39
பிற்பட்டுச் சேர்த்தது — என நினைக்கிறார்கள். ஆனால் எப்படியிருந்தாலும் மற்ற எல்லா இடங்களிலும் வால்மீகி ராமனை மனிதனாகவே தான் வர்ணித்திருக்கிறார். கம்பனோ என்றால், எங்கு பார்த்தாலும் ராமனை விஷ்ணுவாகவும் பரமாத்மாவாகவுமே வர்ணித்திருக்கிறான்.
பிரகிருதியின் தோற்றங்களை வருணிப்பதில் காடுகளில் சஞ்சரிக்கும் இயல்பினரான வால்மீகி கம்பனை முற்றிலும் வென்றுவிடுகிறார். கம்பனிடம் நல்ல பிருகிருதி வர்ணனை இல்லையென்று நாம் சொல்ல வில்லை. நாட்டுப் படலத்தில் நாம் தெரிந்தெடுத்திருக்கிற செய்யுள்களில் இயற்கை வனப்பு நன்றாகவேதான் வர்ணிக்கப்பட்டிருக்கிறது. உவமை கூறுவதில் சில இடங்களில் நல்ல பிரகிருதி வர்ணனைகள் விழுந்திருக்கின்றன. ஓர் உதாரணம்:
கலை ஆழிக் கதிர்த்திங்கள் உதயத்தில் கலித்து ஓங்கும்
அலை ஆழி என... ... ... ... ... ... ... (285)[1]
ஆனால் கம்பன் பட்டணத்து மனிதன், பிரகிருதியின் தோற்றங்களின் பெருஞ்சுவையை அவன் லயித்துப் போன மனதோடு அனுபவித்திருக்கிறான் என்று சொல்ல முடியவில்லை. ஸ்வபாவோக்தி சொல்லவே மாட்டேனென்கிறான்: சூரியன் உதித்தானா? உதயகிரியாகிற சிவனுடைய நெற்றிக்கண் திறந்ததுபோல எழுந்தான் (275) அல்லாது இருளாகிற இரணியனைக் கிழிப்பதற்கு உதயகிரியாகிய தூணைப் பிளந்து வரும் நரசிங்கம் போல் தோன்றினான் (371). சந்திரன் அஸ்தமித்தானா? அதர்மத்தில் நின்றவர்களுக்கு இடையில் வந்த செல்வம் போல அழிந்துபோனான் (412). இவ்விதம்தான் பெரும்பாலும்.
- ↑ இம்மாதிரி வேறு விபரமின்றி வரும் எண்கள் இந் நூலிலுள்ள செய்யுள் வரிசையைக் காட்டும்.