உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/ஆர்மடா

விக்கிமூலம் இலிருந்து

ஆர்மடா: இச்சொல் 'பெரிய படைத் தொகுதி' என்று பொருள்படும். ஆயினும் 1588-ல் ஸ்பெயின் மன்னனான II-ம் பிலிப் இங்கிலாந்து மீது ஏவிய பெரிய கப்பற்படையையே இப் பெயரிட்டழைப்பது மரபு. ஸ்காட் அரசி மேரியின் சாவிற்குப் பழி வாங்கவும், இங்கிலாந்தைக் கத்தோலிக்க நாடாக்கவும் விரும்பிய II - ம் பிலிப் இங்கிலாந்தை வெல்லக்கருதிப் பெரிய கப்பற்படை யொன்றைத் திரட்டினான். இப்படையில் 130க்கு மேற்பட்ட கப்பல்கள் இருந்தன. இப்படையை நடத்திச் சென்றவன் மெடினா சிடோனியா பிரபு என்பவன். இப்படை தென் ஸ்பெயினிலிருந்து புறப்பட்டுக் கலே துறைமுகத்திற்குச் சென்று, அங்குக் காத்திருந்த பார்மா பிரபுவின் நிலப் படையை ஏற்றிக்கொண்டு இங்கிலாந்து மீது படையெடுக்க வேண்டும் என்பது அவர்களுடைய ஏற்பாடு. ஆயினும் இப்படை இங்கிலீஷ் கால்வாயை அணுகியபோது இங்கிலீஷ் கப்பற் படையைச் சார்ந்த சிறு கப்பல்கள் தொலைவிலிருந்தே பீரங்கிகளால் சில ஆர்மடாக் கப்பல்களைச் சேதப்படுத்தின. காற்றும் ஆர்மடாவிற்கு விரோதமாக இருந்ததால் அது வட கடல் வழியே ஓடிப் பிரிட்டிஷ் தீவுகளைச் சுற்றிக்கொண்டு ஸ்பெயின் போய்ச் சேர்ந்தது. ‘தோல்வி காணா ஆர்மடா’ வில் 50 கப்பல்களே திரும்பி வந்தன. பிரிட்டிஷ் கப்பற்படைக்கு இப்போரில் தலைமை தாங்கியோர் ஹோவர்டு பிரபு, டிரேக், ஹாக்கின்ஸ் முதலியோர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/ஆர்மடா&oldid=1505975" இலிருந்து மீள்விக்கப்பட்டது