உள்ளடக்கத்துக்குச் செல்

சங்க இலக்கியத் தாவரங்கள்/016-150

விக்கிமூலம் இலிருந்து

புன்னை
கலோபில்லம் இனோபில்லம்
(Calophyllum inophyllum,Linn.)

குறிஞ்சிப் பாட்டில் ‘புன்னை’ ‘கடியிரும்புன்னை’ (93) எனப்படும். நூற்றுக்கணக்கான பாடல்களில் ‘புன்னை’ குறிப்பிடப் படுகின்றது. இது ஓர் அழகிய சிறுமரம். கடலோரப் பகுதியான நெய்தல் நிலத்தில் மிகுதியாக வளரும். இதன் அரும்புகள் வெள்ளிய முத்தை ஒத்தவை. மலரில் நறுமணம் மிகுதியாக வெளிப்படும். புன்னையைப் பற்றிய செய்திகளும் அங்ஙனமே மலிய வெளிப்பட்டுள்ளன. இப்பழந்தமிழ் மரத்தைத் ‘தமிழ் நாட்டிற்குரிய மரமன்று போலும்’ என்று காம்பிள் குறிப்பிட்டுள்ளார். இக்கூற்று உடனடியாக ஆய்தற்குரியது. தாவரவியல் அடிப்படையில் மறுத்தற்குரியதும் ஆகும்.

சங்க இலக்கியப் பெயர் : புன்னை
பிற்கால இலக்கியப் பெயர் : நாகம், புன்னை
உலக வழக்குப் பெயர் : புன்னை
ஆங்கிலப் பெயர் : அலெக்சாண்டிரியன் லாரெல்
தாவரப் பெயர் : கலோபில்லம் இனோபில்லம்
(Calophyllum inophyllum,Linn.)


புன்னை இலக்கியம்


ஐந்திணைக் கருப்பொருளைக் கூற வந்த இறையனார் அகப் பொருள் நூல், நெய்தல் திணைக்கு மரம் புன்னையும், ஞாழலும், கண்டலும் என்று குறிப்பிடுகின்றது. புன்னையைப் பற்றிய செய்திகள் சங்க இலக்கியத்தில் நூற்றுக்கணக்கான பாடல்களில் காணப்படுகின்றன. பத்துப்பாட்டில் ஒரு சில பாக்களில் இடம் பெறும் ‘நாகம்’ என்பதற்கு நச்சினார்க்கினியர் ‘சுரபுன்னை’ என்று உரை கூறியுள்ளாரெனினும், மலைபடுகடாத்தில் ‘நாகம் திலகம் நறுங்காழ் ஆரம்’ (520) என்ற அடியில் வரும் ‘நாகம்’ என்பதற்குப் ‘புன்னைப்பூ’ என்று உரை எழுதியுள்ளார். இவ்வாறு இவர் நாகத்திற்கு இரு பொருள் கூறியது எதனால்?

பிங்கல நிகண்டு[1] ஒரு சொல்லுக்குப் பல்பொருள் கூற வந்தவிடத்து “நாகமென் கிளவி . . . . புன்னையும் . . ஆகும்” என்று கூறுகின்றது. சூடாமணி நிகண்டு[2], “புன்னை, புன்னாகம், நாகம், வழை, சுரபுன்னைப்பேரே” எனச் சுரபுன்னையை ‘வழை’ எனவும், ‘நாக’மெனவும், ‘புன்னை’ எனவும் குறிப்பிடுகின்றது. ஆகவே, எந்நிலம் மருங்கின் பூவையுங் கூறும் கபிலர், குறிஞ்சிப் பாட்டில் ‘கொங்கு முதிர்நறுவழை’ என்று கூறிப் புன்னையைக் ‘கடியிரும் புன்னை’ எனக் குறிப்பிட்டமையானும், ‘வழை’ என்பதற்குச் சுரபுன்னை எனத் தாம் உரை வகுத்து விட்டமையானும், ‘நரந்தம் நாகம் நள்ளிருள் நாறி’ (குறிஞ். 94) என்றவிடத்தில் ‘நாகம்’ என்பது சுரபுன்னையைக் குறித்தலாகாதெனக் கொண்டு ‘நாகப்பூ’ என்று உரை கண்டு விட்டு, இதற்கு விளக்கங் கூறும் முகத்தான் மலைபடுகடாத்தில் வரும் நாகமென்பதற்குப் ‘புன்னை’ என்று உரை கண்டார் போலும்; இருப்பினும் குறிஞ்சிப் பாட்டில் வரும் ‘நாகம்’ என்பதற்கு ‘நாகப்பூ’ என்றும், மலைபடுகடாத்தில் வரும் ‘நாகம்’ என்பதற்குப் ‘புன்னைப்பூ’ என்றும் உரை கூறுவதால், இவ்விரண்டும் வெவ்வேறு மரங்களோ என ஐயுறுதல் வேண்டாம். மாறாக இதனை வலியுறுத்துமாப் போல, ‘உருகெழு உத்தி உருகெழு நாகம்’ (பரிபா. 12 : 4) என்ற அடியில் வரும் ‘நாகம்’ என்பதற்குப் பரிமேலழகர் ‘நாகமரம்’ என்று உரை கூறுவாராயினர். சங்க இலக்கியத்தில் கூறப்படும் ‘நாவல் மரம்’ ‘நாக மரம்’ அன்று என்பதும், இங்கு உணர்தற்பாற்று. ஆகவே, புன்னை என்பதற்கு நாகமென்ற பெயரும் உண்டெனக் கோடல் அமையும்..

‘புன்னை’ என்பது ஒரு சிறு மரம். நெய்தல் நிலத்து மரமாகப் பெரிதும் பேசப்படுகின்றது. அகநானூற்றில், பத்துப் பத்தான எண்ணிக்கையில் அமைந்த 40 நெய்தல் திணைப்பாக்களில் பெரும்பாலானவற்றிலும், பிறவற்றிலும் ‘புன்னை’ குறிக்கப்பட்டுள்ளது. இது நெய்தல் திணைக்குரிய ‘ஞாழலோடு’ இணைத்துப் பாடப் பெற்றுள்ளது.

“. . . . . . . . . . . . . . . . . . புன்னையொடு
 ஞாழல் பூக்கும் தண்ணம் துறைவன்”
-ஐங். 103 : 1-2

“ஒள்ளிணர் ஞாழல் முனையின் பொதி யவிழ்
 புன்னையம் பூஞ்சினை சேக்கும்”
-ஐங். 169 : 2-3

“பொன்னீ ஞாழலொடு புன்னை வரிக்கும்
 கானல் அம்பெருந் துறை”
-அகநா. 70 : 9-10

“நறுவீ ஞாழலொடு புன்னை தாஅய்”-குறுந். 318 : 2

மேலும், புன்னை மரம் தாழையொடும் வளரும் என்பர்:

“மன்றப் புன்னை மாச்சினை நறுவீ
 முன்றில் தாழையொடு கமழும்”
-நற். 49 : 8-10

“தாழை மணந்து ஞாழலொடு கெழீஇ
 படப்பை நின்ற முடத்தாள் புன்னை”
-அகநா. 180 : 12-14

“தெரியிணர் ஞாழலும் தேங்கமழ் புன்னையும்
 புரிஅவிழ் பூவின கைதையும் செருந்தியும்”
-கலி. 127 : 1-3

நெய்தல் நிலப்பாங்கான கடற்கரை ஓரத்திலும், உப்பங்கழிக் கரையிலும் புன்னை மரம் வளரும். அதன் வேர்கள் கடல் அலைகளால் அரிப்புண்டு புன்னை மரம் நிற்பதையும், அதன் கரிய கிளைகள் வளைந்து நிலத்தில் தோய்ந்து நிற்பதையும், குன்றன்ன பெரிய மணற்பாங்கில் புன்னை வளர்வதையும் புலவர்கள் பாடியுள்ளனர்:

“ . . . . . . . . . . . . . . . . . . . மயங்கு பிசிர்
 மல்கு திரைஉழந்த ஓங்குநிலைப் புன்னை”

-அகநா. 250 : 1-2

“எக்கர்ப் புன்னை இன் நிழல் அசைஇ”-அகநா. 20 : 3

“பெருங்கடற் கரையது சிறு வெண்காக்கை
 கருங்கோட்டுப் புன்னை தங்கும்”
-ஐங். 161

“உரவுத் திரைபொருத திணிமணல் அடைகரை
 நனைந்தபுன்னை மார்ச்சினை தொகூஉம்”
-குறு. 175 : 2-3

“குன்றத் தன்ன குலவுமணல் அடைகரை
 நின்ற புன்னை நிலந்தோய் படுசினை”
-குறு. 236 : 3-4

“கரையன புன்னையும்”-பரிபா. 11 : 17

மற்றும் தமிழ்நாட்டின் கீழ்க்கடற்கரையில் புன்னை வளர்ந்து வந்தமையின், கிழக்கில் இருந்து வீசும் கடற்காற்றால் நாள்தோறும் இம்மரம் தாக்கப்படும். இதனால் இதன் கிளைகள் மேற்கு நோக்கி வளைந்து வளரும். இதனை உற்று அறிந்த புலவர்கள் அங்ஙனமே கூறுவர்:

“புன்னை பூத்த இன்நிழல் உயர் கரைப்
 பாடு இமிழ் பனிக் கடல் துழைஇ
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
 மேக்குயர் சினையின் மீமிசைக் குடம்பை”
-நற். 91 : 2-6

“விருந்தின் வெண்குருகு ஆர்ப்பின் ஆஅய்”-நற். 167 : 2

நெய்தல் நிலத்தில் புன்னை மரங்கள் செறிந்திருப்பதைப் புன்னையங்கானல், புன்னைத்துறை, புன்னையம் பொதும்பு, புன்னைய நறும்பொழில், புன்னைய முன்றில் என்றெல்லாம் கூறுவர்.

இதன்பருத்த அடி மரத்தையும், கிளைகளையும், இதன் நிறத்தையும் பற்றிய குறிப்புகள் சில உள:

“பராஅரைப் புன்னை வாங்குகிளை தோயும்
 கானல் அம்பெருந் துறை”
-அகநா. 270 : 6-7

பராஅரைப் புன்னைச் சேரி”-நற். 145 : 9

படுகாழ் நாறிய பராஅரைப் புன்னை” -நற். 278 : 1

கருங் கோட்டுப் புன்னை”-நற். 67 : 5

நீல்நிறப் புன்னை”-நற் 4 : 2 ; 168 : 8

கருந்தாட் புன்னை”-நற். 231 : 7

பனிஅரும்பு உடைந்த பெருந்தாட் புன்னை”-நற். 87 : 6

எல்லி அன்ன இருள் நிறப்புன்னை”-நற். 354 : 5

பருத்த புன்னையின் அடி மரம் பற்றிய ஒரு நற்றிணைப் பாடல் நயத்தற்குரித்து. தலைவன் குறித்த குறியிடத்துத் தலைவியும், தோழியும் வந்து காத்திருக்கின்றனர். நெடுநேரங் கழித்துத் தலைவன் வருகிறான். அவனது தேரில் கட்டிய மணியோசை அவன் வரவினை அறிவிக்கின்றது. அதனைக் கேட்ட தோழி, தலைவியிடம் கூறுகின்றாள்: “தலைவன் நினது நலம் பாராட்டக் குறியிடத்து வருகின்றான். எனினும் இதுகாறும் வாராது நம்மை நடுங்க வைத்தான். ஆதலின், நமது மனையருகில் வளைந்த குடமுழாப் போன்ற அடியினையுடைய கரிய புன்னையின் அடி மரத்தின் பின்னே சென்று மறைந்து கொள்வோம். அப்போது நம்மைக் காணானாகி அல்லல்படும் அவனது துன்பத்தையும் சிறிது காண்போம். வருவாயாக!” என்கிறாள்.

“திதலை அல்குல் நலம் பாராட்டிய
 வருமே தோழி வார்மணற் சேர்ப்பன்
 இற்பட வாங்கிய முழவு முதிர்புன்னை
 மாஅரை மறைகம் வம்மதி பானாள்
 பூவிரி கானல் புணர்குறி வந்துநம்
 மெல்லிணர் நறும் பொழிற் காணாதவன்
 அல்லல் அரும்படர் காண்கநாம் சிறிதே”
-நற். 307 : 4-10

மேலும் இதன் அடிமரத்தை. ‘நெடுங்காற்புன்னை’, கொடுங்காற் புன்னை, ‘முடத்தாள் புன்னை’ என்றும் கூறுவர்.

இம்மரத்தையும் இதன் கருங்கிளைகளில் தழைத்த இலைகளையும், முத்தன்ன வெள்ளிய அரும்புகளையும், அழகிய மலர்களையும் புலவர்கள் கண்டு உவந்து சுவைத்துப் பாடியுள்ளனர். இம்மரம் சாதாரண உயரமானது. இதன் அகன்ற தடித்த இலைகள் கரும் பச்சை நிறமாக இருக்கும். அதனால், மரமே நீல நிறமாகக் காணப்படும். இதன் நிழலில் மக்கள் அமர்ந்து இளைப்பாறுதல் உண்டு. இம்மரம் காதலர்கட்கு இரவுக்குறி பகற்குறி இடமாகவும். விளையாட்டயருமிடமாகவும் அமைந்துள்ளது. இம்மரத்திலும் இதன் பொதும்பரிலும் குருகு வந்து தங்கி இறை கொண்டு இருத்தலும் கூறப்படும்.

“நீல்நிறப் புன்னைக் கொழுநிழல் அசைஇ”-நற். 4 : 1-2

“நீல்நிறப் புன்னைத் தமிஒண் கைதை”-நற். 163 : 8

“அகல் இலைப்புன்னை புகர் இல் நீழல்
 பகலே எம்மோடு ஆடி”
-அகநா. 370 : 2-7

. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . வீஉகப்
 புன்னை பூத்த இன்நிழல் உயர்கரை”
-நற் 91 : 1-2

“ஓங்கு இரும்புன்னை வரிநிழல் இருந்து
 தேங்கமழ் தேறல் கிளையொடு மாந்தி”
-நற். 388 : 7-8

“இரவுஅருந்தி எழுந்த கருங்கால் வெண்குருகு
 வெண்கோட்டு அருஞ்சிறைத் தாஅய் கரைய
 கருங்கோட்டுப் புன்னை இறைகொண் டனவே”

-நற். 67 : 3-5

“பொதும்பில் புன்னைச் சினைசேர்பு இருந்த
 வம்ப நாரை இரீஇ ஒருநாள்”
-அகநா. 190 : 6-7

“புன்னைஅம் பொதும்பில் இன்நிழல் கழிப்பி”
-அகநா. 340: 2

“பூவிரி புன்னைமீது தோன்று பெண்ணைக்
 கூஉம் கண்ணஃதே தெய்ய”
-அகநா. 310 : 12-13

“புன்னை நறும்பொழில் செய்த நம்குறியே”
-அகநா. 360 : 19

“மின்இலைப் பொலிந்த விளங்குஇணர் அவிழ்பொன்
 தண்நறும் பைந்தாது உறைக்கும்
 புன்னையங் கானல் பகல் வந்தீமே”
-அகநா. 80 : 11-13

மேலும், புன்னையைக் குறியீட்டிடமாகக் குறிக்கும் ஒரு நயம் மிக்கப் பாடலைக் குறிப்பிட வேண்டும்.

நெய்தல் நிலத் தலைமகள் ஓர் அழகிய புன்னை மர நிழலைப் பகற்குறியிடமாகக் கருதி வருகின்றான். அவனை வரைவு கடாவுங் குறிப்பில் தோழி கூறுகின்றாள். “காதல் தலைவ! இன்று ஏன் புதிதாக இந்த இளைய மரத்தின் அடியில் நிற்கின்றாய்? இப்புன்னையைப் பற்றிய வரலாற்றை நீ அறியாய்! இஃது ஒரு தனிச் சிறப்புடையது; எங்களால் வளர்க்கப்பட்டது. தலைவியும், யானும் தோழிகளுடன் இளமையில் இங்கு விளையாடினோம். அப்போது ஒரு புன்னைக் கொட்டையை விளையாட்டாக மணலுக்குள் அழுத்திப் புதைத்தோம். ஒரு நாள் அது முளைத்து விட்டது. அதன்பால் எங்களுக்கு ஒரு பரிவுண்டாயிற்று. அதனால் எங்களுக்கு ஊட்ட வந்த நெய்யையும், பாலையும் அதற்கு ஊற்றி, ஊட்டி வளர்த்தோம். எங்களுடைய அன்னை ஒரு நாள் இப்பக்கம் வந்தனள். இவ்வளர்ப்புப் புன்னையைப் பார்த்து மகிழ்ந்தாள். எங்களிடம் அன்னை ‘உங்களால் வளர்க்கப்பட்டபடியால் இப்புன்னை எனக்கு உங்களைக் காட்டிலும் சிறந்ததாகப் படுகின்றது. உங்களால் வளர்க்கப்பட்ட இவள் உங்களுக்குத் தங்கையாவாள்’ என்று கூறிப் புன்னையின் சிறப்பைப் பாராட்டினாள். அதனால், இப்புன்னை எங்கள் தங்கை ஆவாள். தங்கை இருக்க அம்மாவோ! நாணுதும்! இப்புன்னையடியிலா தலைவியுடன் குலவுதல் கூடும்? நினைக்கவே எனக்கு நாணமாக உள்ளது. நீ நல்குவையாயின், வேறு தழைத்த மரத்து நிழல் இல்லையோ?” என்று நயம்படவுரைத்துப் பகற்குறி மறுக்கின்றாள்.

விளையாடு ஆயமோடு வெண்மணல் அழுத்தி
மறந்தனம் துறந்த காழ்முளை அகைய
நெய்பெய் தீம்பால் பெய்தினிது வளர்த்தது
நும்மினும் சிறந்தது நுவ்வை யாகுமென்று
அன்னை கூறினள், புன்னையது நலனே
அம்ம! காணுதும் நும்மொடு நகையே;
விருந்தின் பாணர் விளர்இசை கடுப்ப
வலம்புரி வான்கோடு நரலும் இலங்கு நீர்த்
துறைகெழு கொண்க! நீ நல்கின்
இறைபடு நீழல் பிறவுமார் உளவே
-நற். 172

விளர்-மெல்லிய, நரலும்-ஒலிக்கும்.

இப்புன்னை மரத் தொடர்பான வரலாற்று நிகழ்ச்சி ஒன்று அகநானூற்றில் இடம் பெற்றுள்ளது.


திதியன் என்னும் குறுநில மன்னன் குறுக்கை என்ற நகரில் இருந்து ஆண்டு வந்தான். அவனுடைய காவல் மரம் புன்னை. திதியனோடு, அன்னி என்னும் குறுநில மன்னன் பகை கொண்டான். திதியனுடைய காவல் மரமாம் புன்னையை வெட்டி வீழ்த்தி, அவனை அவலப்படுத்த எண்ணினான். இதனையறிந்த அன்னியின் அரிய நண்பன் என்னி என்பான், அன்னியைத் தடுத்தான். அன்னி, என்னியின் நல்லுரையைக் கேளாது குறுக்கை நகரைத் தாக்கினான். திதியனது காவல் மரமாகிய புன்னையை வெட்டி வீழ்த்தினான். அதனைக் கண்ட அன்னியைச் சேர்ந்த பாணர் இசை முழக்கி, ஆரவாரம் செய்தனர். (அகநா: 45 : 9-12) தனது காவல் மரம் வெட்டப்பட்டதைப் பொறாத திதியன் வெகுண்டு போரிட்டு, அன்னியை வீழ்த்தினான். ஆயினும், அவனுடைய புன்னை மரம் அன்னியால் வீழ்த்தப்பட்டு அவலம் எய்தியது. இங்ஙனம் துன்பியல் நிகழ்ச்சிக்கு ஆளாகிய புன்னை மரம் புறத்திணையியல் வரலாற்றைப் பெற்றது. இந்நிகழ்ச்சியை அகத்திணையியலுக்கு ஏற்றிய கயமனாரின் திறன் போற்றுதற்குரியது.

அன்னியால் அவலப்பட்ட இப்புன்னைத் தொடர்புடைய இன்னொரு பாடலையுங் காண்போம்:

களவியற் செவ்விக்கு ஆட்பட்ட ஒரு தலைமகளின் களவொழுக்கம் செவிலித் தாய்க்குப் புலனாயிற்று போலும். அவளது ஐம்பாலாம் கவினுற்ற கூந்தலைப் பற்றிக் கொண்டு எறிகோல் சிதையுந்துணையும் அவளுடைய சிறுபுறத்தில் புடைத்தாள். அதற்குச் சிறிதும் தளராது நின்ற தலைவி, ஒரு நாள் காதலனுடன் போய் விட்டாள். மகட் போக்கிய செவிலி, மனம் புழுங்கிச் சொல்கின்றாள்:

“சிறிதும் அருளின்றி அன்று எனது அமர்க்கண்ணுடைய அருமந்த மகளை அடித்த எனது கை, அன்னியால் வீழ்த்தப்பட்டு அவலமெய்திய புன்னையைப் போலக் கடுந்துயர் உழப்பதாக” என்று,

ஆள்இல் அத்தத்து அளியள் அவனொடு
... ... ... ... ...
அருஞ்சுரம் இறந்தனள் என்ப பெருஞ்சீர்
அன்னி குறுக்கைப் பறந்தலை திதியன்
தொல்நிலை முழுமுதல் துமியப் பண்ணிய
நன்னர் மெல்லிணர்ப் புன்னைபோல
நடுநவைப் படீஇயர் மாதோ-களிமயில்
... ... ... ... ... ... ... . . . . . . . .. . . . . . . . .. . .ஐம்பால்
சிறுபல் கூந்தல் போதுபிடித்து அருளாது
எறிகோல் சிதைய நூறவும் சிறுபுறம்
‘எனக்குரித்து’ என்னாள் நின்ற என்
அமர்க்கண் அஞ்ஞையை அலைத்த கையே

(நூற-புடைக்க, அஞ்ஞை-மகள்)
-அகநா. 145 : 6-10 : 22


புன்னைக்கு அவலமிழைத்த அன்னியும், திதியனால் அவலமெய்தினான். இச்செய்தியை நக்கீரரும், அல்ல குறிப்பட்ட தலைவன் கூற்றாக அகத்திணையியலுக்கு ஏற்றிப் பாடியுள்ளார்.

“பொன்னிணர் நறுமலர்ப் புன்னை வெஃகித்
திதியனொடு பொருத அன்னி போல
விளிகுவை கொல்லோ நீயே!
... ... ... ... ... ... ...
மின் நேர் மருங்குல் குறுமகள்
பின்னிலை விடாஅ மடம்கெழு நெஞ்சே”

-அகநா. 126 : 15-21, 22


இங்ஙனம் வரலாறு படைத்த புன்னையைப் பாடிய பல்லோருள்ளும் உலோச்சனார் நனி சிறந்தவர். இவர் புன்னை மரத்தைத் தாவரவியற் புலவரே போல், புன்னையின் ஓவியந் தருகின்றார். புன்னையின் கரிய கிளைகள் இரும்பை ஒத்த வலிவுடையன. கரும்பச்சை இலைகள், நீல நிறத்தன. வெள்ளி போன்ற பூங்கொத்தின் உள்ளே விளைந்த பொன் போன்ற நறிய தாது, உதிரா நிற்கும். அதில் புலியினது புள்ளியைக் கொண்ட அழகிய வரிவண்டுகள் ஊதி மொய்க்கும்:

இரும்பின் அன்ன கருங்கோட்டுப் புன்னை
நீலத்து அன்ன பாசிலை அகம்தொறும்
வெள்ளி அன்ன விளங்கு இணர்நாப்பண்
பொன்னின் அன்ன நறுந்தாது உதிர
புலிப்பொறிக் கொண்ட பூநாறு குரூஉச்சுவல்
வரிவண்டு ஊதலின் ............. . . . . . .. . .

-நற். 249 : 1-6


புன்னையின் இலை தடிப்பானது; கரும்பச்சை நிறமானது; நீள்வட்ட வடிவமானது; மேற்புறம் வழவழப்பும் பளபளப்பும் உடையது; கதிரொளியில் மின்னல் போலப் பளிச்சிடும்; அரும்புகள் வெண்ணிறமானவை; உருண்டை வடிவானவை; நிறத்தாலும், வடிவாலும் முத்தை ஒத்தவை என்பர் புலவர்கள்:

“மின் இலைப் பொலிந்த”-அகநா. 80 : 11

“மின் இலைப் புன்னை”-குறுந். 5 : 2

“முத்தம் அரும்பும் முடத்தாள் முதுபுன்னை”[3]

“நெடுங்கால் புன்னை நித்திலம் பூப்பவும்”-சிறுபா. 149

புன்னையரும்பு முத்துப் போன்ற நல்ல வெண்ணிறமுடையதன்று. சற்று மங்கிய வெண்மையாக இருக்கும். இதனையுட் கொண்ட நெடுஞ்சேரலாதனும், இளந்திரையனாரும், கழுவித் தூய்மை செய்யாத முத்தை ஒத்தது புன்னையரும்பு என்பாராயினர்:

“மண்ணா முத்தம் அரும்பிய புன்னை”-அகநா. 30 : 13

“மண்ணாப் பசுமுத்து ஏய்ப்பக் குவியிணர்
 புன்னை அரும்பிய புலவுநீர்ச் சேர்ப்பன்”
-நற். 94 : 5-6

புன்னை மலரில் தாது நிறையத் தோன்றுவதால், மலரின் நிறமே பொன்னாகத் தோன்றும். தாது நறுமணமுடையது; நுண்ணியது; பொன்னிறமானது.

“புன்னை நறுவீ பொன்னிறம் கொளாஅ”
-அகநா. 260 : 9

“.... .... .... .... .... .... போதவிழ்
 பொன்னிணர் மரீஇய புள்இமிழ்ப் பொங்கர்ப்
 புன்னையஞ்சேரி”
-குறுந். 320 : 5-7

“.... .... .... .... .... .... முடத்தாட்புன்னை
 பொன்நேர் நுண்தாது நோக்கி”
-அகநா. 180 : 13-14

“புன்னை நுண்தாது பொன்னின் நொண்டு”
-அகநா. 230 : 7


புன்னை மலர் மிக அழகானது; நறுமணமுள்ளது; வெண்ணிற அகவிதழ்களை உடையது; மலர்ந்த புன்னையில் பொன்னிறத் தாது மிளிரும். அகவிதழ்களுக்கடியில் தேன் சொரியும். இதன் அழகை நுகர்ந்த புலவர்கள் அங்ஙனமே கூறுவர். இதில் தேன் நுகர்ந்த வண்டுகள் ஒலித்து நிற்கும். உதிர்ந்த மகரந்தம் இளமணலை மணங்கொள்ளும்.

“கடிமலர்ப் புன்னை”

“ஆய்மலர்ப் புன்னை”

“திகழ்மலர்ப் புன்னை”-கலி. 135 : 6, 8, 12

“தேனிமிர் நறு மலர்ப்புன்னை”-அகநா. 170 : 2

“மல்குதிரை உழந்த ஓங்குசினைப் புன்னை
 வண்டு இமிர் நுண்தாது பரிப்ப
 மணங்கொள் இளமணல் எக்கர்”
-அகநா. 250 : 2-4

“கருங்கோட்டுப் புன்னை மலர்த்தாது அருந்தி
 இருங்களிப் பிரசம் ஊத”
-நற். 311 : 9-10

“கடியிரும் புன்னை”-குறிஞ். 93”

இப்புன்னை மரம் தன் கிளைகளை மணலில் படியும் அளவிற்குத் தாழப் பரப்புவதால், மகளிர் கூட்டம் இதன் பூக்களை எளிதில் கொள்ளும் என்பர்:

“நின்ற புன்னை நிலந்தோய் படுகிளை”யின்
“தாதுசேர் நிகர்மலர் கொய்யும் ஆயம்”, ஆடவரும்
“இதன் மெல்லிணர்க் கண்ணி மிலைந்தனர்.”

மேலும், இம்மலர் புலாலின் கெடு நாற்றத்தைப் போக்கவும் செய்யும். சேரியை மணங்கமழச் செய்யும். ஆடவரும், மகளிரும் கொய்து கொண்டு எஞ்சிய மலர்கள், பசிய காயாகிக் காய்த்துத் தொங்கும் என்பர் உலோச்சனார்:

“படுகாழ் நாறிய பரா அரைப்புன்னை
 அடுமரம் மொக்கிளின் அரும்பு வாய் அவிழ
 பொன்னின் அன்ன தாது படுபல் மலர்
 சூடுநர் தொடுத்த மிச்சில் கோடுதொறும்
 நெய்கனி பசுங்காய் தூங்கும் துறைவனை”

-நற். 278: 1-5


மேலும், புன்னைக் கொட்டையில் எண்ணெய் உண்டாகுமென்பதையும் அறிவிக்கின்றார் இப்புலவர்.

கட்டிபெரே’ என்னும் புன்னையின் துணைக் குடும்பத்தில் ஐந்து பேரினங்கள் தமிழ்நாட்டில் உள்ளன என்பர் ‘காம்பிள்’. ‘கலோபில்லம்’ என்ற இதன் பேரினத்தில் நான்கு சிற்றினங்கள் தமிழ்நாட்டில் வளர்கின்றன. புன்னை மரம் தமிழ் நாட்டின் மேற்கு, கிழக்குக் கடலோரப் பகுதிகளில் வளர்கின்றது.

இதன் குரோமோசோம் எண்ணிக்கை: 2n = 32 என, டிக்கியர் (1953) கணக்கிட்டார்.

புன்னை மரம் உண்மையில் இந்திய நாட்டைச் சேர்ந்ததன்று போலும் என்கிறார் ‘காம்பிள்’. இக்கூற்று ஆய்தற்குரியது. பண்டைய சங்கச் சான்றோர், இதனைப் பலபடப் பாடியுள்ளனர். இது நெய்தல் நிலத்திற்குரிய மரம் ஆகும். இறையனார் களவியலுரையில் இம்மரம் நெய்தலின் கருப்பொருளான மரமென்று கூறுகிறது.

இந்த அழகிய மரம், தோட்டங்களில் வளர்க்கப்படுவதுண்டு. பெரிதும் கடற்கரைப்பகுதியில் தானே வளரும் இயல்பிற்று.

புன்னை தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : கட்டிபெரேலீஸ்
தாவரத் துணைக் குடும்பம் : கட்டிபெரே
தாவரப் பேரினப் பெயர் : கலோபில்லம் (Calophyllum)
தாவரச் சிற்றினப் பெயர் : இனோபில்லம் (inophyllum)
தாவர இயல்பு : சிறுமரம், அழகானது. இலை உதிராதது. என்றும் பசுமையாக இருக்கும். நன்கு கிளைத்துப் பரவி வளரும்.
இலை : நீள்முட்டை வடிவானது. 4-52-3 அங்குல நீளமானது. தடிப்பானது; தோல் போன்றது. மேற்புறம் பளபளப்பானது.
நரம்பு : நடு நரம்பு எடுப்பானது. இதில் 90° கோணத்தில் இரு பக்கமும் பல கிளை நரம்புகள் காணப்படும்.
மஞ்சரி : கலப்பு மஞ்சரி. கொத்தாகப் பூக்கும். இலைக்கோணத்திலும் கிளை நுனியிலும் உண்டாகும்.
மலர் : மொட்டு - முத்துப் போன்றது. அழகானது. சிறிது மங்கிய வெண்ணிறமானது. மலர் வெண்மையானது.
புல்லி வட்டம் : 4 புறவிதழ்கள் ஒன்றோடொன்று தழுவிய அமைப்பானது.
அல்லி வட்டம் : 4 புல்லி இதழ்களைப் போன்ற அமைப்புடையது. தூய வெண்ணிறமானது.
மகரந்த வட்டம் : பல தாதிழைகள் அடியில் குவிந்திருக்கும். தாதுப்பை நேரானது. நீட்டு வாக்கில் வெடித்துத் தாதுக்களை வெளிப்படுத்தும். தாது மஞ்சள் நிறமானது.

புன்னை
(Calophyllum inophyllum)

சூலக வட்டம் : ஓரறைச் குலகம்; சூல் தண்டு மெல்லியது. சூல்முடி வட்டமானது. அடியில் இணைந்தது. ஒரு சூல் முதிரும்.
கனி : காய் உருண்டை வடிவானது. பசுமையானது. கனியை ட்ரூப் என்பர். சதைக்கனி; கனி உறை சதைப்பற்றானது.
விதை : ஓர் அங்குல உருண்டையானது; வலியது.

இதன் அடிமரம் வலியது. செம்பழுப்பு நிறமானது. பெரிதும் மரவேலைக்குப் பயன்படும். விதையிலிருந்து ஒரு வித எண்ணெய் எடுக்கப்படுகிறது. எண்ணெய் விளக்கெரிக்கப் பயன்படுகிறது.


  1. பிங்கல நிகண்டு : 3717
  2. சூடாமணி நிகண்டு : 4. ம. பெ. தொகுதி 4
  3. திணைமொ. ஐ: 50