பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 19
2. கூத்துப் பத்து
1.தானதுவா யெண்ண அதுதானே வந்துளொன்றி
ஊனணுவை யுந்துவதே கூத்து.
2.புலம்பற்றி யுள்பற்றிப் பூதங்கள் பற்றித்
துலங்கசைவைத் தோற்றுவதே கூத்து.
3.கண்ணொளியை மெய்யொளிர்ப்பக்
காதொலியை வாயுதிர்ப்பத்
திண்ணணுவில் நெஞ்சாடல் கூத்து.
4.கோடி யணுத்திரளும் கூத்தன் உளக்கயிற்றில்
ஆடி வுணர்வியக்கல் கூத்து.
5.வாங்குணர்வை யேந்தி வழங்குணர்வால் காண்பார்க்குள்
ஓங்குணர்வைப் பாய்ச்சுவதே கூத்து.
6.அண்ட வியக்கத்தை ஆன்றணுக்கள் ஏற்றியங்கி
விண்டு விளக்குவதே கூத்து.
7.நாடித் துடிப்புமுயிர் நற்றுடிப்பும் ஓரிசையுள்
ஓடித் துடிப்பெடுத்தல் கூத்து.
8.அணுவோ டணுமோதி யஃதிரண்டாய் விண்டுள்
உணர்ந்தாடி வீறுவதே கூத்து.
9.மின்னணுக்கள் வீழ மிளிரணுக்கள் தாமியங்க
மன்னுணர்வை யாட்டுவதே கூத்து.
10.புதைத்த உளத்துணர்வைப் பொன்றா வெளியுட்
சிதைக்கச் சிலிர்ப்பதுவே கூத்து.