உள்ளடக்கத்துக்குச் செல்

சங்க இலக்கியத் தாவரங்கள்/031-150

விக்கிமூலம் இலிருந்து

தேமா
மாஞ்சிபெரா இன்டிகா (Mangifera indica,Linn.)

கபிலர் மாமரத்தைத் ‘தேமா’ என்று குறிப்பிடுகின்றார் (குறிஞ். 64). தேமாங்கனி வாழை, பலா, மா முதலிய முக்கனிகளுள் ஒன்றாகும். தேமா மரம் ஏறக்குறைய ஆறாயிரம் ஆண்டுகளாக இந்திய நாட்டில் பயிரிடப்படுகிறது என்கிறார் ஆல்பர்ட் எப். ஹில் (Albert F. Hill) என்பார்.

சங்க இலக்கியப் பெயர் : தேமா, மா
பிற்கால இலக்கியப் பெயர் : மா
உலக வழக்குப் பெயர் : மாமரம்
தாவரப் பெயர் : மாஞ்சிபெரா இன்டிகா
(Mangifera indica,Linn.)

தேமா இலக்கியம்

சங்கத் தமிழிலக்கியத்தில் தலை சிறந்ததெனக் கருதப்படும் குறிஞ்சிப் பாட்டில் கபிலர் தேமா, கலிமா என்று இரு மாமலர்களைக் கூறுகின்றார்.

“செங்கொடுவேரி தேமா மணிச்சிகை”-குறிஞ். 64
“கரந்தை குளவி கடிகமழ் கலிமா”-குறிஞ். 76

இவ்வடிகளிலுள்ள ‘மா’விற்கு நச்சினார்க்கினியர் முறையே ‘தேமாம்பூ’ என்றும், விரைகமழத் தழைத்த மாம்பூ என்றும் உரைகண்டார். இவையிரண்டும் தேமாம்பூவினையே குறிக்கும் எனல் பொருந்தாது. என்னை? கபிலர் கூறியது கூறார் ஆகலின் என்க. ஆகவே, ‘தேமா’ என்பது இனிய மாவினையும், கலிமா என்பது புளிமாவினையும் குறித்தல் கூடும். எனினும் இது சிந்திக்கற்பாலது. சங்கத் தமிழில் தேமாவைப் போல, புளிமாவைப் பற்றிய குறிப்புகள் காணுதற்கில்லை.

தேமாவும் புளிமாவும் வெவ்வேறு தாவரக் குடும்பங்களைச் சார்ந்த மரங்களாகும். தேமாவை ‘மாஞ்சிபெரா இன்டிகா’ (Mangifera indica, Linn.) என்றும், புளிமாவை ‘அவெர்கோயா பிலிம்பி’ (Averrhoa bilimbia, Linn.) என்றும் கூறுப. தேமா மரம் ‘அனகார்டியேசீ’ (Anacardiaceae) என்ற தாவரக் குடும்பத்தையும், புளிமா மரம் ‘ஆக்சாலிடேசீ’ (Oxalidaceae) என்ற தாவரக் குடும்பத்தையும் சார்ந்தவை. தேமா மரத்தைத்தான் நாம் மாமரமென்று அழைக்கின்றோம். புளிமா மரத்தைப் புளிச்சக்காய் மரமென்று இந்நாளில் வழங்குவர். புளிமா மரம் சிறு மரம். இது தேமா மரம் போல அத்துணைப் பருத்து வளர்வதில்லை. தேமாங்காய் மாமரக் கிளைகளில் நுனியில் கணுக் குருத்தினின்றும் தோன்றி முதிர்வது. புளிமாங்காய் பலா மரத்தின் காய் போல அடி மரத்தில் தோன்றிக் காய்க்கும். தேமாங்காய் முதிர்ந்தால் பழுக்கும். புளிமாங்காய் பழுப்பதில்லை. தேமா பொதுவாகப் புளிப்புடன் இனிப்புடையது. புளி மாங்காய் புளிப்புடையது.

பழந் தமிழிலக்கித்தில் தேமாவைப் பற்றிய பல குறிப்புகள் உள்ளன. புளிமாவைப் பற்றிய செய்திகள் காணப்படவில்லை. எனினும், பிற்கால யாப்பிலக்கணத்தில் இவ்விரண்டும் சேர்ந்தே பயிலப்படும். யாப்பிலக்கணத்தில் சீர் என்பது செய்யுள் உறுப்பு ஆகும். அசையால் ஆக்கப்படும் அச்சீர் நான்கு வகைப்படும். இவை ஒரசை, ஈரசை, மூவசை, நான்கசை என்பன. குறிலாவது நெடிலாவது தனித்து வரினும் ஒற்றடுத்து வரினும், அவை நேரசையாகும். இரு குறில் தனித்தும், ஒற்றடுத்தும், குறில் நெடில் தனித்தும், குறில் நெடில் ஒற்றடுத்தும் வருவது நிரையசை ஆகும். இவற்றிற்குரிய வாய்பாடுகள் வருமாறு.

நேர் நேர் தேமா
நிரை நேர் புளிமா

ஈரசைச் சீராகிய இவை, மாச்சீர் எனவும் இயற்சீர் எனவும் அகவற்சீர் எனவும் கூறப் பெறும்.

நேர் நேர் நேர் தேமாங்காய்
நிரை நேர் நேர் புளிமாங்காய்

மூவசைச் சீராகிய இவை காய்ச் சீர் எனவும், வெண் சீர் எனவும் வெண்பா உரிச் சீர் எனவும் படும்.

நேர் நேர் நிரை தேமாங் கனி
நிரை நேர் நிரை புளிமாங் கனி

மூவசைச் சீரில் இவை கனிச் சீர் எனவும், வஞ்சிச் சீர் எனவும் கூறப்படும்.

நேர் நேர் நேர் நேர் தேமாந் தண் பூ
நிரை நேர் நேர் நேர் புளிமாந் தண் பூ
நேர் நேர் நிரை நேர் தேமா நறும்பூ
நிரை நேர் நிரை நேர் புளிமா நறும்பூ
நேர் நேர் நேர் நிரை தேமாந் தண்ணிழல்
நிரை நேர் நேர் நிரை புளிமாந் தண்ணிழல்
நேர் நேர் நிரை நிரை தேமா நறுநிழல்
நிரை நேர் நிரை நிரை புளிமா நறுநிழல்

இவை நான்கசைச் சீர்க்குரிய வாய்பாடுகளாகும். இங்ஙனமாகத் தேமாவும், புளிமாவும் பயிலப்படுகின்றன.

இவற்றுள் புளிமாவாகிய ‘அவர்கோயா பிலிம்பி’ இந்தியாவிலும், மலேசியா, பர்மா, இந்தோசைனா, இலங்கை முதலியவிடங்களிலும் வளர்கின்றது. ‘அவர்கோயா’ என்ற இப்பேரினத்தில் இரண்டு இனங்கள் தமிழ் நாட்டில் உள்ளன. புளிமா மரம் சற்றேறக் குறைய இருபது முதல் நாற்பது அடி உயரம் வரையில் ஓங்கி வளரும். இது அரிநெல்லி மரத்தைப் போன்றது. இலைகளும் அப்படியே இருக்கும். இதன் இலைகள் 5 முதல் 17 வரை சிற்றிலைகளை உடைய கூட்டிலைகளாகும். இக்கூட்டிலைகள் கலித்தும், மிகுத்தும் காணப்படும். காய்கள் நான்கு பட்டை உடையன. 5-6 செ. மீ. நீளமும், 3.5 முதல் 5 செ.மீ. அகலமும் இருக்கும். இக்காயில் உள்ள ஒரு வகையான அமிலம் (acid) மிகுந்த புளிப்பாக இருக்கும். இப்புளிமாங்காய்க்கெனவே இம்மரம் பல்வேறிடங்களில் பயிரிடப்படுகின்றது. உணவுக்குச் சாறு கூட்டும் போது புளிக்குப் பதிலாக இக்காய் பயன்படுகிறது. புளியாரை எனப்படும் செடிக்கு ஆக்சாலிஸ் கார்னிகுலேட்டா என்று பெயர். இதுவும் புளிமாவின் குடும்பத்தைச் சேர்ந்தது.

இச்சிறு மரத்தின் இலைகள் செழுமையுடன் மிகுந்தும், மலிந்தும் காணப்படுதலின், இதனைக் கலிமா என்றழைத்தனரோ என்று எண்ண இடந்தருகின்றது. ‘கடிகமழ் கலிமா’ என்று இதனைக் கபிலர் குறிப்பிடுவதும் ஈண்டு நோக்கற்பாலது. தேமா மரம் பூத்த பொழுதில் அதில் உண்டாகும் நறுமணத்தைப் போலவே புளிமா மரத்தின் பூவும் நறுமணமுடையதாகும்.

இச்சிறு மரத்தின் இலைகள் 2-5 இணையுடைய சிற்றிலைகளைக் கொண்ட கூட்டிலையாகும். நுனி வளரும் பூந்துனர்கள் அடி மரத்தில் உண்டாகும். மலர்கள் ஐந்தடுக்கானவை. இதன் காய்கள் வெளிர் மஞ்சள் நிறமானவை. 4-6 செ. மீ. நீளமும், 2.5-4 செ. மீ. பருமனும் உள்ள சதைப்பற்றானவை. 4-5 பட்டையாக இருக்கும். நல்ல புளிப்புள்ளவை. தமிழ் நாட்டில் தோட்டங்களிலும் பயிரிடப்படுகின்றது. இதைப் போன்று மற்றொரு சிற்றின மரமும் தமிழ் நாட்டில் வளர்கிறது. அதற்கு அவர்கோயா காரம்போலா (Averrhoa carambola) என்று பெயர்.

இவ்விரு சிறு மரங்களும் எந்த நாட்டைச் சேர்ந்தவை என்று தெரியவில்லை என்பர் தாவரவியலார். புளிமாவின் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 22 என மாத்தியூ (1958) என்பாரும், காரம்போலாவிற்கு 2n=24 என, கிருஷ்ணசாமி, இராமன் (1949) என்பாரும் கணிப்பர்.

மாம்பூ கொத்துக் கொத்தாகக் கணுக் குருத்தாகவும், நுனிக் குருத்தாகவும் அரும்பிப் பூக்கும். மிகச் சிறிய இப்பூவில் நான்கு அல்லது ஐந்து புறவிதழ்களும், நான்கு அல்லது ஐந்து அகவிதழ்களும் உள்ளன. ஒன்று முதல் ஐந்து தாதிழைகள் உண்டெனினும், ஒன்று அல்லது இரண்டில் மட்டும் தாது விளைந்து நிற்கும். தாதுப் பையை ஒட்டி நான்கு அல்லது ஐந்து தேன் சுரப்பிகள் இருத்தலின், மலர்களில் வண்டினம் சூழ்ந்து முரலும். இதனை,

“காமர் மாஅத்துத் தாதலர் பூவின்
 வண்டு வீழ்பு அயருங் கானல்”
-குறுந். 306 : 4-5

என்று கூறுவர். பூவின் கரு ஓர் சூலறையினது. பெரிதும் பிற மகரந்தச் சேர்க்கையினால்தான் கருமுதிர்ந்து காயாகும். மாமரத்தில் ஒரு வகையான பால் (Latex) உண்டாகும். மாவடுவில் இப்பால் மிகுதியாகப் பிலிற்றும். இரும்பினாலாய அரிவாள் கொண்டு மாவடுவை நேராகப் பிளந்து, சிறிது நேரங்கழித்துப் பார்த்தால், மாவடுவின் விதைப் பகுதி முழுவதும் கறுத்தும், சதைப்பகுதி வெண்ணிறமாகவும், கண் விழியை ஒத்து மிக அழகாகவும் காணப்படும். இதனை வண்ணமும், வடிவுங்கருதி மகளிர் கண்ணுக்கு உவமிப்பர்.

தேமா
(Mangifera indica)

“இளமாங்காய்ப் போழ்ந்தன்ன கண்ணினால் என்னெஞ்சம்
 களமாக்கொண்டு ஆண்டாய் ஓர்கள்வியை அல்லையோ”

-கலித். 108 : 28-29

“மாவடு வகிரன்ன கண்ணி பங்கா”[1]

என வருவன காண்க.

இரும்புக் கருவிகளைக் கொண்டு மாவடுவை அரியும் போது வடுவில் உள்ள பாலில் காணப்படும் காலிக் அமிலம் ( Gallic acid), ‘ஸ்டீரிக் அமிலம்’ (Stearic acid) என்ற அமிலங்கள் இரும்பில் பட்டவுடன் ஒருவகை ‘மைப்’ பொருளாகி விடும். இதனைப் பிரான்சு நாட்டு வேதி நூலறிஞர் கண்டு, பல சோதனைகளைச் செய்துள்ளார். மாவடுவின் தோலிலும் இதே பால் இருத்தலின், அப்பகுதியும் கறுப்பாகி. கண்ணுக்கு எழுதிய அஞ்சனம் போலத் தோன்றும்.

ஆல்பர்ட் ஹில் (Albert F. Hill) என்பார், தேமாவைப் பின் வருமாறு கூறுகின்றார். “வெப்பம் மிக்க நாடுகளில் தொன்று தொட்டுப் பயிரிடப் படுகின்ற பழந்தரு மரங்களில் மாமரம் தலையாயது. ஏறக்குறைய ஆறாயிரம் ஆண்டுகளாக இம்மரம் பயிர் செய்யப்படுகின்றது. இது இந்திய நாட்டின் புனிதமான மரமாகும்.” தென்னாசியக் கண்டத்தில் தோன்றிய இம்மரம் இப்பொழுது மலேசியா, பர்மா, பாலினேசியா, ஆப்பிரிக்கா, (வெம்மை மிகுந்த) அமெரிக்கா முதலிய நாடுகளில் ஏறக்குறைய ஐந்நூறு சிற்றின வகைகளாகப் பல்கிப் பயிராகின்றது. ஓர் ஆண்டிற்கு நூறாயிரம் டன் எடைக்கு மேலான மாம்பழம் உலகில் விளைகின்றது.

தேமா தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : பைகார்ப்பெல்லேட்டே (Bicarpellatae)
தாவரக் குடும்பம் : அனகார்டியேசீ (Anacardiaceae)
தாவரப் பேரினப் பெயர் : மாஞ்சிபேரா ((Mangifera)
தாவரச் சிற்றினப் பெயர் : இன்டிகா (indica)
தாவர இயல்பு : பெரிய மரம். கிளைத்து, உயர்ந்து, பல்லாண்டு வளரும். 20மீ உயரமான பசிய மரம்.
தாவர வளரியல்பு : மீசோபைட்
இலை : நீண்ட தனியிலைகள். மாற்றடுக்கில் இலைக் காம்புடன் இருக்கும்; தோல் போன்று தடித்தது. இலையடிச் சிதல் இல்லை.
மஞ்சரி : கலப்புப் பூந்துணர்; நுனிக்குருத்து மாந்தளிராகவோ, பூந்துணராகவோ வளரும்.
மலர்கள் : சிறியவை. பல பாலானவை. பூக்காம்பு இணைந்திருக்கும். பூவடிச் சிதல்கள் முதிர்ந்தவுடன் உதிரும்.
புல்லி வட்டம் : 4-5 பிரிவானது.திருகு அமைப்பானது.
அல்லி வட்டம் : 4-5 பிரிந்தும், வட்டத் தட்டோடு ஒட்டியும் இருக்கும்.
வட்டத் தண்டு : சதைப்பாங்கானது; 4- 5 மடலாயிருக்கும்.
மகரந்த வட்டம் : 1-8 வட்டத் தட்டின் உட்புறமாகச் செருகப்பட்டிருக்கும். ஒரு மகரந்தத் தாள்தான் வளமானது. ஏனையவை வளமற்றவை. மகரந்தப் பை ஒரு சுரப்பி கொண்ட முனையுடன் இருக்கும்.
சூலக வட்டம் : சூற்பை காம்பற்று ஒரு சூலறை கொண்டு சாய்வாக அமைந்திருக்கும்.
சூல் தண்டு : குட்டையானது. சூல்முடி எளிமையானது
சூல் : அடித்தளத்தில் ஊசல் போல அமைந்தது.
கனி : இளமாங்காய் வடுவெனப்படும். கனி பெரிய சதையுடன் கூடிய பிசின் கொண்ட தசைக் கனி.
விதை : விதை பெரியது. முட்டை அல்லது நீள்சதுர வடிவமானது. புறவுறை மெல்லியது. முளைசூழ் தசையில்லை.
வித்திலைகள் : ஒரு பக்கம் தட்டையாகவும், குவிந்தும் இருக்கும். சற்று வளைந்த முளை வேர் உடையது.

இம்மரம் தமிழ் நாட்டில் பலவிடங்களில் பயிரிடப்படுகிறது. பல்வேறு வகைகள் ஒட்டு முறையால் வளர்க்கப்படுகின்றன. ஏறக்குறைய 4000 அடி உயரமுள்ள மலைப்பாங்கிலும் இம்மரம் வளரும். கனி மிக்க சுவையுள்ளது. மாமரத்தின் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 40 என, சானகி அம்மாள் (1945), முக்கர்ஜி (1950, 1954), அகார்கர், ராய் (1954) சிம்மெண்ட்ஸ் (1954) முதலியோர் கூறியுள்ளனர்.

தேமா மரம் அனகார்டியேசீ என்ற தாவரக் குடும்பத்தின் பாற்படும். இதில் 73 பேரினங்களும், ஏறக்குறைய 600 இனங்களும் உள்ளன. தேமா மரத்தை உள்ளிட்ட மாஞ்சிபேரா (Mangifera) பேரினங்களில், 30 சிற்றினங்கள் இந்தியாவிலும், மலேசியாவிலும் வளர்கின்றன.



  1. திருவா. 24 : 8 : 1