கலைக்களஞ்சியம்/அகச் சிவப்புக் கதிர்கள்
அகச் சிவப்புக் கதிர்கள் (Infra Red Rays) : சூரிய ஒளியின் நிறமாலையில் அலை நீளம் அதிகமான சிவப்புப் பகுதிக்கு அப்பால் கண்ணுக்குப் புலனாகாது உள்ள இக்கதிர்கள் அகச் சிவப்புக் கதிர்கள் எனப்படும். கண்ணுக்குப் புலனாகாதிருப்பினும் இவை பொருள்களுக்குச் சூடேற்றுகின்றன. ஆகையால் இவற்றை வெப்ப அலைகள் என்றும் கூறலாம். வெப்பத்தை அளவிடும் கருவிகளைக்கொண்டு இவற்றைக் கண்டறியலாம். சூரியனது நிறமாலையில் பல அகச் சிவப்பு வரைகள் இருக்கின்றன. சாதாரணக் கண்ணாடி அகச்சிவப்பு ஒளியை அவ்வளவாகக் கடத்துவதில்லை. ஆகையால் இத்தகைய ஒளியை ஆராய இந்துப்புப் போன்ற பொருளினால் செய்யப்பட்ட ஒளியியற் கருவிகளைப் பயன்படுத்துகிறார்கள்.
அகச் சிவப்புக் கதிர்களைக்கொண்டு போட்டோப் பிடிக்கலாம். ஆனால் இதற்குத் தனிப்பட்ட தட்டுக்களும், படலங்களும் தேவையாகின்றன. சில சாயங்களைத் தடவிய போட்டோத் தட்டின்மீது அகச் சிவப்புக் கதிர்கள் பட்டால் அத்தட்டு மாறுபாடடையும். அகச் சிவப்புப் போட்டோ முறை தற்காலத்தில் மிக முக்கியமானதாக இருக்கிறது. சாதாரண ஒளிக் கதிர்களைவிட அலை நீளம் அதிகமான அகச்சிவப்புக் கதிர்கள் காற்று மூலக்கூறுகளாலும், காற்று மண்டலத்திலுள்ள துகள்களாலும் அதிகமாகச் சிதறாமல் நெடுந்தொலைவு வரை ஊடுருவுந் தன்மையுள்ளவை. ஆகையால் தொலைவிலுள்ள பொருள்களையும், மென்பனி மூடியுள்ள பொருள்களையும் தெளிவாகப் படம் பிடிக்க இக்கதிர்கள் பயனாகின்றன. வானிலிருந்து படம் எடுக்கவும் இம் முறை பயன்படுசிறது. அகச்சிவப்பு ஒளியானது சாதாரண ஒளியைவிட ஊடுருவும் தன்மை மிக்கதா யிருப்பதால் உடலிலுள்ள கோளாறுகளையும் எந்திர உறுப்புக்களில் விளையும் பழுதுகளையும் ஆராயவும், கள்ளக் கையெழுத்து முதலியவற்றைக் கண்டறியவும் பயன்படுகிறது.
பல பொருள்கள் அகச் சிவப்புக் கதிர்களை முழுவதும் உறிஞ்சிச் சூடேறுகின்றன. ஆகையால் இக்கதிர்களைக்கொண்டு பொருள்களைச் சீராகவும் எளிதிலும் சூடேற்றலாம். அதனால் சாயங்களை உலர்த்த இம் முறை பயன்படுகிறது. மருத்துவத்தில் வாதம் முதலிய நோய்களைக் குணப்படுத்தவும் இம்முறை வழங்குகிறது.
பொருள்களின் மூலக்கூறு. நிறமாலயின் (பார்க்க: நிறமாலையியல்). வரைகள் பெரும்பாலும் அகச்சிவப்புப் பகுதியில் இருக்கும். ஆகையால் இவற்றை ஆராய்ந்து மூலக்கூறுகளின் அமைப்பை அறிய முடிகிறது.