உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/அரிச்சந்திரன்

விக்கிமூலம் இலிருந்து

அரிச்சந்திரன் வாய்மைக்கு இலக்கியமானவன்; அயோத்தி மன்னன் ; திரிசங்குவின் மகன். வசிட்டருக்கும் விசுவாமித்திரருக்கும் நேர்ந்த போட்டியால் இவனை விசுவாமித்திரர் பொய்யனாக்க முயன்றார். முதலில் வேள்விக்காக இவனிடம் பொன்பெற்று, அப்பொன்னை இவனிடமே வைத்துச் சென்றார். பிறகு, நாட்டைத் தானமாகப் பெற்றுத் தாம் முதலில் வாங்கி இவனிடம் வைத்த பொன்னும் நாட்டுத் தானத்திலேயே சேர்ந்துவிட்டதால், வேறு பொன் தரவேண்டுமென வற்புறுத்தினார். இன்றேல், வாங்கி வைத்த பொன்னை இல்லை யென்று கூறவேண்டும் என்றார். அரிச்சந்திரன் தன் மனைவி மக்களையும் தன்னையும் விற்று, விசுவாமித்திரருக்கும் அவர் அனுப்பிய தரகனுக்கும் பொன் கொடுத்தான். மேலும், விசுவாமித்திரர் செய்த சூழ்ச்சிகளால் தன் மகன் பாம்பு கடித்திறந்தபோதும், தன் மனைவி காசி மன்னன் மகனைக் கொன்றதாகப் பழி சாற்றப்பட்டபோதும் கலங்காமல் இருந்தான். தன்னை அடிமை கொண்ட வீரவாகு என்னும் தோட்டியின் ஆணைப்படித் தன் மனைவியை வெட்ட ஓங்கிய வாள் அவள் கழுத்தில் மாலையாக விழுந்தது. எனவே, 'சத்தியம் தலைகாக்கும்' என்னும் பழமொழி எழுந்தது என்பர். இவன் மனைவி சந்திரமதி ; மகன் லோகிதாசுவன். அமைச்சன் சத்தியகீர்த்தி. (பாரதம்)

இவன் வருணனைக் குறித்துத் தவம் புரிந்து, மகன் பிறந்தால் அவனை வேள்வியிலே யாகப் பசுவாகத் தருவதாக வேண்டிக் கொண்டானென்றும், பின்னர், பிறந்த மகனைப் பலியிட மனம் வராமல் மயங்கி யிருந்தானென்றும், அதனால் வயிற்றிலே கட்டியுண்டாகி வருந்தினான் என்றும், உண்மையுணர்ந்த மகன், அசிகிரதன் மகனான சுனச்சேபனை விலையாகப் பெற்று, வேள்விப் பசுவாக்கி, வருணனை மகிழ்வித்துத் தந்தையின் துயரை மாற்றினானென்றுங் கூறுவர்