கலைக்களஞ்சியம்/அக்கீன்
Appearance
அக்கீன் (Achene) என்பது ஒரே விதையுள்ள வெடிக்காத உலர் கனி. விதை வெளியே வருவதற்கு இந்தக்கனி இப்படித்தான் வெடிக்கும் என்னும் நியதியில்லை. இதைச் சாதாரணமாக விதையென்றே சொல்லிவிடுகிறோம். இது சூரியகாந்திக் கனிபோல் மழமழ வென்றிருக்கலாம். இதில் மூக்குத்திப் பூண்டு முதலியவற்றிற்போல் காற்றில் பற்ந்து செல்வதற்குப் பாரஷூட்போல உதவும் மயிர்க்குச்சம் (Pappus) இருக்கிறது. சிலவற்றில் தகடுபோன்ற மெல்லிய பாகங்கள் இறக்கைபோல நீட்டிகொண்டிருக்கின்றன. அப்படியிருக்கும் கனி சமாரா (Samara) எனப்படும். மற்றும் சிலவற்றில் கூரிய கெட்டியான முட்கள் இருக்கலாம். இவை பிராணிகளின் காலில்,தோலில் அல்லது மயிரில் குத்திக்கொள்ளும். இந்த விதங்களில் அக்கீன் பலவிடங்களுக்குப் பரவுகின்றது.