பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

424

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்



இந்த நிலை பற்றி நான் சொல்லுவது. அபேட்சகர்களைப் பொறுத்தோ, கட்சிகளைப் பொறுத்தோ, அரசியல் தன்மையைப் பொறுத்தோ மாத்திரம் அல்ல மக்களைப் பொறுத்துமேதான் கூறுகிறேன். இப்படிப்பட்ட நாட்டில் பொதுத் தொண்டு, அரசியல் தொண்டு, சமுதாயத் தொண்டு என்று எதைச் செய்கிறது என்பது நமக்குத் தோன்றவில்லை

இப்போது உள்ள வசதியைக் கொண்டு, நமது வகுப்பு விகிதாச்சார உரிமையை நாம் முதலில் பெற்று ஆக வேண்டும். அதற்குப் பல சங்கடங்கள் ஏற்படலாம் என்றாலும், எதிரிகள் கையாளும் எல்லா முறைகளையும் நாம் கையாளப் பின் வாங்கக்கூடாது. மற்றும், மூடநம்பிக்கைகளை ஒழிக்கும் வேலையில் நாம் தீவிரமாய், அதி தீவிரமாய் ஈடுபட வேண்டும். இதற்குப் பார்ப்பனரும், இமிடேஷன் பார்ப்பனரும் தவிர மற்றவர்கள் குறுக்கிட மாட்டார்கள்! நம்முடன் சேருவார்கள்; ஆதரவளிப்பார்கள்!

நாம் இந்த எண்ணம் கொண்டுதான் காங்கிரசை ஆதரித்தோம்; ஆனால் காங்கிரஸ் நம்மை ஆதரிக்கவில்லை ; சிறிது கூட ஆதரிக்கவில்லை; அரசியல் தன்மையில் நெருங்கியதால், பாமர மக்கள் நம் மீது பற்றுக் கொண்டிருந்தும், நம்மை ஆதரிக்கவில்லை! கடைசியாய்ச் சொல்லுகிறேன்; எனக்கு வயது 88. இனி நான் எவ்வளவு நாளைக்கு இருக்க ஆசைப்பட முடியும்? எவ்வளவு நாளைக்குத்தான் இருக்க முடியும்? என் நிலை எனக்குத் தெரியும்! அதனால்தான் சொல்லுகிறேன், வகுப்புரிமை பெற்றே ஆகவேண்டும் என்று!“ (”விடுதலை" - தலையங்கம் 18.3.1967)

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி நடைபெறுவதால் பெரியார் தமது பிரிவினைக் கொள்கையைக் கைவிட்டு விடுவாரோ? அவர்கள் திராவிட நாடு பிரிவினைக் கோரிக்கையை அடியோடு கைவிட்டு விட்டோம் என்று சொல்லித்தானே, தேர்தலுக்கு நின்று, வெற்றி பெற்று, இன்று ஆட்சிக்கும் வந்து விட்டார்கள்! பெரியார் 1938 முதல் நாட்டுப் பிரிவினை கேட்டவராயிற்றே! இதிலுள்ள நியாயத்தை ஜின்னா, அம்பேத்கார் மாத்திரமில்லாமல், காந்தியார், இராஜாஜி போன்றவர்களும் ஒத்துக்கொண்டார்கள்! வெள்ளைக்காரன் ஓடிய அவசரத்தில் தராமல் போய்விட்டான்! நாடு காங்கிரஸ்காரர் கையில் கிடைத்ததும், இந்தியா இனி ஒரே நாடுதான்! பிரிக்கக்கூடாத நாடு! என்று சட்டம் செய்து கொண்டார்கள். திராவிடர் கழகமும், அதிலிருந்து பிரிந்த திராவிட முன்னேற்றக் கழகமும் பிரிவினைக் கோரிக்கையை விடாமல்தான் வலியுறுத்தி வந்தன.

பெரியார் 30.3.67 “விடுதலை“யில் “நாட்டுப் பிரிவினை” பற்றித் தலையங்கம் எழுதினார்:- "காங்கிரஸ் ஆட்சி பலத்தால், திராவிட நாடு பிரிவினை கேட்பவர்கள் தேர்தலுக்கு நிற்க முடியாது என்று விதி