கலைக்களஞ்சியம்/அலகாபாத் உடன்படிக்கைகள்
அலகாபாத் உடன்படிக்கைகள் : 1765-ல் ராபர்ட் கிளைவ் இரண்டாம் முறையாக இந்தியாவிற்கு வந்து வங்காள கவர்னர் பதவியை ஏற்றுக்கொண்ட போது, தமக்கு முன் வங்காள கவர்னராயிருந்த வான் சிட்டார்ட்டு என்பவர் 'ஒளது' என்று ஆங்கிலேயர் வழங்கிவந்த அயோத்தி மாகாணத்தை டெல்லி சுல்தா னான ஷா ஆலமிற்குக் கொடுத்துவிட்டார் என்பதையறிந்தார். உடனே, ஔதில் மொகலாயப் பிரதிநிதியாயிருந்த ஷூஜாவுத்தௌலாவோடு பேச்சு வார்த்தைகள் தொடங்கி இரண்டு உடன்படிக்கைகள் செய்துகொண்டார். இவற்றிற்கு அலகாபாத் உடன்படிக்கைகள் என்று பெயர்.
இவ்வுடன்படிக்கைகளின் பயனாக நடந்தவை: வங்காளம், பீகார், ஒரிஸ்ஸா ஆகிய மூன்று மாகாணங்களின் திவானியைக் கம்பெனியார் பெற்றனர். 'வடசர்க்கார்' களைக் கம்பெனியாருக்கு எழுதிவைத்ததை டெல்லி சுல்தான் ஒப்புக்கொண்டார். ஆர்க்காட்டு நவாபின் சுதந்திரம் அங்கீகரிக்கப்பட்டது. ஷா ஆலமிற்கு அலகாபாத், கோரா ஆகிய இரு மாவட்டங்கள் அளிக்கப்பட்டன ; அன்றியும், ஆண்டுதோறும் 26 இலட்சம் ரூபாயும் கொடுப்பதென்று தீர்மானமாயிற்று. ஔதில் அலகாபாத், கோரா நீங்கலாக ஏனைய மாவட்டங்களை ஷூஜா வுத்தௌலா பெற்றுக்கொண்டு, போர் நஷ்டஈடாக 50 இலட்சம் ரூபாய் கம்பெனிக்கு அளிப்பது என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது. வங்காள நவாபு வங்காளம், பீகார், ஒரிஸ்ஸா மாகாணங்களை ஆளுவதென்றும், அங்கு வரி வசூல் உரிமை மட்டும் கம்பெனியாரிடம் இருப்பதென்றும், கம்பெனியார் வங்காள நவாபுக்கு 5 இலட்சம் ரூபாய் ஆண்டுதோறும் கொடுத்து விடுவதென்றும் ஏற்பாடாயிற்று.
இவ்வுடன்படிக்கைகளின் மூலமே ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியார் முதன் முதலாக இந்திய ஆட்சியை நேரடியாக ஏற்றுக்கொள்ளத் தலைப்பட்டனர். தே. வெ. ம.