உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கனிச்சாறு 1.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96 கனிச்சாறு – முதல் தொகுதி


71  நாடற்றுப் போவாய்....!

பீடற்ற இந்திப் பிணிப்பைப் பெயர்த்து, இப்
பெருநிலத்துள்,
ஈடற்ற செந்தமிழ்த் தாயை அரியணை
ஏற்றிலையேல்,
ஏடற்று முன்செய் எழுத்தற் றிருக்க
இடமுமற்று,
நாடற்றுப் போவாய் தமிழா, இனுஞ்சில
நாட்களிலே!

-1963


72  மாளல் நன்று!

வில்லெடுத்துப் போரிட்ட விறலெங்கே?
வெற்றிபெறும் மணிமார் பெங்கே?
கொல்லவரும் வெம்புலிமேற் குறிதவறா
தெய்கின்ற கூர்வேல் எங்கே?
சொல்லெடுத்துப் பேசிடவும் அஞ்சுகின்றாய்!
சோற்றுக்கு மானம் விற்றாய்!
மல்லெடுத்த இந்திக்கு மருள்கின்றாய்!
தமிழா, நீ மாளல் நன்றே!

-1964

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_1.pdf/123&oldid=1513127" இலிருந்து மீள்விக்கப்பட்டது