கலைக்களஞ்சியம்/இந்தியப் பொருட்காட்சிச்சாலை
இந்தியப் பொருட்காட்சிச்சாலை (Indian Museum, Calcutta): 1784-ல் நிறுவப் பெற்ற ஆசியச்சங்கம் (Asiatic Society) பொருட்காட்சிச்சாலை ஒன்றை அமைக்க விரும்பியபோதிலும், 1814லேயே டாக்டர் நத்தேனியல் வாலிச் என்பவர் முயற்சியால் அது அமையலாயிற்று. அதன்பின் அது ஆசியச் சங்கத்தால் நடத்த முடியாதபடி பெரியதாகிவிட்டபடியால் அச்சங்கத்தின் வேண்டுகோளின் பேரில் இந்திய அரசாங்கமானது 1866-ல் அப்பொருட்காட்சிச்சாலையைத் தன்னுடைய ஆதிக்கத்தில் வைத்து நடத்தத் தொடங்கியது. அதன் பின்னர் அது நாளுக்குநாள் அதிகமாக வளர்ந்து வரலாயிற்று. இப்போது கீழ்நாடுகளில் அதற்கு இணையானதாக வேறு பொருட்காட்சிச்சாலை எதுவுமில்லை. இப்பொருட்காட்சிச்சாலை இந்தியாவிலும் அயல்நாடுகளிலும் நடைபெறும் கண்காட்சிச் சாலைகளில் கலந்து கொள்வதுடன், மக்களுக்குப் பயன்படக்கூடிய சொற்பொழிவுகள் செய்யவும், அறிஞர்க்கும் மாணவர்க்கும் ஆராய்ச்சி வசதிகள் செய்யவும் ஏற்பாடு செய்துள்ளது. இப்பொருட்காட்சிச்சாலையில் தரையியல், விலங்கியல், மானிடவகையியல், தொல்பொருளியல், கலை, தொழில் ஆகிய ஆறு துறைகளுக்கும் ஏற்ப ஆறு பிரிவுகள் உள்ளன. இந்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட தர்மகர்த்தர்களின் குழுவொன்று இதை நடத்துகிறது.