கலைக்களஞ்சியம்/அணி
அணி : கருத்துக்கு நயமும் செவிக்கு இனிமையும் தந்து செய்யுளைச் சொல்லாலும் பொருளாலும் அழகுபடுத்துவது அணி. இவ்வணி பற்றிய நுட்பங்களை விதிப்படுத்தி வகுத்துக் கூறுவது அணியிலக்கணம். தமிழிலக்கணத்தை எழுத்தும் சொல்லும் பொருளும் என மூன்றாகவே கூறுகிறது தொல்காப்பியம். அதற்குப் பல நூற்றாண்டுகளின்பின் யாப்புத் தனியே பிரிக்கப்பட்டுத் தமிழ் இலக்கணம் நால்வகையாய் நடந்தது. எட்டாம் நூற்றாண்டிற்குப் பிறகு, அணியிலக்கணம் பிரியவே, ஐந்திலக்கணம் என்ற வழக்கு உண்டாயிற்று.
ஒன்றைப்பற்றி உள்ளதை உள்ளபடி அழகாய்ச் சொல்லுவது தன்மையணி. அதை வேறுபொருளோடு ஒப்பிட்டுச் சொல்லுவது உவமையணி. வேறு பொருளோடு இணைத்து இரண்டும் ஒன்றே என்று முடிப்பது உருவகம். இவ்வாறு அணிகள் நூற்றுக்கணக்கில் விரிகின்றன.
உவமையிலிருந்துதான் எல்லா அணிகளும் பிறக்கின்றன என்பது தமிழாசிரியர் எல்லார்க்கும் வட நூலார்க்கும் உடன்பாடு. இக்கருத்தைக் "காப்பிய அரங்கில் உவமை என்ற ஒரே நாடக மகள் புதுப்புதுக் கோலங்கொண்டு, புலவர் இதயம் மகிழ்ச்சி பூப்ப நடிக் கிறாள்" என்று அழகுறக் கூறியிருக்கின்றனர்.
தொல்காப்பியர் ஒரு தனித்த இயலில் உவமையைப் பற்றி விரிவாகக் கூறுகிறார். ஆனால் அணி என்ற பெயராலோ அல்லது பிற்காலத்தார் கூறிய பலப்பல அணிகளையோ அவர் குறிப்பிடவில்லை. தொல்காப்பியத்தை ஆராய்ந்த உரையாசிரியரும் பிறரும், "தொல்காப்பியர் உவமத்தை விரிவாகக் கூறினாலும், பொருளை விளக்க உவமையை ஒரு கருவியாகக் காட்டினாரே தவிர, அதைப் பிற்காலத்தார் கொண்டதுபோல், அணி என்ற சொல்லாலோ, அக்கருத்துப்படவோ எங்கும் குறிப்பிடவில்லை; எனவே, தொல்காப்பியர்க்கு அணி உடன்பாடன்று " என்பர்.
செய்யுளில் அமையும் அழகுக்கு அணி என்ற பெயரே பொருத்தமற்றது என்பர் தொல்காப்பிய உரையாசிரியர் பலர். அவருள் பேராசிரியர் இப்பெயரை வன்மையாக விரிவாக மறுக்கிறார். மற்றை இலக்கணங்கள் போல் அணியிலக்கணம் வரம்புக்கு அகப்பட்ட நிலையான தன்மையுள்ளதன்று என்பது இன்னொரு குறை. இதனைப் பின்வரும் செய்திகள் உறுதிப்படுத்தும் (1) பொருளணியின் வகையாக அணியியல் கூறிய அணிகள் 27; தண்டியலங்காரம் 35; மாறனலங்காரம் 64; குவலயானந்தம் 100; இவ்வாறு மேலும் பல அவரவர் கொள்கைத்திறத்திற் கேற்ப விரிகின்றன. (2) ஓர் அணிக்கு ஒருவர் இட்ட பெயரை வேறொருவர் இன்னொரு பெயரால் சொல்வது; (3) ஒருவர் இவை அணியல்ல என்று விட்டதை இன்னொருவர் அணியாகக் கூறுவது; (4) எழுத்து, சொல், பொருள் யாப்புப் பற்றிய சில இலக்கணங்களைச் சிலர் அணிகளாகக் கூறுவது. (5) ஓர் அணியின் வகையை இன்னொருவர் தனித்த ஓர் அணியாகக் கூறுவது முதலியவை.
அணியையும் சேர்த்து முதன் முதல் ஐந்திலக்கணம் கூறிய நூல் வீரசோழியம் (11ஆம் நூற்). பிந்தியவை இலக்கண விளக்கம், தொன்னூல் முத்துவீரியம் என்பன அணியை மட்டும் முதன் முதல் உணர்த்தியது. அணியியல்; பிறகு தண்டியலங்காரம், மாறனலங்காரம் முதலியன. சேனாவரையர் உரையால் அணியியல் என வேறாக ஒரு நூல் இருந்தமை தெரிகின்றது. ஆனால், அடியார்க்குநல்லார் மேற்கோளின்படி தண்டியலங்காரமே அணியியல் என்று வழங்கப்பட்டதோ என்று கருதவேண்டி யிருக்கிறது.
அணி, பொருளணி, சொல்லணி என இருவகை. சொல்லணி கவர்ச்சியற்ற செயற்கைத் தன்மையுள்ளது. சித்திரகவிகள், யமகம், திரிபு முதலியவை இதில் அடங்கும். பிற்காலத்தார் இடர்ப்பட்டேனும் இவற்றை இயற்றுவதே புலமைத்திறமெனக் கொண்டனர். வேறு எக்காலத்தவரும் இவற்றைப் பாராட்டவில்லை.
தண்டியலங்காரம் வடமொழிக் காவியாதரிசம் என்னும் நூலின் மொழிபெயர்ப்பென்பர். திருக்குருகைப் பெருமாள் கவிராயர் இயற்றிய மாறனலங்காரம் மொழி பெயர்ப்பன்று; ஆசிரியரால் தமிழில் தனியே எழுதப்பட்டது. பார்க்க: அலங்கார சாஸ்திரம். அ. கி.