உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/ஆசுகவிராஜசிங்கம்

விக்கிமூலம் இலிருந்து

ஆசுகவிராஜசிங்கம்: இவரைச் சேறைக் கவிராச பிள்ளை என்பர்; விரைவிற் கவி யியற்றுவார் ; வண்ணக் களஞ்சியமும் ஆவார் ; கருணீகர மரபினர் ; சேயூர் முருகனுலா என்ற நூல் இயற்றியிருப்பதாக அந்தகக்கவி வீரராகவ முதலியார் பாடிய சேயூர் முருகன் பிள்ளைத் தமிழால் தெரியவருகிறது. மற்றும் திருக்காளத்தி நாதர் உலா, திருவண்ணாமலையார் வண்ணம், திருவாட்போக்கிநாதர் உலா முதலியன பாடியிருக்கிறார். வடஆர்க்காடு மாவட்டத்தில் வாலாஜா வட்டத்திலுள்ள சோளங்கிபுரத்திலுள்ள கடிகையூராரைப் பாடியவர். ஒரு பாண்டியனையும் பாடியவர் போலும். திருக்காளத்தி வேங்கடாசல முதலியார் என்பவரால் ஆதரிக்கப் பெற்றவர்.