திருக்குறள் பரிமேலழகர் உரை எளிய தமிழில். 49. காலமறிதல்
பொருட்பாலில் ‘காலம் அறிதல்’ எனும் அதிகாரத்தில் மன்னன் பகைமேற் செல்லுகின்றவன் -பகைவரோடு போரிடச் செல்கின்றவன்- அதற்கேற்ற காலத்தை அறிந்து செயல்பட வேண்டும் என்று கூறுகிறார் முப்பால் முனிவர்.
மன்னன் வினைவலி, தன்வலி, துணைவலி ஆகிய மூவகையான வலிமைகளில் மிகச் சிறப்பு உடையவனாக இருந்தாலும் சரியான காலத்தை அறிந்த செயல்பட வேண்டும்.
“காலம் அறிதலாவது, வினைசெய்தற்கால் காலம் அறிதல்” என உரை கூறுவர் பரிமேலழகர்.
முதற்குறளில் காலத்தின் சிறப்பினைக் கூறுகின்றார்.
காலத்தின் சிறப்பு:
தன்னைக் காட்டிலும் வலிமை மிக்கதான கூகையை (கோட்டான்) காக்கை, பகற்பொழுதிலே வென்று விடும். எனவே, பகைவரை வெல்லக் கருதும் அரசனுக்குக் காலம் அறிதல் மிக இன்றியமையாத ஒன்று ஆகும். இதனை,
பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.
காலம் அறிதலால் வரும்பயன்:
அரசன் காலத்தோடு பொருந்த வினைசெய்து ஒழுகுதல் வேண்டும். அது ஒருவரிடமும் நில்லாது செல்லும் இயல்பினை உடைய திருவினை -செல்வத்தை- தன்னிடமிருந்து நீங்காதபடி கட்டுகின்ற கயிறாம். எனவே, காலம் அறிந்து செய்தால் செல்வம் கெடாது என்பதாம்.
செய்வதற்கு முடியாத வினைகள் என்று சொல்லப்படுவன எதுவும் இல்லை, அவ்வினைகளை முடிப்பதற்கு ஏற்ற கருவிகளுடனே ஏற்ற காலத்தையும் அறிந்து செய்தால் முடியாத செயல் என்று எதுவும் இல்லை.
இந்த நிலவுலகம் முழுவதையும் பெறுதற்கு ஒருவன் நினைத்தாலும் பெறலாம், காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்தும்படி செய்தால்! இக்கருத்தினைப் பின்வரும் குறள் தெரிவிக்கின்றது.
ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின்.
காலம் வராதபோது:
தக்க காலம் வராதபொழுது என்ன செய்வது? அதற்கும் விடையளிக்கின்றார், காலம் வரும்வரை கலங்காது காத்திருக்க வேண்டும் என.
இந்த உலகத்தை எல்லாம் கொள்ளக் கருதும் அரசர் தம் ஆற்றல்வலி மிகுதியாக இருப்பினும் ஏற்ற காலத்தை எதிர்பார்த்து அது வருந்துணையும் காத்திருப்பர். அதனைக் கருதாது செயல் (போர்) மேற்கொண்டால் இருவகைப் பெருமையும் (பொருள், படை) தேய்ந்து, பெரும் வருத்தமும் உறுவர். எனவே, ‘இருப்பர்’ என்றார்,என்று அவ்வாறு காத்திருப்பதற்கான காரணத்தை விளக்கினார்.
விரைந்து செயல்படுக:
பெறுவதற்கு அரிதான காலம் வந்தபொழுது, அப்பொழுதே தன்னால் செய்தற்கு அரிதான வினைகளைச் செய்து முடிக்கவேண்டும். காலம் வந்தபோது விரைந்து செயல்பட வேண்டும்.
எய்தற் கரிய இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்.
கொக்கும் அதன்குத்தும்:
சரியான காலம் அமையாதபோது எவ்வாறு இருக்கவேண்டும்? காலம் வந்தபோது எவ்வாறு நடக்கவேண்டும்? என்பதுபற்றி ஓர் அழகான உவமை மூலம் விளக்குகின்றார்.
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.
காலம் பார்த்து இருக்கும்போது கொக்கு போல ஒடுங்கி இருக்கவேண்டும். வினை செய்வதற்கான காலம் வந்தபோது, அக்கொக்கானது குத்துவது போலத் தப்பாமல் விரைந்து செய்தல் வேண்டும்.
இந்த உவமையினைப் பரிமேலழகர், ‘பின் கோடற்கு (கொள்ளுதற்கு) இருக்கும்வழி, அது (மீன்) வந்து எய்தும் துணையும், முன் அறிந்து தப்பாமை பொருட்டு உயிரில்லாது போன்று இருக்கும் ஆகலானும், எய்தியவழி (மீன் வந்தபொழுது) பின் தப்புவதற்கு முன்பே விரைந்து குத்தும் ஆகலானும், இருப்பிற்கும் செயலுக்கும் கொக்கு உவமை ஆயிற்று” என அதனை அழகுபட விளக்குவர்.
இருத்தலின் சிறப்பு:
அவ்வாறு காலம் கருதிக் காத்திருப்பது இழிவன்றோ? என்பதற்கு இல்லை அது சிறப்பான ஒரு செயலே என்று ஓர் உவமை மூலம் விளக்குகிறார்.
ஊக்கம் உடையவன் ஒடுங்கிக் காலம் பார்த்திருப்பது, அதாவது வலிமை மிகுதி உடைய அரசன் பகைமேல் செல்லாது காலம் பார்த்திருக்கின்ற இருப்பு, போர் செய்கின்ற தகர் -அதாவது, ஆட்டுக்கிடாய்- வலிமையாகத் தாக்கும்பொருட்டுச் சிறிது நீங்கிச் செவ்வி (தக்க சமயம்) பார்த்து நிற்பது போன்றதாம். இதனை,
ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேரும் தகைத்து.
-எனக் குறள் பேசுகிறது.
வெளிப்படையாய் வெகுளற்க:
பகைவர் தமக்கு மிகை செய்த போதும் அறிவுடைய அரசர், பொள்ளென ஆங்கே புறம் வேரார், அதாவது வெளிப்படையாக வெகுளி (கோபம்) கொள்ளார்; அவரை வெல்லுதற்கு ஏற்றகாலம் வருமளவும் உள்ளே வேர்ப்பர். அதாவது மனம்குமுறிக்கொண்டே அதனைமறைத்து இருப்பர் என்பதாம்.
பகைவரை வெல்லக் கருதிய அரசர், பகைவருக்கு இறுதிக்காலம் வரும்அளவும், அவரைக் கண்டால் பணிந்திருப்பர். அவரை வெல்லுகின்ற காலம் வந்தபோது அவரைத் தலைகீழாகப் போட்டுத்தள்ளித் தலையிலேறி மிதிப்பர் என்பதாம்.
பார்க்க:
[தொகு]பரிமேலழகர் எளிய தமிழில்- 39. இறைமாட்சி
பரிமேலழகர் எளிய தமிழில்- 48. வலியறிதல்
பரிமேலழகர் எளிய தமிழில்- 60. ஊக்கமுடைமை
பரிமேலழகர் எளிய தமிழில்- 65. சொல்வன்மை
பரிமேலழகர் எளிய தமிழில்- 69. தூது
பரிமேலழகர் எளிய தமிழில்- 82. தீநட்பு
பரிமேலழகர் எளிய தமிழில்- 83. கூடாநட்பு