உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/அணுசக்தி

விக்கிமூலம் இலிருந்து

அணுசக்தி : ஐன்ஸ்டைன் வெளியிட்ட எளிய சமன்பாடு ஒன்று அணுவில் மறைந்திருக்கும் ஆற்றலைப் பெற அடிப்படையாக 50 ஆண்டுகளுக்கு முன் சார்புக்கொள்கை (Relativity) வாயிலாக அறியப்பட்ட இச் சமன்பாடு ஒருகாலத்தில் இரு ஜப்பானிய நகரங்களை நொடிப்பொழுதில் நிர்மூலமாக்க உதவும் என அவரே எதிர்பார்த்திருக்க முடியாது. பொருளும், சக்தியும் அடிப்படையான தொடர்புள்ளவை என்றும். இவற்றுள் ஒன்று மற்றொன்றாக மாறும் தன்மையது என்றும் E=mc2 என்ற இச்சமன்பாடு குறிக்கிறது. E என்பது சக்தி —எர்குகள் அல்லது அடிப்பவுண்டல்களில் குறிப்பிடப் படும் ; m என்பது நிறை-கிராம்கள் அல்லது ராத்தல்களில் குறிப்பிடப்படும். c என்பது ஒளியின் வேகம்; இது 3×10 10 செ.மீ.செக. அல்லது சுமார் 98 கோடி அடி/செக. இந்தச் சமன்பாட்டின்படி ஆற்றலைப் பெற ஒரு நிமிடத்தில் ஒரு பிடிமண்ணைச் சக்தியாக மாற்றும் உலையை அமைக்க முடிந்தால் அதிலிருந்து சுமார் பதினாயிரம்கோடி குதிரைத்திறன் சக்தியைப்பெறலாம். இது தற்சமயம் இந்தியாவில் எல்லாவகையாகவும் பெறப்படும் மொத்த மின்சார சக்தியின் அளவைக் காட்டிலும் பதினாயிரம் மடங்குக்குமேல் அதிகம். சிறிதளவே உள்ள பொருளிலிருந்தும் எவ்வளவு அதிகமான ஆற்றலைப் பெறலாம் என்பது இதிலிருந்து தெளிவாகும்.

ஆனால் இவ்வகையில் எப்பொருளையும் சக்தியாக மாற்ற நடைமுறையில் இதுவரை முடியவில்லை. யுரேனியத்தை மட்டும் சக்தியாக மாற்ற முடிந்துள்ளது. இதிலும் 1%க்குக் குறைந்த நிறைதான் யுரேனியத்தில் வினையுள்ளதாக அமைந்திருக்கிறது. அதிலும் ஆயிரத்தில் ஒரு பங்கிற்கும் குறைந்த நிறை மட்டுமே ஆற்றலாக மாறி ஹிரோஷிமாவைப் போன்ற பெரு நகரத்தை அடியோடு அழிக்கப் போதுமானதாக உள்ளது.

தனிமம் : உலகிலுள்ள எல்லாப் பொருள்களையும் ரசாயன முறைகளால் 92 அடிப்படைப் பொருள்களாகப் பிரிக்கலாம். இவை தனிமங்கள் எனப்படும். இவை வெவ்வேறு வகையிலும், வெவ்வேறு விகிதங்களிலும் கூடிப் பலவேறு பொருள்களையும் ஆக்குகின்றன. ஹைடிரஜன், ஆக்சிஜன் என்ற இரு தனிமங்களும் பருமனளவில் 2:1 என்ற விகிதத்தில் கூடி நீர் என்ற கூட்டை அளிக்கும். கார்பன், நைட்ரஜன், கந்தகம், அலுமினியம், செம்பு, காரீயம், வெள்ளி, தங்கம், ரசம், யுரேனியம் போன்றவை அனைத்தும் தனிமங்கள்.

அணு : ஒரு தனிமத்தைச் சிறு பகுதிகளாகப் பிரித்துக் கொண்டே வந்தால் கடைசியாக அதை மேலும் பகுத்தால் அது தனிமமாக இராது என்னும் நீச நிலையிலுள்ள துகள் கிடைக்கும். அதுவே அணு (த.க) எனப்படும். இது மேலும் பிரிக்கமுடியாத துகளென ஆதியில் கருதப்பட்டது. ஆனால் இந்நூற்றாண்டில் நிகழ்ந்துள்ள பௌதிக வளர்ச்சியின் விளைவாக அணு சூரிய மண்டலத்தையொத்த அமைப்புள்ளது எனத் தெளிவாகியுள்ளது. இதன் மையத்தில் உட்கரு என்ற பகுதியும், அதைச் சுற்றிலும் எலெக்ட்ரான் என் னும் துகள்களும் உள்ளன. எலெக்ட்ரான் நிறையற்ற துகள் எனக் கூறுமளவு இலேசானது. இது எதிர் மின்சாரத் தன்மையுள்ளது. இதன் ஏற்றம்-1 எனக் கொள்ளப்பட்டிருக்கிறது. அணுவின் நிறை முழுதும் அதன் உட்கருவில் செறிந்துள்ளது. இது நேர்மின் னேற்றமுள்ளது. இவ்வேற்றம் உட்கருவின் நிறையை யொட்டி அதிகமாகும். ஹைடிரஜன் உட்கருவின் ஏற்றம் + 1 என்றும், நிறை 1 என்றும் குறிக்கப்படுகிறது. இந்த உட்கரு புரோட்டான் என்றும் அழைக்கப்படுகின்றது. இது-1 ஏற்றமுள்ள ஒரு எலெக்ட்ரானால் சூழப்பட்டிருக்கும். உட்கருவின் நேர்மின்னேற்றம் தனிமங்களின் ஆவர்த்த அமைப்பில் (Periodic Arrangement) அதன் வரிசை எண்ணிற்குச் சமம். ஆகவே ஆவர்த்த அமைப்பில் இரண்டாவதான ஹீலியத்தின் கருவின் ஏற்றம் + 2. இதைச் சுற்றிலும் 2 எலெக்ட்ரான்கள் இருக்கும். ஆனால் ஹீவியத்தின் அணுநிறை (அதாவது அதன் உட்கருவின் நிறை) ஹைடிரஜன் உட்கருவின் நிறையைப்போல் 4 மடங்குள்ளது. இதன் உட்கருவில் இரு புரோட்டான்கள் மட்டுமே இருந்தால் இதன் நிறை 2 அலகுகளே இருக்கவேண்டும். மிகுதியாக உள்ள இரு அலகுகள் நிறையை விளக்க உட்கருவில் புரோட்டான்களைத்தவிர நியூட்ரான்கள் என்னும் வேறொரு வகைத் துகள்களும் உள்ளன எனக் கொள்ளப்படுகிறது. ஒரு நியூட்ரானின் நிறை புரோட்டானின் நிறைக்குச் சமம். ஆனால் அது மின்னேற்றமற்றது. ஹீலியக் கருவில் 2 புரோட்டான்களும் 2 நியூட்ரான்களும் உள்ளன என்று கொண்டால், அதன் நிறையையும் மின்னேற்றத்தையும் சரியாகக் குறிக்கலாம். யுரேனியம் 92 வது தனிமம். அதனுடைய கரு 92 அலகுகள் மின்னேற்றம் கொண்டது. இந்த ஏற்றத்தை ஈடுசெய்ய அதன் உட்கருவில் 92 புரோட்டான்கள் இகுக்கவேண்டும். ஆனால் அதன் அணுநிறை 238. ஆகையால் அதில் 92 புரோட்டான்களைத் தவிர 146 (23892) நியூட்ரான்களும் இருக்கவேண்டும். ஆகவே யுரேனியம் அணுவில் 92 புரோட்டான்களும் 146 நியூட்ரான்களும் சேர்ந்திருக்கவேண்டும். அக்கருவைச் சுற்றி 92 எலெக்ட்ரான்கள் கொண்ட தொகுதியும் சுழல வேண்டும்.

ஐசோடோப்புகள் (Isotopes) : மேற்கூறிய அணு அமைப்புக் கொள்கை வேறொரு கருத்திற்கும் இடந்தருகிறது. ஓர் அணு 92 புரோட்டன்களையும், 143 நியூட்ரான்களையும் மட்டும் உடையதாகக் கொள்வோம். அதன் உட்கருவின் ஏற்றம் 92க்குச் சமம். ஆகையால் இதுவும் யுரேனியக் கருவே. இதைச் சுற்றி 92 எலெக்ட்ரான்கள் இருக்கவேண்டும். அணுநிறை மட்டும் வேறுபட்டு 238 க்குப் பதிலாக 235 (92+143) ஆக இருக்கின்றது. இத்தகைய அணுக்களும் நடைமுறையில் உண்டு. இதேபோல் வேறு தனிமங்களின் அணுக்களும் வேறான அணுநிறைகளுடன் இருக்கக் காண்கிறோம். இத்தகைய அணுக்கள் ஐசோடோப்புகள் (த.க.) எனப்படும். ஒரு தனிமத்தின் ரசாயன இயல்புகள் அதன் அணுவைச் சுற்றிவரும் எலெக்ட்ரான்களைப் பொறுத்திருக்கும். அதனால் ஒரு தனிமத்தின் வெவ்வேறு ஐசோடோப்புகள் ஒரே ரசாயன இயல்பு கொண்டிருக்கும். ஆகையால் ரசாயன முறையால்

இவற்றைப் பிரித்தறிய இயலாது.

யுரேனியத்தில் 235, 238 என்ற இரு அணுநிறைகள் கொண்ட ஐசோடோப்புகள் உள்ளன, என்றோம். இவற்றுள் முதலாவது மொத்த நிறையில் 1/140 பங்கே உள்ளது. இந்த U285 ஐசோடோப்பே அணுவாற்றலை வெளிவிடும் விளைவில் உதவுகிறது.

கதிரியக்கம் : ஓர் அணுவின் நிறை அதிகமானால் அதிலுள்ள புரோட்டான்கள், நியூட்ரான்கள் ஆகியவற்றின் எண்ணிக்கை அதிகமாகி அது சிக்கலானதாகும். புரோட்டான்கள் நேர்மின்னேற்றம் கொண்டவை. ஆகையால் அவை ஒன்றையொன்று விலக்க முயலும். இத்தகைய புரோட்டான்கள் ஓர் உட்கருவில் அதிகமாக இருந்தால் விலக்கமும் அதிகமாகி உட்கரு நிலையற்றதாகும். இது 84-வது தனிமமான போலோனியத்திற்குப் பின்வரும் தனிமங்களின் உட்கருக்களில் அதிகமாவதால் அவை தாமாகச் சிதையத் தொடங்குகின்றன. இப்போது உட்கருவில் ஒரு பகுதி பிரிந்து வெளியேறும். இவ்வாறு வெளிவரும் பகுதி புரோட்டானோ, நியூட்ரானோ அல்லாமல் இரு புரோட்டான்களையும், இரு நியூட்ரான்களையும் கொண்ட ஹீலியம் உட்கருவாக விருக்கின்றது. இதை ஆல்பாத் துகள் (Alpha particle) என்றும் சொல்லுவார்கள். தனிப்புரோட்டான்களையும், நியூட்ரான்களையும் விட இச்சேர்க்கை நிலையானதால் உட்கருவின் பகுதி இவ்வடிவில் வெளிவருகிறது. சில சமயங்களில் இன்னொரு விளைவும் நிகழ்வதுண்டு. ஒரு நியூட்ரான் புரோட்டா னாகவும், எலெக்ட்ரானாகவும் மாறுகிறது. புரோட்டான் உள்ளிருக்க எலெக்ட்ரான் மட்டுமே வெளிவருகிறது. அதை பீட்டாத் துகள் (Beta particle) என்பார்கள். இவற்றோடு சிலசமயங்களில் காமாக் கதிர்கள் (Gamma rays) என்ற ஊடுருவுந் தன்மையுள்ள கதிர்ப்பும் வெளிவருவதுண்டு. ஓர் ஆல்பாத் துகள் வெளியேற்றத்தால் அணு 4 அலகுகள் நிறையையும், இரு அலகுகள் நேர்மின்னேற்றத்தையும் இழக்கும். நேர்மின்னேற்றத்தில் 2 குறைவதால் எஞ்சியுள்ள அணுவானது தன்மையில் மாறி ஆவர்த்த அட்டவணையில் 2 படிகள் பின்னே உள்ள வேறொரு தனிமத்தின் அணுவாக மாறும். பீட்டாத் துகள் வெளியேற்றத்தால் நிறை மாறுவதில்லை. ஆனால் புதிதாக உண்டான 1 புரோட்டான் கருவிலேயே தங்கிவிடுவதால் அந்தக் கருவின் நேர்மின்னேற்றத்தில் 1 கூடுகிறது. இதனால் அணு ஒரு படி முன்னுள்ள தனிமத்தின் அணுவாக மாறுகிறது. இவ்விதமாகக் கனமுள்ள கரு தானாகவே சிதைந்து வேறொரு கருவாக மாறுவதே கதிரியக்கம் (Radioactivity) என்று சொல்லப்படுகிறது. இத்தகைய இயக்கத்தை பெக்ரல் என்பவர் முதல் முதலில் கண்டார். பின்பு ரூதர்போர்டு விரிவாக ஆராய்ந்து விளக்கினார். இத்தகைய கதிரியக்கத்தில், சிதையும் கருவின் நிறை சிறிதளவு மறைந்து சக்தியாக மாறி ஒரு பகுதி வெளியேறும் துகள்களுக்கு வேகத்தை அளித்தும், மற்றொரு பகுதி எக்ஸ் கதிர்களைப்போன்ற கதிர்ப்பாக மாறியும் வெளிப்படுகின்றது. கனமான உட்கருக்கள் நிலையற்றுச் சிதைவதாலேயே இயற்கையில் 92 தனிமங்களுக்கு மேல் இல்லை என்பது இப்பொழுது தெளிவாகும்.

செயற்கைக் கதிரியக்கம் : இயற்கைக் கதிரியக்கம் தானாக நிகழ்வதே யன்றி நம் கட்டுப்பாட்டிற்குட்பட்டதன்று. ஆனால் நமது முயற்சியாலும் அணுமாற்றங்களை நிகழ்த்தலாம் என்று ரூதர்போர்டு பின்னர்ச் செய்த சில சோதனைகளால் தெளிவாகியது. அவர் ஆல்பாத் துகள்களை ஒரு தனிமத்திற்குள் செலுத்தி அதன் அணுக்களை நேரடியாகத் தாக்கி அதைச் சிதைத்தார். அணுவின் உட்கரு, ஆல்பாத் துகள் ஆகிய இரண்டுமே நேர்மின்னேற்றங் கொண்டவையாதலால் அவை ஒன்றையொன்று விலக்கும், ஆகையால் ஆல்பாத் துகளை மிக வேகமாகச் செலுத்தி, விலக்கத்தை மீறி அது உட்கருவை அடையுமாறு செய்யவேண்டும். இந்த விலக்கவிசை இலேசான தனிமங்களில் குறைவாக இருப்பதால் ஆல்பாத் துகள்களால் அவைகளை நேரடியாகத் தாக்கிச் சிதைக்க அதிகமான வாய்ப்பு உண்டு. இதனால்தான் விதியம், பெரிலியம், போரான் போன்ற இலேசான தனிமங்களை அணுமாற்ற விளைவுகளில் முதலில் பயன்படுத்தினார்கள். பிறகு பல வகைகளில் ஆல்பாத் துகள்களையும் புரோட்டான்களையும் வேகமாகச் செலுத்தி இவ்வாறு அணுக்கருக்களைச் சிதைக்கும் முறைகள் தோன்றின.

யுரேனியப் பிளவு : யுரேனியக் கருவின் நேர்மின்னேற்றம் அதிகம். தாக்கும் துகள்களுக்கும் அதற்கும் உள்ள விலக்கவிசையும் அதிகம். ஆகவே யுரேனியத்தில் இத்தகைய சிதைவை நிகழ்த்த இயலவில்லை. ஆகவே மின்னேற்றமற்ற நியூட்ரான்களால் கருமாற்றம் நிகழ்த்த. முயன்றார்கள். இப்பொழுது எதிரான

அணுப் பிளவு
உ. யுரேனியம்
நி. நியூட்ரான்
கி. கிரிப்டான் உட்கரு
பே. பேரியம் உட்கரு

விலக்கவிசைகள் இரா ; கவர்ச்சி விசை தொழிற்படவும் வழியுண்டு. இப்படியாக 1938-ல் ஹான், ஸ்ட்ராஸ்மான் என்ற இருஜெர்மானிய விஞ்ஞானிகள் யுரேனியத்தை நியூட்ரான்களைக் கொண்டு தாக்கி இதுவரை அறியாத விளைவு நிகழக் கண்டார்கள். யுரேனியம் சிதைந்து அதில் சிறு பகுதி பிரிந்து வெளியேறுவதற்குப் பதிலாக ஏறக்குறையச் சமமான இரு கூறுகளாகப்பிரிந்துவிட்டது. இவ்விளைவின்போது யுரேனிய அணுவில் சுமார் 1/1000 பங்கு மறைந்து ஆற்றலாக வெளிவந்தது. அந்த ஆற்றல் முன்னர் அறியப்பட்ட கருமாற்ற விளைவுகளின்போது தோன்றும் ஆற்றலைவிடப் பன்மடங்கு அதிகமாக இருந்தது. நகரங்களையே அழிக்கும் பேயாற்றலைப்பெறும் முறைகளைக் கண்டறிய இச்சோதனை வழிகாட்டியாக அமைந்தது.

தொடர்விளைவு (Chain reaction) மேற்கூறிய விளைவின்போது மெல்ல இயங்கும் நியூட்ரான்களே கருப்பிளவை நிகழ்த்துகின்றன என்றும், இயற்கை யுரேனியத்தில் சிறிதளவே உள்ள U285 என்னும் ஐசோடோப்பே இதில் ஈடுபடுகிறதென்றும் அறியப்பட்டது. ஒரு கரு பிளவுற்றால் சுமார் 200 மிலியன் எலெக்ட்ரான் வோல்ட் (மி.எ.வோ) சக்தி வெளிவரும். ஓர் எலெக்ட்ரான் ஒரு வோல்ட் மட்ட வேற்றுமைக்கு எதிராகச் செல்லும்போது செலவழியும் சக்தி ஓர் எலெக்ட்ரான் வோல்ட் ஆகும். ஒரு மிலியன் எலெக்ட்ரான் வோல்ட் என்னும் சக்தி எர்கில் சுமார் ஆறு லட்சத்தில் ஒரு பகுதிக்குச் சமம். ஒரு குன்றிமணியை 1 அங்குலம் நிலைக்குத்தாகத் தூக்கினால் சுமார் 400 எர்கு சக்தி செலவழியும். இதிலிருந்து எர்கு என்பது எவ்வளவு சிறிய சக்தி என்று தெரிந்துகொள்ளலாம். இந்த எர்கில் 6 லட்சத்தில் ஒரு பகுதிதான் ஒரு மிலியன் எலெக்ட்ரான் வோல்ட் என்பது. இத்தகைய சின்னஞ்சிறு அலகில் சுமார் 200 கொண்ட சிறிய சக்தியே ஒரு கருப்பிளவால் வெளிவருகின்றது. ஆகையால் இது எவ்வளவு குறைவு எனத் தெளிவாகும். ஆனால் கோடிக்கணக்கான அணுக்கள் ஒன்றன்பின் ஒன்றாக அநேகமாக ஏககாலத்தில் பிளவுற்றால் அதிகமான சக்தி வெளிப்பட முடியும். இந்த விளைவு இவ்வாறு தொடர்ந்து நிகழ்வதே தொடர் விளைவு எனப்படும். யுரேனியப் பிளவின்போது நிகழும் வேறொரு விளைவினால் இது சாத்தியமாகிறது. ஒரு கரு பிளவுறும்போது பல புது நியூட்ரான்கள் தோன்றுகின்றன. இவை வேறு U265 கருக்களை அடைந்து பிளவை நிகழ்த்தி விளைவு தொடர்ந்து நடக்கு மாறு செய்யலாம். தொடர்விளைவு நிகழ இவ்வாறு தோன்றும் துணை நியூட்ரான்களே காரணமாகின்றன.

மேற்கூறிய தொடர்விளைவு கொள்கை வாயிலாகச் சாத்தியமானாலும் நடைமுறையில் இதை நிகழ்த்துவதில் பல தொல்லைகள் உள்ளன. ஒரு யுரேனிய அணுப் பிளவால் வெளிவரும் நியூட்ரான் மற்றொரு அணுக்கருவைத் தாக்குவது என்பது மிகவும் அருமை. ஏனெனில் யுரேனியத்தை யொத்த கனமான திண்மத்திலும் அணுக்கருக்களிடையே உள்ள தொலைவு மிக அதிகமாகும். இத்தொலைவு யுரேனிய அணுக்கருவின் விட்டத்தைப்போல் லட்சம் மடங்குள்ளது. ஒரு யுரேனியக் கருவை ஒரு மாம்பழம் எனக் கொண்டால் இரு கருக்களின் இடையே உள்ள தொலைவு சுமார் ஐந்து மைல்கள் அளவில் இருக்கும். ஐந்துமைல்களுக்கு ஒன்றாக உள்ள மாம்பழங்களின் இடையே ஒருவிதக் குறியுமின்றி நாம் ஒரு கல்லை விட்டெறிந்தால் அக்கல் மாம்பழங்களில் ஒன்றைத் தாக்க எவ்வளவு வாய்ப்புள்ளது என்று கூறத் தேவையில்லை. யுரேனியத்தின் இடையே வீசப்படும் ஒரு நியூட்ரான் மற்றொரு கருவைத் தாக்கவும் இவ்வளவு குறைவான வாய்ப்புத்தான் உண்டு. ஆகையால் பிளவின்போது வெளிப்படும் நியூட்ரான்களில் மிகச் சிறு பகுதியே கருக்களைத் தாக்கித் தொடர்விளைவில் ஈடுபடும். யுரேனியத்தின் அளவு அதிகமானால் தாக்கப்படும் கருக்களின் எண்ணிக்கையும் ஒரளவு அதிகமாகும்.

இதில் இன்னொரு தொல்லையும் உள்ளது. பிளவில் ஈடுபடும் U235 கருக்கள் மொத்த அணுக்களில் 1/140 பங்கே உள்ளன. அதிகமாக உள்ள U238 கருக்களை நியூட்ரகள் தாக்கினால் பிளவு நிகழ்வதில்லை.

தொடர் விளைவு k-1

இதனாலும் நியூட்ரான்கள் பிளவு நிகழ்த்தும் வாய்ப்புக் குறைகிறது.

மேலும் யுரேனியத்துடன் வேறு பொருள்கள் அசுத்தங்களாகக் கலந்திருந்தால் அசுத்தப் பொருள்களின் கருக்களை அடையும் நியூட்ரான்களும் பிளவை நிகழ்த்தாது வீணாகிவிடும்.

பெருக்கக் காரணி (Multiplication Factor) : தொடர்விளைவு தடையின்றி நிகழப் பிளவினால் தோன்றும் ஒவ்வொரு நியூட்ரானும் இன்னொரு பிளவை நிகழ்த்தவேண்டு மென்பதில்லை. ஒரு கரு பிளவுறும்போது தோன்றும் நியூட்ரான்களில் சராசரியாக ஒன்றாவது இன்னொரு பிளவை நிகழ்த்தினாலே போதுமானது. இந்த நிபந்தனை பெருக்கக் காரணி என்ற எண்ணினால் குறிப்பிடப்படும். ஒரு தலைமுறையில் கருக்களைத் தாக்கும் நியூட்ரான்களுக்கும், அதன் முன் தலைமுறையில் இருந்த நியூட்ரான்களுக்கும் உள்ள விகிதம் என இதை வரையறுக்கலாம். இந்த விகிதத்தை

தொடர் விளைவு k > 1

k என்று குறிப்பர். k ஒன்றிற்குச் சமமாயின் அல்லது ஒன்றைவிடச் சிறிதளவு அதிகமாக விருந்தால் ஒவ்வொரு தலைமுறையிலும் சமமான அல்லது அதிகமான நியூட்ரான்கள் தோன்றி விளைவு தொடர்ந்து நிகழும். அது ஒன்றைவிடக் குறைவாயின் சில தலைமுறைகளுக்குள் நியூட்ரான்கள் மறைந்து விளைவு விரைவில் நின்றுவிடும். பெருக்கக் காரணி ஒன்றைவிடச் சிறிதே அதிகமாயினும் ஒவ்வொரு தலைமுறையிலும் தோன்றும் நியூட்ரான்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே வந்து விளைவின் வீதம் அதிகமாகும்.

தொடர்விளைவு ஏற்படுத்த வேண்டுமென்றால் இந்தப் பெருக்கக் காரணியை ஒன்றைவிட அதிகமாக்க வேண்டும். யுரேனியம் மிகத் தூயதாகவும், வினையுள்ள ஐசோடோப்பான U235 அதிகமாகக் கொண்டதாகவும் இருந்தால் பெருக்கக் காரணி அதிகரிக்கும். யுரேனியத்தின் அளவு அதிகரித்தாலும் இக்காரணி அதிகமாகும். ரசாயன முறைகளால் யுரேனியத்தைத் தூயதாக்கலாம். 140—ல் 1 பகுதியான U235 ஐசோடோப்பைப் பிரித்தெடுத்து உபயோகித்தாலும் இக் காரணி அதிகமாகும். U235 U238 இவ்விரு ஐசோடாப்புகளும் ஒரே ரசாயன இயல்பு கொண்டுள்ளதாலும், ஏறக்குறைய ஒரே நிறையுள்ளதாலும், ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரித்தெடுப்பது மிகவும் கடினம். ஆயினும் மின்காந்த முறை, வாயு வியாபன முறை, வெப்ப வியாபன முறை போன்ற வெவ்வேறு முறைகளைக் கையாண்டு, U235 ஐசோடோப்பை அரும்பாடுபட்டு ஏராளமான பணச் செலவில் ஒருவாறு வெற்றிகரமாகப் பிரித்தெடுக்கலாம். இப்படிப் பிரித்தெடுத்த தூய்மையான U235 ஐசோடோப்பும் ஓர் அளவிற்கும் அதிகமானால் தான் k என்னும் பெருக்கக் காரணி ஒன்றைவிட அதிகமாகும். காரணி 1 ஆவதற்குப் பொருள் குறிப்பிட்டதோர் அளவைவிடக் குறைவாக இருத்தலாகாது. இது அவதி அளவு (Critical size) எனப்படும். அவதி அளவைவிடச் சிறிது அதிகமான அளவைக் கையாண்டால் காரணி ஒன்றைவிட அதிகமாகித் தொடர் விளைவு நிகழும்.

யுரேனியப் பீளவினால் தோன்றும் நியூட்ரான்கள் அதிவேகமாகச் செல்லும். அந்த வேகத்தைக் குறைத்தால் மற்றக் கருக்களைத் தாக்கி அவற்றை எளிதில் பிளக்குமாறு செய்யலாம். அப்படி வேகத்தைத் தணிக்கப் பென்சில்கரி, கனநீர் முதலிய பொருள்கள் உதவுகின்றன. கனநீர் என்பது கனஹைடிரஜனும் ஆக்சிஜனும் சேர்ந்து உண்டாவது. கனஹைடிரஜன் என்பது ஹைடிரஜனின் ஒரு ஐசோடோப்பு ;+ 1 மின்னேற்றமும் 2 அலகுகள் நிறையும் உள்ளது. இப்படி நியூட்ரான்களின் வேகத்தைத் தணிக்கும் பொருள்கள் தணிப்பான்கள் (Moderators) எனப்படும்.

அணு அடுக்கு (Atomic Pile): அணு அடுக்கில், பிளவுறும் தன்மையுள்ள U235 ஐசோடோப்பும், பிளவு விளைவின்போது வெளிவரும் வேகமான நியூட்ரானின் வேகத்தைத் தணித்துக் கருக்களைப் பிளக்க உதவும் தணிப்பானும் இருக்கும். ஒரு பெரிய பென்சில்கரிக் கோளத்தில் பல கால்வாய்களும், தொளைகளும் இருக்கும். அலுமினிய உறைகளுக்குள் பிளவுறும் பொருளை வைத்து இத் தொளைகளுக்குள் செருகி விடுவார்கள். இத்தகைய அடுக்கில் நிகழும் கருப்பிளவு விளைவு வரம்பு மீறிப் போகாது கட்டுப்படுத்த ஆங்காங்குக் கடமியம் குச்சிகளும் செருகப்படும். கடமியம் நியூட்ரான்களை உறிஞ்சும் தன்மை வாய்ந்தது. ஆகையால் இக்குச்சிகளை உள்ளே தள்ளியும், வெளியே இழுத்தும் பிளவை நிகழ்த்தும் நியூட்ரான்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தி விளைவு தேவையான வீதத்தில் நிகழுமாறு செய்யலாம். விளைவின்போது ஏராளமான வெப்பம் தோன்றும். இதை அகற்ற அலுமினிய உறைகளுக்குள் குளிர்ந்த நீரைச் செலுத்தி அது அடுக்கைச் சுற்றி வருமாறு செய்வார்கள். இவ்வாறு தகுந்த கட்டுப்பாட்டுடன் உட்கருப் பிளவு விளைவை நிகழ்த்த உதவும் சாதனம் அணு அடுக்கு. இது அணுப் பிளவினால் தோன்றும் சக்தியைப் பயனுள்ள வடிவில் மாற்றவோ, கதிரியக்கப் பண்புகொண்ட ஐசோடோப்புகளைத் தயாரிக்கவோ, உட்கரு வினைகளைத் தூண்டவோ பயன்படலாம். மெல்லச் செல்லும் U238 கருக்களைத் தாக்கினால் அவை அந்த நியூட்ரான்களை உறிஞ்சி U239 என்ற ஐசோடோப்பாக மாறுகின்றன. இது கதிரியக்கப்பண்பு கொண்டது. ஆகையால் இது மிக விரைவில் மாறி அணு நிறை 239-ம், அணுவெண் 94-ம் கொண்ட புளூட்டோனியம் (Plutonium) என்ற புதுத் தனிமமாக மாறுகிறது. இது U235 ஐசோடோப்பைப் போலவே நியூட்ரான்களால் பிளவுறும் தன்மையுள்ளது. ஆகையால் இதை அணுக்குண்டில் பயன்படுத்தலாம். இயற்கை யுரேனியத்திலிருந்து புளூட்டோனியத்தைப் பெறவே அணு அடுக்கு அதிகமாகப் பயன்படுகிறது.

புளூட்டோனியத்தையும், U235 ஐசோடோப்பையும் தவிர வேறொரு பொருளையும் அணு அடுக்கில் பயன்படுத்தலாம். நம் நாட்டில் திருவிதாங்கூர்க் கடற்கரை மணலில் தோரியம் என்னும் தனிமம் கிடைக்கிறது. இதை அடுக்கில் வைத்து, மெல்லச் செல்லும் நியூட்ரான்களால் தாக்கினால் அது நியூட்ரான்களை ஏற்று வேறொரு ஐசோடோப்பாக மாறும். இது கதிரியக்க மாறுதல்கள் அடைந்து கடைசியாக U232 என்னும் ஐசோடோப்பாகும். இது பிளவுறும் பொருளாகையால் அணுகுண்டில் பயனாக ஏற்றது. இதைத் தயாரிக்கவும் அணு அடுக்கு பயன்படும்.

மேற்கூறிய அடுக்கில் மெதுவாகச் செல்லும் நியூட்ரான்கள் பயன்படுகின்றன. இதைத்தவிர வேகமான நியூட்ரான்களைப் பயன்படுத்தும் சாதனம் ஒன்றும் அமைக்கலாம். இதில் தணிப்பானே இருக்காது. இது அமைப்பில் ஏறக்குறைய அணுகுண்டையே ஒத்தது. முதல்வகை அடுக்கைவிட இதை மிகச் சிறிதாக அமைக்கலாம். அணுசக்திப் படைக்கல ஆராய்ச்சிகளுக்கு இது இன்றியமையாத சாதனமாக விளங்குகிறது.

அணு அடுக்கு
1 - கடமியம் குச்சிகள்

அணு அடுக்குகளில் ஏராளமான கதிரியக்கக் கதிர்ப்புக்கள் வெளிவருவதால் தக்கபடி உறையிட்டு அவை வெளியேறாது தடுத்தல் அவசியமாகிறது: தடித்த காரியச் சவர்களும், பல அடி தடிப்புள்ள கான்கிரீட்டுச் சுவர்களும் அடுக்கிற்குத் திரைகளாகப் பயன்படுகின்றன.

அணுகுண்டு: அணு அடுக்கில் கருப்பிளவு கட்டுப்பாட்டுடன் நிகழ்கிறது; அணுகுண்டிலோ இது கட்டுப்பாடின்றி ஒரேயடியாய் நிகழ்ந்து பிரம்மாண்டமான ஆற்றல் நொடிப்பொழுதில் வெளிவருகிறது. அணுகுண்டின் அமைப்புத் தத்துவத்தை இப்பொழுது அறிதல் எளிது. நியூட்ரான்களால் பிளவுறும் பொருள் களான U235 புளூட்டோனியம் ஆகியவற்றில் ஒன்று இதில் வெடிமருந்தாகப் பயன்படுகிறது. இத்தகைய பொருளொன்றைப் போதிய அளவு ஒன்றுசேர்த்து வைத்தால் தற்செயலாக அதை அடையும் நியூட்ரான்கள் தொடர்விளைவைத் தொடங்கும். பொருளின் அளவு அவதியளவைவிட அதிகமாக இருந்தால் தொடர்விளைவு தடையின்றி நிகழ்ந்து மிக விரைவில் பொருளிற் பெரும் பகுதி பிளவுற்று, அளப்பரிய ஆற்றல் தோன்றும், குண்டின் அவதி அளவு சுமார் 20 ராத்தல் என ஒருவாறு ஊகிக்கலாம். அணுகுண்டில் இத்தொடர்விளைவு தொடங்கி ஆற்றல் வெளிவர ஆரம்பித்ததும் அதிலுள்ள பொருள் விரிவடையும். இதனால் நியூட்ரான்கள் பொருளின் கருக்களைத் தாக்குவது கடினமாகிறது. ஆகையால் தொடர்விளைவின் வேகம் குறைந்து வெடியின் தீவிரம் தணியும். இவ்வாறு நிகழாமல் இருக்கப் பொருள் அதிகமாக விரிவடையுமுன்னரே தொடர்விளைவின் பெரும்பகுதி முடியுமாறு செய்ய வேண்டும். இவ்வாறு செய்தாலும் அணுப் பிளவினால் தோன்றும் மொத்த ஆற்றலில் சுமார் 10 சதவிகிதமே குண்டின் ஆற்றலாக வெளிவருகிறது என மதிப்பிடப்பட்டுள்ளது.

பொருளின் அளவு அவதி நிறையைவிட அதிகமானால் தொடர்விளைவு தொடங்கி அது வெடித்துவிடும். ஆகையால் அதை இரண்டு அல்லது பல பகுதிகளாகப் பிரித்து வைத்திருப்பார்கள். ஒவ்வொரு பகுதியும் அவதி அளவைவிடக் குறைவாக இருக்குமாதலால் தொடர் விளைவு நடைபெறாது. தேவையானபோது தக்க சாதனத்தினால் அவற்றை வெகுவிரைவாக ஒன்று சேர்ப்பார்கள். இவ்விதம் ஒன்று சேர்த்த பொருளின் அளவு அவதி அளவைவிட அதிகமாவதால் தொடர்விளைவு தொடங்கி அணுகுண்டு வெடிக்கும். ஒரு பகுதியை இன்னொரு பகுதியை நோக்கிச் சுட்டு அவ்விரண்டும் ஒன்று சேருமாறு செய்து அணுகுண்டை வேண்டியபோது வெடிக்கச் செய்வது பொதுவாகக் கையாளப்படும் முறையாகும்.

குண்டின் சக்தி வெளிவரத் தொடங்கியதும் தோன்றும் வெப்பத்தால் அதன் பல பகுதிகள். இமைப் பொழுதில் ஆவியாகிவிடுகின்றன. காற்றும் சூடேறுகிறது. சூடேறிய காற்றுப்படலம் பெரிய தீக்கோளம்போல் தோன்றுகிறது. இத் தீக்கோளம் பெருகி மேலே செல்கிறது. மேலெழும் காற்றானது தூசு, புகை முதலியவற்றைத் தன்னுடன் கொண்டு செல்ல முயலும். இதனால் இவை ஒரு வால்போல் தீக்கோளத்தின் கீழ்த் தென்படும். குண்டு வெடிக்கும்போது உண்டாகும் கதிரியக்கத்தால் காற்று மூலக்கூறுகள் அயானாகி ஊதா நிறத்துடன் ஒளிரும். மேலெழும் தீக்கோளம் பிறகு பக்கவாட்டில் அகன்று பெரிய நாய்க்குடை போல் தோன்றும்.

இதுவரை பயன்பட்டுவந்த படைக்கலங்களுள் அணுகுண்டே பெரு நஷ்டம் விளைவிக்கவல்லது. சாதாரண குண்டுகளையும் அணுகுண்டையும் ஒப்பிட்டால் நாசவேலையில் இதன் ஒப்பற்ற திறமை தெளிவாகும். ஜப்பானிய நகரங்களின் மேல் எறியப்பட்ட அணுகுண்டுகள் தீக்குண்டுகளினால் விளையும், உயிர்ச்சேத்தைப்போல் சுமார் 19 மடங்கு சேதத்தை விளைவித்தன. அதிர்ச்சியினால் ஓர் அணுகுண்டு விளைவிக்கும் சேதம் சுமார் 200 டன் நிறையுள்ள அதிர்ச்சி வெடிகுண்டுகளால் விளைவதற்கு ஒப்பானது. ஓர் அணுகுண்டிலிருந்து வெளியாகும் ஆற்றல் அனைத்தையும் பெற முடிந்தால் வலிமையான வெடிமருந்தான டி. என். டி. என்ற பொருளில் 20,000 டன் வெடிப்பதனாலுண்டாவதற்குச் சமமாகும்.

அணுகுண்டு பலவகைகளில் நாசத்தை விளைவிக்கிறது. வலிமையான அதிர்ச்சி அலைகளாலும், நொடிப் பொழுதில் தோன்றும் ஏராளமான வெப்பத்தாலும் வலிவான கதிர்ப்புக்களால் நேரும் பலவேறு தொல்லைகளாலும், இக்கதிரியக்கப் பொருள்கள் காற்றிலே பரவுவதால் நேரும் விளைவுகளாலும் இது நாசம் விளைவிக்கிறது. ஹிரோஷிமாவில் வீழ்ந்த குண்டு 7 ச. மைல் பரப்பை அடியோடு அழித்தது. மேடுபள்ளங்கள் நிறைந்த நாகசாகியில் சமார் 4 ச. மைல் பரப்பில்தான் சேதம் விளைந்தது; எனினும் இங்கு விளைந்த நாசம் இன்னும் கடுமையானது. போருக்குப்பின் ஆக்கப்பட்டிருக்கும் அணுகுண்டுகள் இன்னும் வலிவானவை என்று கருதப்படுகிறது. இத்தகைய குண்டுகளால் பெரு நகரங்களை எவ்வித முன்னறிவிப்புமின்றி நொடிப்பொழுதில் தரைமட்டமாக்கி விடமுடியும். வேறுவகைக் குண்டுகளுக்கு எதிராகப் பயன்படும் தற்காப்புச் சாதனங்கள் அணுகுண்டு வீச்சின்போது. அறவே பயனற்றவையாய்விடுகின்றன.

1946-ல் பசிபிக் சமுத்திரத்திலுள்ள பிக்கினி பவளத் திட்டில் கடலடியில் அணுகுண்டை வெடித்து இதன்

763 × 600

பிகினி அணுகுண்டு சோதனை
உதவி : அ. ஐ. நாடுகள் செய்தி நிலையம்

விளைவுகளை ஆராய்ந்தார்கள். இச்சோதனையின்போது

பலகோடிக் கணக்கான டன் நிறையுள்ள நீர் ஒரு பெரிய அர்த்தகோளம்போல் நுரைத்தெழுந்து பல்லாயிர அடி உயரம் சென்றது. அதிர்ச்சி அலை காற்றிலே பரவி அதை விரிவாக்கியது. இதனால் காற்றில் இருந்த நீராவி மிகப் பெரிய மேகமாகக் குளிர்ந்து ஒரு கும்மட்டம் போல் அந்த இடத்தின் மேல் கவிழ்ந்தது. சூடேறிப் பெருந் தூணைப்போல் ஒரு மைல் உயரம் சென்று அடைமழையாகக் கீழே கொட்டிற்று. கடலில் நூறடி உயரமுள்ள பேரலைகள் தோன்றிப் பலமைல் தொலைவு பரவின. நீரின் கதிரியக்கத் தன்மையினால் பல மாதங்கள்வரை அங்குப் பாதுகாப்பின்றிச் செல்வது ஆபத்தாக இருந்தது.

ஹைடிரஜன் குண்டு: சாதாரண அணுகுண்டைப் போல் பலமடங்கு ஆற்றலைத் தரும் அரக்கப் படைக்கலம் ஒன்றை அமைக்கும் திட்டம் 1950 ஜனவரியில் அமெரிக்காவில் தொடங்கியது. இப்போர்க்கலம் ஹைடிரஜன் குண்டு எனப்படும். யுரேனிய அணுகுண்டில் கனமான அணுக்களைப் பிளந்து ஆற்றல் வெளிப்படுத்தப்படுகிறது. இன்னொரு வகையிலும் அணு ஆற்றலை வெளிப்படுத்தலாம். ஹைடிரஜனது உட்கருக்களை இணைத்து ஒரு ஹீலியம் உட்கருவைப் பெறலாம். இப்போது மிக அதிகமான ஆற்றல் வெளியாகும். காரணம் ஹீலியம் கரு ஹைடிரஜன் கருக்களைவிட அதிக நிலையானது என்பதுதான். ஆனால் பல லட்சம் டிகிரி வெப்ப நிலையில்தான் இவ்விளைவு நேரும். இதனால் புவியில் இதை நிகழ்த்துவது கடினம். ஆனால் சூரியனிலும், நட்சத்திரங்களிலும் இந்த வெப்பநிலை இருப்பதால் அங்கு இவ்விளைவு இடையறாது நிகழ்ந்து ஏராளமான ஆற்றல் வெளிவருகிறது. சூரியனது வற்றாத ஆற்றலின் மர்மம் இதுவே. யுரேனியப் பிளவினால் உயர்ந்த வெப்பநிலையைப் பெற்று, அவ்வெப்பநிலையில் ஹைடிரஜன் -ஹீலியம் கருமாற்றத்தை நிகழ்த்தி, ஆற்றலைப்பெறத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இது எவ்வளவில் உள்ளது என அறிய இயலாது. இத்தகைய குண்டு சாதாரண அணுகுண்டைப்போல் சுமார் 100 லிருந்து 1000 மடங்குவரை ஆற்றலுள்ளதாக இருக்கும் என்று தெரிகிறது.

அணுசக்தியின் பயன்கள்: சமாதான காலத்தில் அணுசக்தியைப் பயன்படுத்தும் முறைகளுள் முதலாவது இதிலிருந்து பயனுள்ள வகையில் மின்சார ஆற்றலைப் பெறுவதே. அணு அடுக்கில் அணுப்பிளவை நிகழ்த்தும்போது தோன்றும் ஏராளமான வெப்பத்தைக்கொண்டு நீரை ஆவியாக்கி டர்பைன்களை ஓட்டி மின்சார சக்தியைப் பெறலாம். ஆனால் இதில் பல தொல்லைகள் உள்ளன. இவ்வாறு வெப்பத்தை வேறு வகை ஆற்றலாக மாற்ற நடைமுறையில் வழங்கும் எல்லா முறைகளிலும் ஆற்றலிற் பெரும்பகுதி விணாகிறது. ஆகையால் இம்முறை மற்ற முறைகளைவிட இலாபகரமாக இருக்குமென எதிர்பார்க்க முடியாது.

யுரேனியம் மிக அருமையான தனிமம். சக்தியைப் பெற இதை அதிகமாகப் பயன்படுத்தத் தொடங்கினால் இது இன்னும் கிடைத்தற்கரிதாய் விடும். இத்தொல்லையைத் தவிர்க்க பிரீடிங் (Breeding) என்னும் பெருக்க முறை பயன்படுகிறது. பிளவுறும் பொருளொன்றை அணு அடுக்கில் இட்டு, அதிலிருந்து ஆற்றலைப்பெறும்போது அதில் வேறொரு பொருள் சிறிதளவு அதிகமாகத் தோன்றி அதுவும் இவ்வாறு பயன்பட ஏற்றதானால் அதை அணுவாற்றலைப்பெறப் பயன்படுத்தலாம். இம்முறையில் பொருளைப் பெறுதல் பிரீடிங் எனப்படும். இம்முறை இலாபகரமானதுமாகும். யுரேனிய அடுக்கு வேலை செய்யும்போது புளூட்டோனியம் தோன்றுவது இதற்கொரு உதாரணமாகும்.

ஆனால் இம்முறைகளில் சக்தியைப் பெறும் தொழிற் சாலையை அமைக்க ஏராளமாகச் செலவாகும். இதில் வெளிப்படும் கதிர்ப்புக்களிலிருந்து தொழிலாளரைக் காப்பதும், இதில் தோன்றும் கதிரியக்க ஐசோடோப்புகளைத் தீங்கின்றி அகற்றுவதும் தொல்லைதரும் வேலைகளாகும். ஆனால் காலப்போக்கில் இத்தொல்லைகளைத் தவிர்க்க வழிகண்டுபிடிக்கப்படுமென்றும், வேறு வகையில் சக்தியைப்பெற இயலாத பிரதேசங்களிலாவது வருங்காலத்தில் அணுசக்தி ஆக்க நிலையங்கள் தோன்றும் என்றும் எதிர்பார்க்கலாம். ரெயில் எஞ்சின்களிலும், கப்பல்களிலும் இது பயன்படும் காலமும் வரலாம்.

ரஷ்யாவில் மலைகளைத் தகர்க்க அணுசக்தி பயன்பட்டதாக அறிகிறோம். இத்தகைய பெருவேலைகளுக்கு இது பயன்பட வழியுண்டு. நிரந்தரமாகப் பனிக்கட்டியால் மூடப்பெற்ற நிலப்பகுதிகளில் அணுசக்தியால் பனிக்கட்டியை அகற்றி அப்பிரதேசங்களிலுள்ள தாதுப்பொருட் செல்வத்தைப் பெறும் திட்டங்களும் நடைமுறையில் இயலக்கூடும்.

அணு அடுக்கில் தயாரிக்கப்படும் கதிரியக்க ஐசோடோப்புகள் தாவரவியல், விலங்கியல், மருத்துவம், தொழில்நுட்பம், ரசாயனம் போன்ற பல துறைகளில் இன்றியமையாச் சாதனங்களாக இப்போதே பயன்படுகின்றன. அணுசக்தி ஆக்கத்தால் உடனடியாக விளைந்துள்ள பெருநன்மை இப்பயன்களேயாம். பார்க்க: குறியிடுமுறை.

அணுகுண்டு ஆக்கத் திட்டம்: இரண்டாம் உலகப்போர் தொடங்குவதற்குச் சில மாதங்களுக்கு முன்னரே அமெரிக்காவிலுள்ள சில பெளதிக அறிஞர்கள் அணுவாற்றலைப் போரில் பயன்படுத்தும் முறைகளைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர். அவ்வாண்டு அமெரிக்க ஜனாதிபதியும் இதுபற்றிய தகவல்கள் அறிந்து, 1940 பிப்ரவரியில் இதுபற்றிய ஆராய்ச்சிகளுக்கு மானியம் அளித்தார். மிகச் சிறிய அளவில் தொடங்கிய இத்திட்டம் அணுகுண்டு உருவாகுமுன் 200 கோடி டாலர் செலவாகிய பெருந்திட்டமாக வளர்ந்தது. 1941 ஜூலையில் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் முதலாவது அணு அடுக்கு நிறுவப்பட்டது. இங்கு நடைபெற்ற சோதனைகளின் விளைவாகத் தொடர் விளைவு என்பது நடைமுறையில் இயலும் எனத் தெளிவாயிற்று. இதை நிகழ்த்தும் அடுக்கு 1942-ல் அமைக்கப்பெற்றது. 1943-ல் கிளின்டன், ஹான்போர்டு ஆகிய இரண்டிடங்களிலும் பெரிய அளவில் அணு அடுக்குகள் நிறுவப்பெற்று ஆக்கத் திட்டம் மிக விரைவாக முன்னேறியது. குண்டை ஆக்கும் வேலையின் கடைசிப் படிகளைக் கவனிக்க லாஸ் அலமாஸ் என்ற வனாந்தரத்தில் புது ஆராய்ச்சி நிலையம் நிறுவப் பெற்றது.

மனித வரலாற்றிலே முதலாவது அணுகுண்டு நியூ மெக்சிகோ பாலையில் 1945 ஜூலை 16-ல் வைகறையில் வெடிக்கப்பட்டது. சோதனையின் முடிவுகள் விஞ்ஞானிகள் எதிர்பார்த்ததைவிடத் திருப்திகரமாக இருக்கவே அதே ஆண்டு ஆகஸ்ட் 6-ல் ஹிரோஷிமாவின் மேலும், மூன்று நாட்களுக்குப்பின் நாகசாகியின் மேலும் அணுகுண்டுகள் எறியப்பட்டன.

போருக்குப்பின் நிகழ்ந்துள்ள வளர்ச்சி : போருக்குப் பின்னரும் அணுவாற்றல் கட்டுப்பாட்டுத் துறையில் பல நாடுகளில் மும்முரமான ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. அமெரிக்காவில் 1946-ல் பசிபிக் சமுத்திரத்திலுள்ள பிக்கினியில் கடலில் அணுகுண்டை வீசி 75 கப்பல்களை இலக்காக வைத்துச் சோதனை நடத்தப்பெற்றது. இச் சோதனையின்போது 10,000 விஞ்ஞானக் கருவிகளை வைத்து அளவீடுகள் செய்தனர். இதைத் தொடர்ந்து கடலடியில் குண்டை வெடிப்பித்து, அதன் விளைவுகள் ஆராயப்பட்டன. 1948 மே மாதம் அணு சக்தியால் இயங்கும் மூன்று புதுப் படைக்கலங்கள் எனிவெடக் என்னுமிடத்தில் ஆராயப்பட்டன. 1949, 1950 ஆண்டுகளிலும் அமெரிக்கா சில சோதனைகளை நடத்தியது. 1951-ல் பிரெஞ்ச்மென்ஸ் பிளாட், எனிவெடக், யுக்கா பிளாட் ஆகிய இடங்களில் நடைபெற்ற சோதனைகளில் பெரு நகரங்களைத் தவிரப் போர்க்களத்திலும் இதைப் பயன்படுத்தும் முறைகள் ஆராயப்பட்டன. இதற்காக அணு குண்டைச் சிறிய அளவில் அமைக்க வழி கண்டிருப்பதாகத் தெரிகிறது. ஹைடிரஜன் - ஹீலியம் கருமாற்றத்தைத் தூண்ட, யுரேனியம் குண்டைப் பயன்படுத்தும் முறையும் அப்போது ஆராயப்பட்டதாகத் தெரிகிறது. இதே ஆண்டில் அணுவாற்றலினால் இயங்கும் நீர்மூழ்கியையும், விமானத்தையும் அமைக்க முயற்சிகள் தொடங்கின. 1953-ல் நடைபெற்ற சோதனைகளால் பீரங்கியிலிருந்து சுட ஏற்ற அணு குண்டு ஆராயப்பட்டதாகத் தெரிகிறது.

சோவியத் யூனியனிலும் அணு குண்டு ஆக்க முயற்சிக்கு வெற்றி கிடைத்தது: 1947-லேயே அணு குண்டைத் தாம் தயாரித்ததாக ரஷ்யத் தலைவர்கள் கூறினும், 1949-ல் தான் அணுவாற்றல் வெடி அதிர்ச்சிகளை

இங்கிலாந்திலுள்ள அணு அடுக்கு

வெளிநாட்டினர் தெளிவாக அறிய முடிந்தது. பிரிட்டனில் 1947-ல் முதல் அணு அடுக்கு ஹார்வெல் என்னுமிடத்தில் அமைக்கப்பட்டது. 1952-ல் ஆஸ்திரேலியப் பாலையில் முதலாவது பிரிட்டிஷ் அணு குண்டு வெடிக்கப்பட்டது. இது சில அமிசங்களில் அமெரிக்கக் குண்டைவிடச் சிறந்தது எனக் கருதப்பட்டது.

நூல்கள் :-H. D. Smyth, Atomic Energy (1945); S. Glasstone, Source books on Atomic Energy (1950); J.L. Crammer and R.E. Peierls, Atomic Energy (1950).