கலைக்களஞ்சியம்/அயிரை
அயிரை ஓர் ஆறு (சிலப். 28 : 145); ஒரு மலை (பதிற். 21) ; ஒருவகை மீன் (புறம்.67; ஐங். 164).
அயிரை (அசரை) (Lepidocephalichthys thermalis) மிகச் சிறிய மீன். 1-2 அங்குல மிருக்கும். குளங்களிலும் மணற்பாங்கான படுகையுள்ள ஆறுகளிலும் சாதாரணமாக மிகுதியாகவே காணலாம். இது சேற்றில் அல்லது மணலில் பகலில் புதைந்து கிடந்து, இரவில் இரை தேட வெளி வந்து நீந்தும். முகமும் வாலும் மட்டும் மணலுக்கு மேலே தெரியும்படியும், மற்றப் பாகமெல்லாம் மறைந்திருக்கும்படியும் படுத்திருப்பது இதற்கு வழக்கம். செவுளால் மூச்சுவிடுவதோடு அமையாமல், இது அடிக்கடி நீரின் மட்டத்திற்கு வந்து காற்றை உட்கொள்ளுகிறது. இதை நீரிலிருந்து எடுத்தாலும் வெகுநேரம் உயிரோடிருக்கக் கூடும். அக்டோபர் முதல் ஜனவரி வரையில் இது முட்டையிடும் காலம். மழைத் தண்ணீர்க் குட்டைகளில்கூட இதன் குஞ்சுகளை அக்காலங்களில் பார்க்கலாம். இது சிறிய மீனானாலும் நிரம்பச் சத்தான உணவு என்று கருதுகின்றனர்.