உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/அழுங்கு

விக்கிமூலம் இலிருந்து

அழுங்கு (Pangolin or Scaly Anteater) : இது ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் உண்டு. இதற்குப் பல் கிடையாது. உடலிலுள்ள உரோமங்கள் ஒன்றோடொன்று சேர்ந்து தட்டையான கேடகம் போன்ற செதில்களாகின்றன. அவை வீட்டோடுகள் போல ஒன்றின்மேல் ஒன்று கவிந்திருக்கும். இதைத் துரத்தினால் பந்துபோல உடலைச் சுருட்டிக்கொண்டு, வாலையுஞ் சுற்றியணைத்துக் கொண்டு, செதில்களையும் தூக்கிக் கொள்ளும். செதில்களுக்கிடையில் தனி மயிர்களைக் காணலாம். நாக்கு வெகு நீளம். இழைபோன்ற அதன் நுனியில் பிசின்போன்ற கசிவு உண்டு. கறையான், எறும்பு முதலியன இதன் முக்கிய உணவு. செல்லுப்

அழுங்கு

புற்றுக்களைக் கூர்மையான நகங்களால் தோண்டி, நீண்டநாக்கை உட் செலுத்தும். அதன் மேல் செல்லு நிரம்ப ஒட்டிக்கொள்ளும். அப்போது நாக்கை உள் இழுத்து அதைத் தின்றுவிடும். இப்படியே எறும்பையும் தின்னும். இந்திய அழுங்கு பாறைகளின் நடுவில் ஒதுங்கிக் குட்டிகளை வளர்க்கும். சில வேளைகளில் கூர் நகங்களால் சரிவான ஒரு வழியைத் தோண்டி, அதன் உட்கோடியில் சுமார் 6 அடி அகலமான ஓர் அறையை உண்டுபண்ணி, அதில் குட்டி போட்டு அவைகளை வளர்க்கும். முன்கால் விரல்களின் நகங்கள் தேய்ந்து போகாமல் அவைகளை மடக்கிக் கொண்டு, விரல்களின் புறப்பாகங்களை ஊன்றி நடக்கும் வழக்கம் இதற்குண்டு. தண்ணீர் குடிக்க நாக்கைத் தண்ணிரில் நனைத்து வாய்க்குள் இழுத்துக்கொள்ளும். பாகுபாடு : பாலூட்டி வகுப்பு ; பல்லிலி வரிசை (Edentata) ; மேனிஸ் (Manis) சாதி. பா. பா.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அழுங்கு&oldid=1503548" இலிருந்து மீள்விக்கப்பட்டது