உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/அன்டார்க்டிகா

விக்கிமூலம் இலிருந்து

அன்டார்க்டிகா என்பது தென் துருவத்தைச் சுற்றியுள்ள நிலத்தையும் சமுத்திரத்தையும் குறிக்கும். அது வட அமெரிக்காவின் பரப்பில் மூன்றில் இரண்டு பங்குடையது. ஆனால் எப்போதும் பனிக்கட்டியால் மூடப்பட்டிருக்கும். அங்கே வேனிற்காலத்தில் 20° குளிராக இருக்கும். அன்டார்க்டிகா கண்டத்தில் முதன் முதல் கால் வைத்தவர் அங்கு 1895-ல் சென்ற கிறிஸ் டென்ஜென் என்னும் நார்வே நாட்டினர். நிலம் தென் துருவம் வரை உயர்ந்துகொண்டே போகிறது. தென் துருவம் கடல் மட்டத்துக்கு மேல் 10,500 அடி உயரமானது.

பத்துக்கோடி ஆண்டுகட்குமுன் அங்கு இவ்வளவு குளிர் கிடையாது. அக்காலத்தில் தாவரம் செழித்திருந்தது என்பது அங்குக் காணப்படும் பாசில்களாலும் நிலக்கரியாலும் தெரியவருகிறது. இப்போது அந்நிலந்தான் பூமியில் மிகக் குளிர்ந்த பகுதியாகும். அங்குப் பெரும்பாலும் 18° முதல் 68° வரை குளிராக இருப்பதால் மழை பெய்வதேயில்லை. பாசம், பாசிக்காளான் கடலிலுள்ள தாவரம் தவிர வேறு தாவரம் கிடையாது. மைக்கிராஸ்கோப் வாயிலாகவே கண்ணுக்குப் புலனாகும். பெங்குவின் தான் முக்கியமான பறவை. சிறு பூச்சிகளும் காணப்படுகின்றன.

சில நிலக்கரியும் கடல் நாய்களும் (Seal) காணப்பட்டாலும் பயன்படுத்தக் கூடியவையாக இல்லை. இப்போது மக்கள் அங்குப் போவதெல்லாம் அங்கு உள்ளது யாது என்று தெரிந்துகொள்வதற்காகவே. அண்டார்க்டிகா பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு நார்வே, நியூஜீலாந்து, ஆஸ்திரேலியா, பிரான்சு, அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகியவற்றிற்குச் சொந்தமாயிருப்பதாகக் கூறுவார்கள். ஆனால் யாருக்கும் அதனால் நலம் இப்போது எதுவுமில்லை.