உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/இடைச்செருகல்

விக்கிமூலம் இலிருந்து

இடைச்செருகல் என்பது இடையிலே சேர்க்கப்பட்டது எனப் பொருள்படும். முன்னோர் பாடிய நூல்களிலே இடைச்செருகல் காணப்படுகிறதென்று அறிஞர்கள் கூறுகின்றனர். முன்பின்னுள்ள செய்யுட்களின்பொருளுடன் பொருந்தாமலிருப்பதும், பொருத்தமிருப்பினும் வேண்டப்படாமல் இருப்பதும், நடைவேறுபாடு காணப்படுவதும் இவைபோல்வனவும் இவ்வாறு கருதுவதற்குக் காரணம்.

முன்னோர் செய்யுளைப்போல எழுதவேண்டும் என்னும் ஆவலும், நூலாசிரியர் கருத்தல்லாதிருப்பினும் தம் கருத்தை நுழைக்கும் எண்ணமுங் கொண்டவரால் இடைச்செருகல் உண்டாயிருக்கலாம். அன்றியும் தனிச்செய்யுட்களாக வழங்கும் சில பிற்காலத்தே ஒருவரால் இவை இந்த நூல்களில் இருந்து விடுபட்டிருக்கலாம் என்னும் எண்ணத்துடன் சேர்க்கப்பட்டிருத்தலும் கூடும்.

எனவே, இடைச்செருகல் எனப்படுபவை இடைச்செருகலாக இல்லாமல் இருத்தலுங்கூடும். பொருத்தமாக இருப்பவை இடைச் செருகலாய் இருத்தலுங்கூடும். வெள்ளியம்பலத்தம்பிரான் என்பவரும், கந்தியார் என்பவரும் முன்னோர் செய்யுட்களிலே இடைச்செருகலாகப் பாடிச் சேர்த்துள்ளனர் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். இவை முறையே வெள்ளிப் பாடல் கந்தியார் பாடல் என வழங்குகின்றன. பார்க்க: வெள்ளிப்பாடல், கந்தியார்.