உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கனிச்சாறு 1.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110 கனிச்சாறு – முதல் தொகுதி


80  தமிழக அமைச்சர்களே
இந்திக்கு வால் பிடிக்காதீர்கள்!

'இந்தித் திணிப்பே இல்லை'யென் றிங்கே
எந்தமிழ் அமைச்சரும் இளிக்கின்றார் பல்லை!
குந்தித் தின்னும் கொழுப்பினால் இவர்கள்
குருட்டுத் தனமாய்க் கூறலாம் அப்படி!
‘இந்திப் படிப்புக் கிலவயம், சலுகை;
இந்தி. படித்தால் கூடுதல் சம்பளம்;
இந்திக் குயர்நிலை பதவி' என்றெல்லாம்
இருக்கும் நிலைகளை என்னென் றழைப்பதோ?

எந்தமிழ் மொழியும் இனமும் இந்தியால்
இரண்டாம் படிநிலை எய்துவ துண்மை!
எந்த வடிவிலும் வழியிலும் இந்தி
இங்கே வருவதை உயிர்கொண் டெதிர்ப்பதும்,
செந்தமிழ் மொழியைச் சிறக்கக் காப்பதும்
செந்தமிழ் நாட்டின் அமைச்சர்கள் வேலை!
சொந்த நலத்தையும் சோற்றையும் விரும்பும்
சூதர்கள் இதனைச் செய,இய லாதே!

இந்திக் கிருக்கும் எல்லாச் சலுகையும்
எந்தமிழ் மொழிக்கும் இவர்பெறல் வேண்டும்!
இந்தியப் பொதுமொழி இந்தி என் றில்லா(து)
எல்லா மொழிகளும் பொதுமொழி என்னும்
முந்தைய நிலையே தொடர்ந்திடல் வேண்டும்!
மூடர்கள் விரும்பினால் இந்தியைத் தம்தம்
சொந்த முயற்சியால் கற்றுச் சிறக்கெனச்
சூழ்ச்சி வடவர்க்குச் சொல்லுவீர் அமைச்சரே!

-1978

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_1.pdf/137&oldid=1513121" இலிருந்து மீள்விக்கப்பட்டது