கலைக்களஞ்சியம்/ஆழவெடி
ஆழவெடி (Depth charge) கடலிற் பயனாகும் சுரங்கவெடிகளில் ஒன்று. இது உருளை வடிவாக அமைக்கப்பட்டிருக்கும். இதற்குள் டி. என். டி. (T. N. T ) போன்ற வெடிமருந்து நிரப்பப்படும். இது குறிப்பிட்டதோர் அழத்தை அடைந்தவுடன் நீரின் அழுத்தத்தால் இதன் திரி இயங்கி இதை வெடிக்கச் செய்யும். நீர்மூழ்கி எந்த ஆழத்தில் உள்ளதோ அந்த அழத்திற்கேற்ற நீர் அழுத்தத்தில் இயங்குமாறு திரியைச் சரிப்படுத்தி அமைக்கலாம். ஆழவெடி நீர்மூழ்கியை நேரடியாகத் தாக்காவிட்டாலும், நீருக்குள் வலிவான அழுத்த அலைகளைத் தோற்றுவித்து, நீர்மூழ்கி பலநூறு கஜம் தொலைவிலிருந்தாலும் அதற்குச் சேதம் விளைவிக்கலாம். கப்பலின் மேல்தளத்திலிருந்து கீழே உருட்டி விட்டோ, பீரங்கியைக்கொண்டு சுட்டோ இதைக் கடலில் எறிவார்கள். விமானத்திலிருந்து வீசப்படும் ஆழிவெடியும் உண்டு. இது நேராக இறங்கிவருமாறு பின்புறத்தில் சிறகுகளைக் கொண்டிருக்கும்.