51
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்
புறநானூற்று வீரத் தாய்மார்களுக்கு ஏற்றிச் சிறப்பிக்கப்பெறும் அத்தனை உயர்பண்புகளும் அம்மையாரிடம் நிறைந்து காணப்பட்டன. கற்ற கல்வி சொற்பமாயினும், கணவர் வழிநின்று கற்றுக்கொண்டது ஏராளம்!
கணவர் இராமசாமி சிக்கனத்துக்கே இலக்கணம் வகுத்தவர். நிறைய நண்பர்களும், தொண்டர்களும் வீட்டுக்கு உணவருந்த வரும்போதெல்லாம், ஏன் இவ்வளவு வகையான உண்டிகள், கறிகள் என்று நாகம்மையாரிடம் கடிந்துகொள்வார். அந்நேரங்களில் அவருக்கு மட்டும், சோறும் மோரும் சிக்கனமாய்ப் பரிமாறிவிட்டு, உழைத்து ஊர் சுற்றி, மக்கள் தொண்டாற்றும் மக்களுக்கு விருந்துணவு படைப்பது அன்னையாரின் வாடிக்கை. மிகப்பெரிய கூடம் நிறைய இலைகளைப் போட்டுவிட்டுத்தான், வந்த விருந்தினரின் தலைகளை எண்ணுவார் அம்மையார்.
அன்புக்கும் பண்புக்கும் இருப்பிடமான நாகம்மையாரைக் கொள்கைப் புடமிட்ட தங்கமாய்ப் பொலிவும் ஒளியும் பெறச்செய்த இராமசாமியின் இல்லற வாழ்வு, இனிதே ஆறாண்டு காலத்தைக் கடந்தது. இன்ப மனைமாட்சியின் மங்கலச் சின்னமாய் இரண்டாவது ஆண்டில் பிறந்த ஓர் பெண் மகவும் அய்ந்தே மாதங்களில் மறைந்து போயிற்று! பின்னர் மகப்பேறு வாய்க்கப் பெறவில்லை இராமசாமிதம்பதியர்க்கு!
உலக மக்களினத்தையே தம் மக்களாய் ஏற்கவிருக்கும் பெருமகனுக்குத் தன்மகவு என ஒன்று உண்டா?
இளமையிலேயே இராமசாமி பொய்ம்மையை வெறுத்து விலக்கி, எத்தகைய இன்னல் எதிர்கொளினும் மெய்ம்மையை நிலைநாட்டவல்லார் என்பதும், வணிகராயினும், தேவையற்று யார்க்கும் தீங்கு விளைத்திட நினையார் என்பதும் இனிது விளங்கிட, நல்ல நகைச்சுவை ததும்பும் நிகழ்ச்சி ஒன்றினை இங்கு நினைவு கூரலாம். 1903-ஆம் ஆண்டு, இவர் தந்தையார்க்கு உதவியாய், வணிகத் துறையில் ஈடுபட்டிருந்தார்; வயது 24. திருச்சியில் ஒருவரிடமிருந்து வரவேண்டிய ஓராயிரம் ரூபாய்க்கான வழக்கிற்கு, வக்காலத்து நமூனாவில் தமது தந்தையார் பெயரைத் தாமே கையெழுத்துப் போட்டு, ஒரு வழக்கறிஞரிடம் கொடுத்துவிட்டு, இவர் ஈரோடு திரும்பிவிட்டார். வழக்கறிஞர் ஆத்திரப்பட்டுத், தந்தை கையெழுத்தை மகன் ஃபோர்ஜரி செய்து, மோசடி செய்துவிட்டதாக, ஒரு வழக்கைத் தொடுத்து விட்டார். தந்தை வெங்கட்ட நாயக்கர் பயந்துபோய்த், தங்கள் பிரசித்தமான பெயருக்குக் களங்கம் விளையுமே என அஞ்சி, சேலம் விஜயராகவாச்சாரியார், சென்னை நார்ட்டன் துரை போன்ற மிகப் பிரபல வழக்கறிஞர்களின் உதவி நாடினார்.