்பேறிகளாய்த் திரிவோர் கேடுகளையும், சதா உழைப்பிலும் சுருசுருப்பிலும் உள்ளவர்களின் சுகங்களையும், வித்தையிற்பயிலாது வீணர்களாய்த் திரிவோர் கேடுகளையும், வித்தைகளில் விருத்தி பெற்றுள்ளோர் சுகங்களையும் குருநிந்தை அரச துரோகமுள்ளோர் கேடுகளையும், குருபக்தி இராஜவிசுவாசமுள்ளோர் சுகங்களையும் விளங்கக்கூறி சரியையாம் நேரான வழியிற் சென்று கிரியையாம் தொழில்களைப் புரிவதாயின், யோகமாம் அதிர்ஷ்டபாக்கியந் தோன்றி சுகச்சீருண்டாகி ஞானமாம் அறிவின் விருத்தித் தானே தோன்றி சிற்றறிவால் வித்தியாவிருத்தி சுகங்களையும் பேரறிவால் மனம் என்னும் பெயரொழிந்து பரிநிருவாண சுகத்தையும் அடையலாம். இதுவே சாதுசங்கக்கூட்டத்தின் பயனாகும்.
- 4:10; ஆகஸ்டு 17, 1910 -