________________
தமிழன் இதயம் மெச்சுகின்ற பிறர் மொழியை மிகைசெய் யாமல் மெய்யறிவும் பொய் வெறுப்பும் துணையாய் மேவ அச்சமற்ற நல்லொழுக்கம் அதற்கே மக்கள் ஆசைசெய்யும் அரசனெங்கள் ஜவஹர் லாலே. சேனைகளை முன் செலுத்திப் பின்னால் நின்று ஜெயித்துவிட்டேன் என்று சொல்லிச் செருக்கி லாழும் ஊனமுள்ள பெருமையினால் அரச ரென்போர் உலகத்தில் எத்தனையோ பேரைக் கண்டோம் தீனர்களின் துயர் துடைக்க முன்னால் நின்று தீரமுடன் பிறர்க்குழைக்கும் சிறப்புக்காக மானமிகும் வீரனென எவரும் வாழ்த்த மன்னனென விளங்கிடுவான் ஜவஹர் லாலே. கஞ்சியின்றி உயிர்தளர்ந்த ஏழை மக்கள் காலில்வந்து விழுவதையே களிப்பாய் எண்ணி பஞ்சணையில் படுத்திருந்த படியே இந்தப் பாரளிக்கும் மன்னவர்கள் பலரைப் பார்த்தோம் தஞ்சமின்றித் தரித்திரத்தின் கொடுமை வாட்டத் தவித்துழலும் பலகோடி மக்கட் கெல்லாம் அஞ்சலென்ற மொழிகொணர்ந்து ஆண்மை யூட்டும் அன்புருவாம் மன்னனெங்கள் ஜவஹர் லாலே. ஆயுதத்தின் அதிகாரம் அதற்கே அஞ்சி அடிபரவும் பலபேர்கள் அருகே சூழப் பேயுதித்துக் கொலுவிருக்கும் பெற்றி யேபோல் பிறர் நடுங்க அரசாண்டார் பலபேர் உண்டு போயுதித்த இடங்களெல்லாம் புதுமை பூட்டிப் புதையல்வந்து கிடைத்ததுபோல் பூரிப் பெய்தித் தாயெதிர்ந்த குழந்தைகள் போல் ஜனங்கள் பார்க்கத் தாவிவரும் மன்னனெங்கள் ஐவஹர் லாலே.