இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 83
58 செத்துவிட்ட வடமொழி எதற்கு ?
செந்தமிழிலேயே வழிபாடு செய்வீர்!
வழங்குதமிழ் மொழியிருக்க வழங்கி டாத
வடமொழியில் வழிபாடு செய்கின் றீர்கள்!
பழங்கதையில் குரங்கினமாய்ப் பார்ப்பா னுக்கே
பாதங்கள் தாங்குகின்றீர்! அடிமை யுற்றீர்!
புழங்குகின்ற தமிழ்மொழியில் இறைவ னுக்கே
போற்றிசெயும் திருப்பாடல் கோடி யுண்டு!
முழங்கிடுவீர் அவற்றினையே! விளங்கி டாத
மூடமொழி நமக் கெதற்கு? விலக்கு வீரே!
செந்தமிழைப் போற்றாமல் - மனங்கொள் ளாமல் -
செத்தசமற் கிருதத்தில் பொருள்கா ணாத
மந்திரங்கள் பலசொல்லி வழிபா டாற்றி
மகிழ்கின் றீர்! தன்மானம் துறந்து விட்டீர்!
தந்திரஞ்செய் பார்ப்பானின் கைச்சோற் றுக்கே
தமிழினத்தை அடகுவைத்தீர்! இனிமே லேனும்
சிந்தனைசெய் தும்மொழியை உம்மினத்தைச்
சிறப்புறவே காத்திடற்கு முனைகு வீரே!
-1981