உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/ஆரஞ்சு

விக்கிமூலம் இலிருந்து

ஆரஞ்சு : ரூட்டேசீ என்னும் இரட்டை விதையிலைக் குடும்பத்தில் சிட்ரஸ் சாதியில் சில இனங்கள் ஆரஞ்சு எனப்படும். எலுமிச்சை, கொடியெலுமிச்சை, பேரெலுமிச்சை, கொழிஞ்சி, பம்பளிமாசு முதலிய பல தாவரங்கள் சிட்ரஸ் சாதியின. இச்சாதியில் முக்கியமாக மூன்று இனங்கள் ஆரஞ்சு எனப்படும். ஒன்று புளிப்பு நாரத்தை, கசப்பு நாரத்தை, செவில் ஆரஞ்சு, பிகரேடு எனப்படும் புளிப்பாரஞ்சு. இது சிட்ரஸ் ஆரான்டியம். மற்றொன்று கமலா, குடகாரஞ்சு, மாண்டரின் என்னும் சிட்ரஸ் ரெட்டிகுலேட்டா. இன்னொன்று சாதாரண ஆரஞ்சு. சீனி ஆரஞ்சு, சாத்துக்குடி, ஆரஞ்சு என்னும் தித்திப்பு ஆரஞ்சு. இது சிட்ரஸ் சீனென்சிஸ். இந்த ஆரஞ்சு வகைகள் வடிவு, அளவு, மணம், மரத்தின் பண்பு முதலியவற்றில் வேறுபடும். புளிப்பு ஆரஞ்சு பொதுவாக நாரத்தையென்றும், மற்ற இரண்டும் பொதுவாகக் கிச்சிலிப்பழம் என்றும் பெயர் பெறும். ஆரஞ்சு என்னும் சொல் நாரம், நரந்தம், நாரத்தை என்னும் தமிழ்ச் சொல்லோடு தொடர்புடையது. இது வடநாட்டு மொழிகளில் நாரங்கா என்றும் அரபு மொழியில் நாரஞ்சியென்றும் உள்ளது. இதுவே ஐரோப்பிய மொழிகளில் ஆரஞ்சு என்று வழங்குகிறது.

ஆரஞ்சு


1. இலை, 2. பூ, 3. பூவின் நெடுக்கு வெட்டு 4. கனியின் குறுக்கு வெட்டு

நாரத்தை முள்ளுள்ள சிறு மரம். அருமையாக 25 அடி உயரம் வளரும். இலை மாறொழுங்குள்ளது. ஒரே சிற்றிலையுள்ள கூட்டிலை. இலைக்காம்புக்கு இரு பக்கமும் இறக்கைபோலப் பச்சையிலைப் பகுதி வளர்ந்திருக்கும். இலையில் சுரப்பிகள் அங்கங்கே ஒளி கசியும் புள்ளிகள் போலத் தோன்றும். இவற்றில் எண்ணெய் உண்டாகிறது. பூக்கள் சிறு கொத்துக்களாக இருக்கும். புறவிதழ் கிண்ணம்போல இருக்கும். ஐந்து பிரிவுகள் உள்ளது. அகவிதழ்கள் சாதாரணமாக வெண்மையாக மணமுள்ளனவாக இருக்கும். கேசரங்கள் 10-20. இன்னும் அதிகமாகவும் இருக்கும். சூலகம் எட்டு அல்லது அதற்கு அதிகமான அறைகளுள்ளது. சூல்கள் பல. அச்சு ஒட்டுமுறை. சூல் தண்டு உருளை வடிவாகவும், சூல்முடி தலை வடிவாகவும் இருக்கும். சூலகத்துக்கு அடியில் நன்றாக வளர்ந்துள்ள ஆதானம் வட்டமாக இருக்கும். இதில் பூந்தேன் சுரக்கும். கனி சதைக் கனி, சூலறைச் சுவரின் உட்பாகத்தில் வளரும் துய்களில் சாறு நிறைந்திருக்கும். அப்பகுதியே பழத்தில் தின்னத்தக்கது. பழத்தோல் மொத்தமாக மேடுபள்ளமாக இருக்கும். பழம் பிரகாசமான கிச்சிலி நிறமாகச் சற்றுச் சிவப்புச்சாயை கலந்திருக்கும். நாரத்தை மிகப் புளிப்பாக இருப்பதால் இது பழமாகத் தின்னுவதற்கு ஏற்றதன்று. ஆயினும் இதிலிருந்து பழச்சாறு, மிட்டாய், மார்மலேடு, மது முதலிய பலவகைப் பண்டங்கள் செய்கின்றனர். ஊறுகாய் போடுவதுண்டு. மருந்துக்கு மிக முக்கியமானது, இனிமையான மணமுள்ளது. வைட்டமின்கள் உள்ளது. இதன் இலையிலிருந்து நெரோலி எண்ணெய், பிகரேடு எண்ணெய், ஆரஞ்சுப்பூ எண்ணெய் என எடுத்து வாசனைத் திரவியங்களில் உபயோகிக்கிறார்கள்.

கமலா கிச்சிலி புதர்போல வளரும் சிறிய மரம். இலைகள் சிறுத்து மென்மையாக இருக்கும். காம்பு குட்டையாக இருக்கும். அதில் இறக்கை இல்லையென்றே கூறலாம். பழம் உருண்டையாக மேலே சற்றுத் தட்டையாக இருக்கும். தோல் உள்ளிருக்கும் சுளைகளோடு ஒட்டாமல் தளர்த்தியாக இருக்கும். எளிதில் உரிந்துவிடும். பழம் கிச்சிலி நிறமாகவும் சிவப்பாகவும் இருக்கும். சாறு இனிக்கும். சிலவற்றுள் சற்றுப் புளிப்பும் கலந்திருக்கும். இது சீனாவிலும் இந்தோசீனாவிலும் இருந்து வேறு இடங்களுக்குப் பரவிற்று. இதைக் குடகாரஞ்சு என்று சாதாரணமாகச் சொல்லுவார்கள். அங்கு இது ஏராளமாக விளைகிறது.

சாத்துக்குடி, சீனி, மூசம்பி (மொசாம்பிக்), பட்டேவியா என்று சொல்லப்படும் தித்திப்பு ஆரஞ்சு சீனாவிலும் இந்தியாவிலும் இருந்து வேறு நாடுகளுக்குப் பரவியுள்ளது. இந்த மரம் பரவலாக 30 அடி உயரங்கூட வளரும். இலைக் காம்புக்குக் குறுகிய இறக்கையுண்டு. பழம் உருண்டையாக இருக்கும். பொன்னிறமாக அல்லது கிச்சிலி நிறமாக இருக்கும். தோல் சற்றுத் தடிப்பாக இருக்கும். இந்தப் பழம் மற்றவகைகளை விட விரும்பப்படுவது. மற்றவகைகளைவிட இதன் வாணிபமே மிகுதி. சாத்துக்குடிப்பழம் இரத்தத்தைச் சுத்திகரிப்பது. சுரங்களில் நாவறட்சியைத் தணிப்பது. சளிப்பை அகற்றுவது. பசியை மிகுவிப்பது. இதன் சாறு பித்த சம்பந்தமான நோய்களை நீக்கும். தோல் வயிற்றிலுள்ள வாயுவை அகற்றும். இவை இந்தியாவில் பயிர்செய்யும் முறை, விளையும் பிரதேசங்கள் முதலிய வற்றைக் கிச்சிலி என்னும் கட்டுரையில் பார்க்க.

சிட்ரஸ் சாதிச் செடிகளைப் பற்றி எலுமிச்சை, கடாரை, கொழிஞ்சி, பம்பளிமாசு முதலிய தனிக் கட்டுரைகளுண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/ஆரஞ்சு&oldid=1457258" இலிருந்து மீள்விக்கப்பட்டது