32
நாதமுனிகள் கலி 4024, அதாவது சகம் 844ம் வருஷத்தில் முதிர்ந்த வய்தில் காலம் சென்றதாக ஒரு வைஷ்ணவக் கிரந்தம் கூறுகிறது. ஆனால் ஸ்ரீ கோபிநாதராயர் அபிப்பிராயப்படுவதுபோல சகம் 912 இல்தான் அவதரித்திருக்கவேண்டும் என்று நம்பினாலும் கூட, கம்பனும் நாதமுனிகளும் ஏககாலத்தவர் என்பதை வேண்டுமானால் மறுத்துக்கொள்ளலாம். கம்பனுடைய காலத்தைக் கீழே கொண்டுவர அவசியமில்லை. கம்பராமாயணத்திலிருந்து இரண்டு செய்யுள்கள் திவ்ய பிரபந்தத்தில் சேர்க்கப்பட்டிருக்கின்றன என்று கர்ண பரம்பரை கூறுகிறது. இது உண்மையாக இருந்தால், நாதமுனிகள் காலத்தில் திவ்யப் பிரபந்தம் அனைத்தும் தொகுத்தாய்விட்டதாகையால் கம்பன் நாதமுனிகள் காலத்தவள் என்றாவது அவருக்கு முந்தினவன் என்றாவதுதான் ஏற்படுமேயல்லாது அவருக்குப் பிந்தியவன் என்று ஏற்படாது.
கம்பன் சகம் 10வது நூற்றாண்டு (கி. பி. 11 வது)க்கு முற்பட்டவனாக இருக்கவேண்டும் என்பதற்கு, இன்னும் இரண்டு துணைக்காரணங்களும் காட்டுவோம். சேக்கிழார் பெரியபுராணம் பாடியது சகம் 11வது நூற்றாண்டின் முதற்காலாக இருக்கவேண்டுமெனப் பண்டிதர் நிச்சயித்திருக்கிறார்கள். கம்பராமாயணம், பெருங் காப்பியமேயானாலும் வைஷ்ணவ பரமாயிருக்கிறதாகையால் சிவபரமாக ஒரு பெருங்காப்பியம் செய்து அருளுவீர் என்று, முதலவன் என்று நவீன சரித்திரக்காரரால் கூறப்பட்ட குலோத்துங்க சோழன் சேக்கிழாரைக் கேட்டுக்கொண்டதன் பேரில் தான் அவர் பெரிய புராணம் பாடினார் என்று ஓர் கர்ணபரம்பரை கூறுகிறது. இந்தக் குலோத்துங்கன் ஆண்டது சகம் 992 முதல் 1040 வரையிலாகையால், கம்பராமாயணம் இவன் காலத்தில் பிரசித்தமான காவியமாக இருந்தது