உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/ஆக்சைடுகள்

விக்கிமூலம் இலிருந்து

ஆக்சைடுகள் (Oxides) ஒரு தனிமம் ஆக்சிஜனுடன் கூடுவதால் தோன்றும் பொருள் ஆக்சைடு எனப்படும். பெரும்பான்மையான தனிமங்களுடன் ஆக்சிஜன் கூடி ஆக்சைடை அளிக்கும். மற்றத் தனிமங்களின் ஆக்சைடுகளை மறைமுகமான (Indirect) முறைகளால் தயாரிக்கலாம். சடவாயுக்களையும், புரோமினையும் தவிர மற்றெல்லாத் தனிமங்களுக்கும் ஆக்சைடுகள் உண்டு என அறியப்பட்டுள்ளது. பல தனிமங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட ஆக்சைடுகளையும் அளிப்பதுண்டு. பல ஆக்சைடுகள் நீருடன் கூடி ஹைடிராக்சைடுகளை அளிக்கும்.

ஆக்சைடுகளைப் பலவகைகளாப் பிரிக்கிறார்கள். (1) உப்பு மூல ஆக்சைடுகள் என்பவை அமிலங்களுடனும் அமில ஆக்சைடுகளுடனும் வினைப்பட்டு உப்புக்களை அளிக்கும். உலோகங்களின் ஆக்சைடுகளில் பெரும்பான்மையானவை இவ்வகையைச் சேர்ந்தவை. (2) அமில ஆக்சைடுகள் என்பவை உப்பு மூலங்களுடனும், உப்பு மூல ஆக்சைடுகளுடனும் வினைப்பட்டு உப்புக்களை அளிக்கும். பெரும்பான்மையான உலோகங்களின் ஆக்சைடுகள் இவ்வகையைச் சேர்ந்தவை. (3) இருதலை ஆக்சைடுகள் என்பவை உப்புமூலங்களுடன் வினைப்படும்போது அமில ஆக்சைடுகளைப் போலவும், அமிலங்களுடன் வினைப்படும்போது உப்பு மூல ஆக்சைடுகளைப்போலவும் இயங்குகின்றன. அலுமினிய ஆக்சைடு இவ்வகைக்கு நல்ல உதாரணமாகும். (4) நடுநிலை ஆக்சைடுகள் மற்றப் பொருள்களுடன் கூடி அமிலங்களையோ உப்புக்களையோ அளிப்பதில்லை. கார்பன்மானாக்சைடு இவ்வகை ஆக்சைடுகளுக்கு ஓர் உதாரணமாகும். (5) ஒரு தனிமத்தின் உபஆக்சைடு என்பது உப்புக்களை அளிக்கும் அதன் ஆக்சைடைவிடக் குறைவான அளவு ஆக்சிஜனையுடையது. இவ்வகைக்கு வெள்ளீய உப ஆக்சைடு உதாரணமாகும். (6) ஒரு தனிமத்தின் சிறப்பான ஆக்சைடைவிட அதிகமான ஆக்சிஜனை உடைய ஆக்சைடை அதன் பெராக்சைடு எனப்படும். இவை எளிதில் ஆக்சிஜனை வெளிவிடுவதால் நல்ல ஆக்சிகரணிகளாக இயங்குகின்றன.