உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/ஆனந்திபாய்

விக்கிமூலம் இலிருந்து

ஆனந்திபாய் (?-1794) மகாராஷ்டிர பேஷ்வாவான ரகோபா என்னும் இரகுநாதராவின் மனைவி. இரகுநாதராவ் இவளை 1755-ல் மணந்துகொண்டான். இவள் அழகிற் சிறந்தவளாயினும் கொடிய உள்ளம் படைத்தவள். இவள் தூண்டுதலுக்கிணங்கி இரகுநாதராவ் அவனுடைய உடன்பிறந்தான் மாதவராவிற்குப் பிரதிநிதியாக இருந்து முழு அதிகாரத்தையும் செலுத்தி வந்தான். 1765ல் இரகுநாதராவை மகாராஷ்டிர இராச்சியத்தில் ஒரு பகுதியை உரிமை கொண்டாடுமாறு இவள் தூண்டினாள். ஆயினும் இவ்வெண்ணம் கைகூடவில்லை. 1773-ல் பேஷ்வாவாக இருந்த நாராயணராவை இவள் சூழ்ச்சியால் கொல்லுவித்துத் தன் கணவனுக்குப் பேஷ்வா பதவி கிட்டுமாறு செய்தாள். இவளது துர்ப்போதனையால் இரகுநாதராவ் பல தவறான செயல்களைச் செய்துவந்தான். இவள் கணவனுக்கு இவளிடம் இருந்த அளவிறந்த அன்பும் அச்சமும் மகாராஷ்டிர வரலாற்றின் போக்கையே பாதித்தது. இவள் கணவன் இறந்து 10 ஆண்டுகள் கழித்து 1794-ல் இறந்தாள். தே. வே. ம.