உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/அன்னாசி

விக்கிமூலம் இலிருந்து

அன்னாசி சுவையும் மணமும் மிகுந்த பழம். இது முதன்முதல் அமெரிக்காவின் வெப்ப வலயத்தில் இருந்தது. இதற்குத் தென் அமெரிக்காவிலுள்ள பெரு நாட்டு மொழியில் நானாஸ் என்று பெயர். இது சாதாரணமாக ஒரு தேங்காயளவு பருமன் இருக்கிறது. சில ஜாதி இன்னும் மிகப் பெரிதாக இருக்கும். பழத்தின் உள்ளே கெட்டியான சதை வெளிர்மஞ்சள் அல்லது வெளிர் கிச்சிலி நிறமுள்ளதாக இருக்கும். மேலே தோல் அழுத்தமாகச் சொரசொரப்பாக இருக்கும் ; இது உள்ளிருக்கும் சதையைக் காப்பாற்ற உதவுகிறது. ஆண்டில் எந்தக் காலத்திலும் இந்தப் பழம் அகப்படும்.

அன்னாசிச் செடி கிளைகளில்லாத ஒரே தண்டு உடையது. அடி தடிப்பாகக் குறுகியிருக்கும். அதில் கற்றாழையிலிருப்பது போன்ற மொத்தமான நீண்ட இலைகள் நெருக்கமாக வளர்ந்திருக்கும். இலையின் ஓரங்களில் சிறு முட்களும், நுனியில் நீண்ட முள்ளும் உண்டு.

அன்னாசி

தண்டின் நடுவிலிருந்து பூங்கொத்து வளர்கின்றது. அதைத்தான் காய் என்கிறோம். பூங்கொத்தின் நடுவில் பூத்தண்டும், அதைச் சுற்றிலும் நெருக்கமாக அடர்ந்து வளரும் காம்பில்லாத பல பூக்களும் இருக்கின்றன. காயின் மேலுள்ள செதில் அடுக்கினதுபோலக் காணும் வரைகள் தனித்தனிப் பூக்களுக்குரியவை. பூத்தண்டும் பூக்களின் காம்பிலைகளின் அடியும் இதழ்களின் அடியும் பருத்துச் சதைப்பற்றுள்ளனவாகி, ஒன்று சேர்ந்து கூட்டுக்கனியாகின்றன. இந்தச் சதைப்பற்றுள்ள பாகங்களே தின்னும் பாகங்கள். காயின் மேலே பூக் காம்பிலைகள், இதழ்கள், இவற்றின் முனைகள் நீட்டிக் கொண்டிருக்கும். பூக்களையுடைய தண்டு மேலே தொடர்ந்து வளரும். ஒரு கொத்துச் சிறிய இலைகள் அதிலே உண்டாகும். அது அன்னாசிப்பழத்துக்கு முடி போல இருக்கும். ஒரு காம்பில் ஒரே காய் வளரும். ஆயினும் தரைக்கீழ்த் தண்டிலிருந்து வேறு தண்டுகள் தோன்றிக் காய்விடும்.

தென் அமெரிக்காவுக்குச் சென்ற ஸ்பெயின் நாட்டினர் அன்னாசியை முதன்முதல் ஐரோப்பாவிற்குக் கொண்டுவந்தனர். இந்தியாவுக்கு 16ஆம் நூற்றாண்டின் இடையில் அன்னாசி கொண்டுவரப்பட்டது. இந்தியாவில் அஸ்ஸாமிலும், வங்காளத்திலும், மேற்குக் கடற்கரைப் பகுதிகளிலும் மிகுதியாக இதைப் பயிர் செய்கின்றனர். ஹவாய்த் தீவுகளிலும் மலேயாவிலும் இது ஏராளமாகப் பயிராகிறது. வட ஆப்பிரிக்கா, தென் ஆப்பிரிக்கா, கனேரித் தீவுகள், அசோர்ஸ் தீவுகள், மேற்கிந்தியத் தீவுகள், மத்திய அமெரிக்கா முதலிய பல இடங்களில் இதை விளைவிக்கின்றனர். அன்னாசிப் பழத்தில் சுமார் 90 வகை உண்டு. பழத்தில் விதை உண்டாவதில்லை. அதன் உச்சியிலிருக்கும் முடியை நட்டுப் பயிர் செய்வார்கள். அடித்தண்டிலிருந்து வெடிக்கும் சிங்கத்திலிருந்தும் (Sucker), பழத்தின் அடியில் இருக்கும் காம்பைத் துண்டுகளாக வெட்டி வைத்தும், வேர்களிலிருந்து உண்டாகும் குருத்துக்களிலிருந்தும் பயிர் செய்வார்கள். பெரும்பாலும் சிங்கங்களை நட்டுத்தான் பயிர் செய்வார்கள். அன்னாசித் தோட்டம் ஒரு தடவை போட்டது எட்டு முதல் பத்து ஆண்டுவரை பலனளிக்கும். பழத்தைக் கொய்யும்போது முள் தைக்காதபடி கித்தான் கையுறைகளும் காலுறைகளும் போட்டுக் கொண்டு வேலை செய்வார்கள். வளைந்த கொக்கி போன்ற கத்தியால் கொய்வார்கள். செங்காயாகவே பறித்து விடுவார்கள். தூர தேசங்களுக்குப் போகும் போது பழுத்துக்கொண்டே போகும். பழம் ஒரு மாதம் வரையிலும் கெடாமலிருக்கும். பழத்தைத் துண்டு செய்து டப்பிகளில் அடைத்தும் ஏற்றுமதி செய்கின்றனர். இலைகளின் நாரிலிருந்து பிலிப்பீன் தீவுகளில் பிஞா என்னும் நயமான ஆடை நெய்கிறார்கள். பழக் கழிவு கால்நடைக்குத் தீனி. பவர் ஆல்கஹாலும் காகிதமும் செய்யவும் உதவும். குடும்பம்: புரோமீலியேசீ (Bromeliaceae) ; இனம் : அனானாஸ் கோமோசஸ் (Ananas comosus).

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அன்னாசி&oldid=1455548" இலிருந்து மீள்விக்கப்பட்டது