உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கனிச்சாறு 1.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22 கனிச்சாறு – முதல் தொகுதி

பூவை நினதெழிற் பேசற் கெளிதோ
புலமையர்க்கே!
கூவைத் திலங்குங் குறைவறு பல்லா
யிரமொழிக்குள்
நீவைத் தொளிரும் நெடுநூற் பரப்பிலை
யேகுறள்தீம்
பாவைத் திருக்கும் பசுமைத் திருவே
பழம்பிறப்பே!

பிறவாப் பெருஞ்சீர் இலக்கியத் தோடின்
னிலக்கணமும்
அறவோர் புகழும் அறநெறி நூற்கள்
அளவிறந்தும்
நறவாப் பிழிந்தே நறுநூற் புலவோர்க்
களிப்பவளே!
இறவாப் பெருமூ தொருத்தி மொழிநா
வினிப்பவளே!

இனித்த நறுவாய் நடம்விளைத் துள்ளத்
துயிரிலெலாம்
நனித்தண் ஒலியாய் நடந்தே இயலிசை
நாடகமாய்
நுனித்த புலனே புனற்கோள் எரிகோள்
நுழைந்திருந்துந்
தனித்த மொழியே விழியே ஒளியே
தமிழரசே!

அரசீ உலகிடை அன்றன் றுயரும்
அயல்மொழியின்
வரிசை உணர்வோம்! வளங்கெழு நின்சீர்
வழுவலெலாம்
எரிசேர் இழிஞர் குடர்க்கிட நின்னை
இழிப்பதுவே!
முரசே அவர்தம் முழுமடம் ஞாயிறு
முன்பனியே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_1.pdf/49&oldid=1419314" இலிருந்து மீள்விக்கப்பட்டது