பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

274 / அயோத்திதாசர் சிந்தனைகள்

சீவகசிந்தாமணி

நலத்திரு மட மகணயந்த தா மரை / நிலத்திருந்திருசுடர் நிமிர்ந்து செல்வபோ
நுலப்பருந் தவத்தினாலோங்கு சாரணர் / செலத்திரு விசும்பொறி சிறந்த தென்பவே.

இத்தகைய உள்விழிப்பார்வையால் சதாவிழிப்பாம் ஞான நித்திறையில் தசநாடிகளுந் தசவாயுக்களுமடங்குங்கால் தசநாதங்களாம் சுரமண்டல தொனிகளெழும்பும். அத்தொனியை நோக்கி நிற்பார்களாயின் நித்திறைக் 'கிழுத்து மாளாப் பிறவிக்காளாக்கும். அத்தொனியில் அவாக்கொள்ளாது கேட்பதுங் கேளாததுமாகும் உட்பார்வையிலிருப்பார்களாயின் எண்பத் தொன்பது சித்தும் இயல்பிற்றோன்றுஞ் சாரணர்களாகும் இவர்களையே 4-வது விஞ்ஞை மக்களென்னப்படும்.

இவ்விஞ்ஞையாம் சித்துக்களை விரும்பி வீண்செயற்களில் தங்களை ஏனைய மநுக்கள் புகழவேண்டிய மகிழ்ச்சியிலிருப்பார்களாயின் மநுக்களின் துற்கன்ம பீடிதரோகங்கட் சார்ந்து இவர்கள் தேகசுகத்தைக் கெடுப்பதுடன் நற்கன்மதான சுகங்களுங் கெட்டு சித்துக்களின் டம்பமே மறுபிறவிக்கு ஆளாக்கிவிடும்.

ஆதலின் விஞ்ஞைமக்கள் இயல்பினால் உண்டாகுங் சித்துக்கள் நீங்கலாக ஏனையோர் மகிழ்ச்சியை நோக்கி டம்ப சித்துக்களாடாது சுத்தவிதயமாம் மனக்களங்குகளை அகற்றி கண்டயிடம் மனம்போகாமலும், முகர்ந்தயிடம் மனம்போகாமலும், கேட்டயிடம் மனம்போகாமலும், உருசித்தயிடம் மனம் போகாமலும், பரிசித்தயிடம் மனம் போகாமலும் தண்மெயாம் குளிர்ந்த நிலையில் பொறிவாயிலைந்தினையும் அவித்து சருவசீவர்களைத் தங்களுயிர்கள் போலும் தங்களால் ஆதரித்து சீர்பெறவேண்டிய சீவர்களென்றுங் கருதி உண்மெயுணர்ந்து இறப்பும் பிறப்புமற்று மெய்யறத்தி நின்று அறஹத்துக்களாய் விளங்கியிருக்கும் இவர்களை 5-வது ஐந்திர மக்களென்று கூறப்படும்.

சங்கத்தோருள் ஐவகை சாதனரும் மிக்க ஜாக்கிரதையால் சதாவிழிப் பினின்று மக்களென்னும் ஆறாவது தோற்றங்கடந்து தேவர்களென்னும் ஏழாவது தோற்றமுண்டாயினும் ஜாக்கிரதா நிலையற்றிருப்பரேல் அங்குந் தீய நிலை தோன்றும். ஆதலின் மிக்க ஜாக்கிரதையோர் விழிப்பே மேன் மெய்யாம் சுயம்பிரகாச ரூபத்தைப் பெறுமென்றோதி சங்கத்தோர் ஐவகைச் சாதன கட்டளைகளைப் பூர்த்திசெய்தார்.

ஐந்திர மக்கள் ஐம்பொறிகார்த்து ஏழாவது தேவதோற்றம் பெறினும் ஜாக்கிரதையிலிருக்கவேண்டுமென்பதாம்.

சீவக சிந்தாமணி

ஒழுக்கத்தினின்று ஐம்பொறிகாத்தலே வீட்டின்பந்தரும்.

ஒன்றாய ஊக்கவேர் பூட்டி யாக்கைக்கெறுவுழுது
நன்றாய நல்வரகுச் செந்நெல் வித்தி ஒழுக்க நீர்,
குன்றா மற்றாங்கொடுத் தைம்பொறியின் வேலிகாத்தோம்பின்,
வென்றார் தம் வீட்டின்பம் விளைக்கும் விண்ணோருலகின்றே.

நாயனார் திரிக்குறள்

எழுபிறப்புந்தீயவை தீண்ட பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெரின்.

11.சங்கங்களின் ஸ்தாபன காதை

காசி விசுவநாதன் வாரணாசியில் தன்ம சங்கங்களை நாட்டி சங்க நிபந்தனைகளையும் ஊட்டி திரிபேத வாக்கியங்களாகும் திரிபீடங்க ளையும் அதன் உபநிட்சயார்த்தங்களாகும் உபநிடதங்களையும் சங்கத்தோர் இதயங்களிற் பதியச்செய்து சதானந்த நிலையை விளக்கிவருங்கால் அத்தேசவாசியாம் ஒர் சிறந்த வியாபாரியின் புத்திரன் யட்சன் என்பவனிருந்தான். அவனோ அவன் தந்தையால் சேகரித்த பெருந்திரவிய சம்பத்திருந்தும் தனக்கோர் மனவமைதியும் ஆறுதலும் இல்லாமல் பொருளை சேகரிக்கும் பேராசையால் பலவகை விரோதங்களும் மனசஞ்சலங்களும் பெருகுவதை உணர்ந்து ஓர்நாள் நள்ளிரவில் எழுந்து வீட்டைவிட்டு காசி விசுவேசனாம் பகவன் தங்கியிருக்கும் இடத்திற்குச் சென்றான்.