தந்தை பெரியார், கருணானந்தம்/004-021
கோவை மாவட்டத்தின் பெருங்குடி மக்களாகிய கொங்கு வேளாளர் சமூகத்திடையே, செல்வாக்கும் நல்ல மரியாதையும் பெற்றுத் திகழ்ந்தார் வெங்கட்ட நாயக்கர். பல அறக்கட்டளைகள், கல்விச் சாலைகள், மருத்துவ நிலையங்கள் நிறுவினார். திரண்ட செல்வத்தில் புரண்டெழுந்த போதிலும், பக்தி மார்க்கத்தைப் பரப்புவதை மறப்பதில்லை. வீட்டில் எந்த நேரமும் புராண கதாகாலட்சேபங்கள், பஜனைப் பாடல்கள், வைணவ சமயத் தத்துவ விசாரணைகள் இத்யாதி, இத்யாதி....
கிருஷ்ணசாமியும் இராமசாமியும் முறைப்படி பள்ளிக்கு அனுப்பப்பட்டனர். மூத்தபிள்ளை பெற்றோருக்கு அடங்கிய பிள்ளையாய், நல்ல வைணவ சிரோமணியாய், நெற்றியில் நாமம் துலங்கப், பயபக்தியுடன் பள்ளி சென்றுவந்தார். அங்கு கிடைத்த கல்வியின் எல்லைவரை சென்ற பின்பும், அத்துடன் விடாது, தனியே தமிழ், ஆங்கிலம், வடமொழி, பக்தி மார்க்க நூல்கள், சித்த மருத்துவ நூல்கள் யாவும் விரும்பிப் பயின்றார்.
சம்பத், செல்வராஜ், செல்வா, கஜராஜ் ஆகிய மூன்று ஆண், இரண்டு பெண்மக்கள் பிறந்தனர். திருப்பத்தூர் வழக்கறிஞர் சாமிநாயுடு மகன் கஜேந்திரன் மிராண்டாவையும், மகள் சுலோச்சனா சம்பத்தையும் மணந்துகொண்டனர். இவர்கள் அனைவர்க்கும் மக்கட்செல்வம் நிரம்ப உள்ளது.
இப்போது ஈ.வெ. கிருஷ்ணசாமி, ரங்கநாயகி அம்மாள், ஈ.வெ.கி. சம்பத், ஈ.வெ.கி. கஜராஜ் ஆகியோர் உயிருடன் இல்லை. ஈ.வெ.கி. செல்வராஜ் நகரமன்றத் துணைத் தலைவராயிருந்தார்.மூத்த பிள்ளைக்கு முற்றிலும் மாறுபட்ட குணநலன்கள் விளங்கினார். கொண்டவராய் இளையபிள்ளை இராமசாமி இளமையிலேயே இவருக்குப் பெற்றோரின் கண்டிப்பும் கட்டுப்பாடும் நேரடியாய்க் கிட்டாமல் போயிற்று. காரணம், இவர் தனக்குப் பாட்டி முறையுள்ள ஒருவரிடம் செல்லப் பிள்ளையாக இளம்பருவத்தில் வளர்ந்து வந்தார்.
இராமசாமி பயில்வதற்காக அனுப்பப் பெற்றது ஒரு திண்ணைப் பள்ளிக்கூடம். அது சாமான்யக் குடிமக்கள் - அதாவது - செக்கில் எண்ணெய் ஆட்டுவோர், கூடை முறம் முடைவோர், பீடி சுற்றுவோர் போன்ற அடித்தளத்தார் - அதிலும் பல்வேறு சாதிமத அடிப்படையில் அழுத்திவைக்கப்பட்டோர் - வாழும் இடத்தில் அமைந்திருந்தது. ஆறாவது வயதில் அங்கு நுழைந்த இராமசாமி, மூன்றாண்டுகள் அந்தத் திண்ணைப்பள்ளியில் இருந்தார்; பயின்றார் என்று சொல்ல முடியாது; குறும்புகள் புரிந்தார்; வரம்புகள் கடந்து சமுதாய சமத்துவ நெறி நின்றார்! ஆம்!
பரம பாகவதரும் உத்தம வைணவ பக்த சிரோமணியுமான வெங்கட்ட நாயக்கரின் இளைய பிள்ளை, பள்ளியில் பல திருவிளையாடல்கள் நிகழ்த்தினார். இவர் குடிப்பதற்குத் தண்ணீர் வேண்டுமானால்கூட, உயர் வகுப்பினரான உபாத்தியாயர் வீட்டில் மட்டுமே அருந்திடவேண்டும் என்பது பெற்றோர் உத்தரவு! இதை அன்றாடம் பள்ளிக்குப் புறப்படும்போதெல்லாம், பிள்ளைக்கு நினைவூட்டுவது அன்னையாரின் வாடிக்கை. அதனால் அந்த ஆணையைக் கடைப்பிடிக்க கருதிய மகனார், பள்ளி ஆசிரியராகிய சைவ ஓதுவார் வகுப்பைச் சார்ந்தவருடைய வீட்டில் தண்ணீர் அருந்தச் செல்வார். இவரை எச்சில் படாமல் குவளையைத் தூக்கிக் குடிக்கச் சொல்வார்கள். தண்ணீர் அருந்திய பாத்திரத்தைக், கீழே கவிழ்த்து வைக்கச் சொல்லித், தண்ணீர் தெளித்துப், புனிதப்படுத்தி, உள்ளே எடுத்துச் கொள்வார்கள். சிலநேரங்களில் இவருக்குத் தண்ணீர் தரவும் தயங்குவார்கள்!
இளம் உள்ளத்தில் இந்த உயர்சாதி மனப்பான்மையைப் பற்றி இராமசாமி நன்றாகப் பதித்துக் கொண்டார். பின்னர், ஆசிரியரிடம்கூட உண்மையை வெளியிடாமல், தண்ணீர் குடிக்க வெளியில் செல்லும்போதெல்லாம், தனக்கு விருப்பத்துடன் தர இசைகின்ற பிறசாதியினர் வீடுகளை நாடினார். வாணியச் செட்டியார், இஸ்லாமியர், முறங்கூடை பின்னுவோர் இவர்கள் வீடுகளில் நாயக்கர்வீட்டுப் பிள்ளைக்குத் தண்ணீர் தந்தனர். தடையில்லை, தயக்கமில்லை. இராமசாமியின் பெற்றோர் அறிந்தால் வெறுப்பார்களே என்று அவர்கள் அஞ்சிய போது, இராமசாமியோ அச்சம் தேவையில்லை என்றார். நாட்கள் செல்லச் செல்ல இராமசாமியின் செயல் இந்தத் துறையில் தீவிரமடைந்தது. தண்ணீரில் தொடங்கியவர், தின்பண்டங்கள் அருந்துவது வரையில் துணிந்து சென்றுவிட்டார். இவர்கள் வீட்டுப் பிள்ளைகளுடன் அதிகம் நெருங்கிப் பழகவும் தொடங்கினார் இராமசாமி.
ஆச்சார அனுஷ்டானங்கள் மிகுந்து, வைதிக மனப்பாங்கு பெருகித், தம்மை உயர்வகுப்பு வைணவப் பார்ப்பனர் போன்றே கருதிக்கொண்டு வாழ்ந்துவந்த வெங்கட்ட நாயக்கரும், சின்னத் தாயம்மையாரும், தமது இளைய புதல்வனின் இந்த அடாத செயல்களைக் கேட்டுத் துடிதுடித்துப் போயினர். கண்டவர் வீடுகளில் சாப்பிடுவது தவறு எனக் கண்டித்துக் கோபித்தனர். பயன்தராது போகவே, மகனின் கால்களில் விலங்குக் கட்டைகளைப் பூட்டி வருத்தித் தண்டித்தனர்.
மூன்றாண்டுகள் திண்ணைப் பள்ளிக்கூடத்திற்கும், இரண்டாண்டுகள் ஆங்கிலம் போதிக்கும் பள்ளிக்கும், இராமசாமியைப் பெற்றோர் அனுப்பி வந்ததுகூட, அவர் படிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தால் அல்ல; வீட்டிலிருந்து தொந்தரவு தருவதை விட, எங்கோ வெளியில் சென்றுவிட்டாவது வரட்டுமே என்ற எண்ணத்தால்தான்!
பத்தாவது வயதிற்குள் பள்ளி ஆசிரியர்கட்கும் பெற்றோருக்கும் தீராத தலைவலியைத் தந்து வந்த இராமசாமி, தமது அய்ந்தாண்டுப் பள்ளி வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துக்கொண்டார். பிள்ளைக்குப் படிப்பு ஏறாது என்று கண்டறிய அய்ந்தாண்டுகள் பிடித்ததாம் அவர்கட்கு! படிப்பு ஏறவில்லை என்றாலும், தமது மகனின் அறிவுத்திறன், ஆற்றல், கூர்மை இவைகளில் தந்தையார்க்கு மெத்த நம்பிக்கையுண்டு. படிப்பில் கவனஞ் செலுத்தாவிடினும் இராமசாமியைத் தொழிலில் நுழைத்துவிட்டால், உழைத்து உயரும் தன்மை நிரம்ப அவருக்கு இருப்பதை, வெங்கட்ட நாயக்கர் உணர்ந்து, அவரைத் தமது ஏலமண்டிக்கே அழைத்துக்கொண்டார்.
தமது பன்னிரண்டாவது வயதிலேயே, இந்தச் செல்வந்தரின் திருக்குமாரன், மண்டிக்கடையில் மூட்டைகளில் குறிப்பு எழுதுதல், ஏலங்கூறுதல், சரக்குகளை உயர்ந்த விலைக்கு விற்றல், வாடிக்கையாளரை நழுவவிடாமல் பற்றுதல் ஆகிய செயல்களை மிகுந்த ஆர்வத்துடன் செய்து வந்தார். தந்தையார்க்கும் மகன்மீது பாசமும் பற்றும் வளரத் துவங்கின. மிகத் தேர்ந்த வணிகராக மாறிவந்தார் நமது ஈ.வெ. இராமசாமி!
வணிகராயினும், பிறவிக் குறும்பு குறைவாகிப் போகுமா? வைணவ மதவாதிகளின் புகலிடமாக அப்போதெல்லாம் வள்ளல் வெங்கட்ட நாயக்கரின் இல்லம் இலங்கியதே! வருவார் போவார் ஏராளம். சாதுக்கள், சந்நியாசிகள், பாகவதர்கள், பக்திமான்கள், வித்வான்கள், பண்டிதர்கள், சமயப் பிரச்சாரகர்கள் - இப்படி எந்த நேரத்திலும் வீடே அமர்க்களமாக விளங்கும். சைவ வைணவப் புராண இதிகாசக் கதாகாலட்சேபங்கள் அடிக்கடி நிகழும்.
இராமசாமிக்கு இவற்றைக் கேட்பதில் தனியானதொரு நாட்டம் பிறந்தது. தாமே படித்து அறியவில்லை எனினும் இராமாயணம், பாரதம், பாகவதம் மற்றும் புராணங்கள் இவற்றையெல்லாம் கேட்டறிந்தே தமது அறிவினைக் கூர்மையாக்கிக் கொண்டார். சமயக் கருத்துக்கள், சாத்திர சரித்திர தர்க்க வாதங்கள் யாவும் கேள்வி ஞானத்தினாலேயே உணர்ந்தார். இவற்றை அதிகமாகக் கேட்கக் கேட்க, அவருள்ளே எதிரிடையான பயன் உருவாகத் தொடங்கிற்று. தர்க்கத்திறன் வளர்ந்தது. ஏன்? எதற்காக? எப்படி? என்ற கேள்விகளை எழுப்பும். முனைப்பு பெருகிற்று. வாதம் புரியவேண்டும் என்று வேணவா எழுந்தது.
ஆதரவாளரின் அருமருந்தன்ன செல்வன், தம்மிடம் விதண்டாவாதம் பேசும்போது, பண்டிதர்கள் கோபித்துக்கொள்ள முடியாதே! அவர் கேள்விக்கு ஏற்ற பதிலைத் தந்திட அவர்களிடம் சரக்கு ஏது? தடுமாற்றம், தாறுமாறாகப் பிதற்றல், மாறுபடக் கூறல் இவைதாம் பதில்களாகக் கிடைத்து வந்தன இராமசாமிக்கு. விளையாட்டாகவும் பொழுதுபோக்காகவும் தொடங்கிய இந்த வேலையினால், நாளடைவில் இராமசாமிக்குக் கடவுள், மதம், சாஸ்திரம் இவற்றின்மீது நம்பிக்கையில்லாமலே போய்விட்டது!
நூல்களைப் பயிலாமலே கேள்வித்திறனால் கண்டாரைக் கதிகலங்கவைத்த இராமசாமி, அந்த இளம்பிராயத்தில் செய்த திருவிளையாடல்கள் பல. கடைவீதியில் இவரது மண்டிக் கடை. செல்லும் வழியில் இருந்தது ஓர் அய்யரின் கடை. தினந்தோறும் அவரிடம் வாதம் புரிவது இராமசாமிக்கு உற்சாகமான காரியம். எல்லாம் தலை விதிப்படி நடக்கும்; அவனன்றி ஓரணுவும் அசையாது என்பது அய்யரின் அசைக்க முடியாத நம்பிக்கை, இந்தக் கருத்தை ஆணித்தரமாக எடுத்துரைத்து இராமசாமியிடம் வாதாடுவார் அய்யர். ஒரு நாள் கடையின் முன்புறத்தில் தூக்கி நிறுத்தப்பட்டிருந்த தட்டியின் காலை இராமசாமி கீழே தள்ளிவிட்டார். தட்டி நழுவி அய்யரின் தலைமீது விழுந்து, பலத்த காயத்தை உண்டாக்கி விட்டது. தம்மைத் திட்டிக்கொண்டே, தாக்கத் துரத்திய அய்யரைப் பார்த்து, இராமசாமி, “இது தலைவிதிப்படி நடந்தது; எல்லாம் அவன் செயல்” என்று பதிலடி கொடுத்தார்.
இவ்விதம், இயல்பாகவே இவரிடம் இம்மாதிரியான அறிவார்ந்த பண்புகள் நிரம்பியிருந்தன. தாராளமாகவும், அஞ்சாமலும், தயக்கமின்றியும் வாதமிடும் துணிவு இருந்தது. தம் வீட்டில் நடைபெறும் மத நம்பிக்கைக் காரியங்கள் யாவுமே பொருளற்றவை; சடங்குகள் அர்த்தமில்லாதவை; செலவுகளெல்லாம் வீணானவை என்று இவர் பகுத்தறிவின் அடிப்படையில் சிந்தித்து வந்தார். சாதி வேறுபாடுகளால் சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வு மனப்பான்மைகளும், இவரது உள்ளத்தில் ஆழப் பதிந்ததால், அவை குறித்தும், இவர் தமது எண்ணத்தைத் தீவிரமாய்ச் செலுத்தி வந்தார்.
இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இராமசாமி தமது வாணிபத் தொடர்பிலும் மேலோங்கி வளர்ந்து வந்ததால், பெற்றோர் இவரை வெறுத்தொதுக்க இயலவில்லை. இராமசாமிக்கு இப்போது பதினெட்டாண்டுகள் முடிந்து, பத்தொன்பது வயது தொடங்கிற்று.
இந்தக் கால கட்டத்தில் தமது தந்தையார்க்கு இருந்து வந்த சமுதாயநிலை என்ன என்பதைப் பின்னாட்களில் ஈ.வெ.ரா. இப்படி எடுத்துக் காட்டுகிறார்: - “முன்பு எனது தகப்பனார் ஈரோட்டில் முனிசிபல் கவுன்சிலர், பிரபல வியாபாரி. சுமார் 100, 150 ரூபாய் இன்கம்டாக்ஸ் கட்டி வந்தவர். அவரை அக்காலத்தில் 12 ரூபாய் 15 ரூபாய் மாதச்சம்பளம் வாங்கும் முனிசிபல் பில்கலெக்டர் - பார்ப்பனன் வரிவிதிப்பு விஷயமாக ஒரு விண்ணப்பத்தை நேரில் பார்த்துப் பைசல் செய்ய மண்டிக்கடைக்கு வந்து கூப்பிட்டான். அப்படிக் கூப்பிட வந்தால் அவனைக் கண்டதும் என் தகப்பனார் எழுந்து “ராவால் ராவால தேவுடா (வரவேணும் வரவேணும் ஸ்வாமி)” என்று இருகை கூப்பிக் கும்பிட்டு, உட்காரச் சொல்லிவிட்டு நின்று கொண்டேயிருப்பார். அப்பார்ப்பன பில்கலெக்டர் தலையை ஆட்டிவிட்டு உட்கார்ந்துகொண்டு “ஏமிரா வெங்கட்ட நாயுடு போத்தாமா ஆ இண்டினி சூசேதானிக்கு (ஏண்டா வெங்கட்ட நாயுடு அந்த வீட்டைப் பார்க்கப் போகலாமா?)” என்று கூப்பிடுவான். என் தகப்பனார் ஆஹா என்று சொல்லி அங்கவஸ்திரத்தைத் தலையில் கட்டிக்கொண்டு அவன் பின்னால் புறப்பட்டுவிடுவார்.
ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு வந்தவுடன், மஞ்சள் மிளகாய் கருப்பட்டி வெல்லம் எல்லாம் ஒரு சாக்கில் கட்டி ஒரு பையனிடம் கொடுத்து, சுவாமிகள் வீட்டில் கொடுத்துவிட்டு வா என்று சொல்லி, அவனை வழி அனுப்புவார். இதை நானே நேரில் பார்த்திருக்கிறேன்.
இதே மாதிரி எவ்வளவு பெரிய மிராசுதாரையும் ஒரு வக்கீல் குமாஸ்தா பார்ப்பான் நாயிலுங் கீழாக மதித்து அடாபுடா என்று பேசுவான். இதுவும் நான் கண்ணால் பார்த்ததேயாகும்.”
சுயமரியாதை இயக்கத்துக்கு முன்பு, பார்ப்பனர்கள் நிலையும் உணர்ச்சியும் எப்படி இருந்தன? இப்போது எவ்வளவு மாற்றமடைந்துள்ளன என்பதை உணர்ந்தவர்களுக்கு இது நன்கு புரியுமே!