சங்க இலக்கியத் தாவரங்கள்/043-150

விக்கிமூலம் இலிருந்து
 

ஆர்—மந்தாரம்
பாகினியா பர்பூரியா (Bauhinia purpurea, Linn.)

சங்க இலக்கியங்கள் கூறும் ‘ஆர்’ என்பது ‘ஆத்தி’ மரமாகும். இதில் ‘திருவாத்தி’ எனவும், ‘காட்டாத்தி’ எனவும் இருவகையுண்டு. திருவாத்தியைப் பிற்கால இலக்கியங்கள் ‘மந்தாரம்’ என்றும் ‘திருவாட்சி’ என்றும் கூறுகின்றன. இது ஒரு சிறு மரம்; வெளிர் மஞ்சள் நிறமான மணமுள்ள பூக்களை உடையது.

சங்க இலக்கியப் பெயர் : ஆர், ஆத்தி
பிற்கால இலக்கியப் பெயர் : மந்தாரம்
உலக வழக்குப் பெயர் : திருவாத்தி, திருவாட்சி, கொக்கு மந்தாரை, வெள்ளை மந்தாரை, மந்தாரை.
தாவரப் பெயர் : பாகினியா பர்பூரியா
(Bauhinia purpurea, Linn.)

ஆர்—மந்தாரம் இலக்கியம்
மந்தாரம், கற்பகம். சந்தானம், அரிசந்தானம், பாரிசாதம் எனும் ஐந்தும் தேவருலகத்திலிருந்து பெறப்பட்டவை என்று புராணங்கூறும். கற்பகத்தை, உத்தரகுருவிலிருந்து கொணர்ந்தார் என்று உரைக் குறிப்பெழுதுகின்றார்.ஆசிரியர் நச்சினார்க்கினியர் [1]. கண்ணகிக்குக் கோயில் கட்ட வேண்டிக் கல்லெடுக்க வஞ்சினம் கூறும் செங்குட்டுவன் ‘கல் தாரான் எனில் அவன் மந்தாரமொடு, விறல் மாலை சூடுவதைப் பார்க்கிறேன்’ என்கிறான்.

“அலர் மந்தாரமோடு ஆங்குஅயல் மலர்ந்த
 வேங்கையொடு தொடுத்த ஓங்குவிறல் மாலை”
[2]

ஆர்—மந்தாரம்
(Bauhinia purpurea)

முடிமன்னர்கள் தமக்குரிய பூக்களைச் சூடுவர் எனினும், நெடுமாறன் என்னும் பாண்டிய மன்னன் தனக்குரிய வேப்பம் பூவையன்றி, மந்தார மலர்த் தாரைச் சூடும் விருப்பினன் என்பர்:

“மண்டா னிறைந்த பெரும்புகழ் மாறன்
 மந்தா ரமெனும் தண்டாரன்”
[3]

கரிகாற்சோழன், கண்ணுக்கு அழகு நிறைந்த ஆத்தி மாலையைச் சூடியவன் என்பர் முடத்தாமக் கண்ணியார்.

“கண்ணார் கண்ணி கரிகால் வளவன்”-பெரும். 148

‘மந்தாரம்’, இந்திரனுக்கு மாலையாகுமென்றும், காட்டு மந்தாரை எனப்படும் ‘காட்டு ஆத்தி’ இறைவனுக்குரியதென்றும் கூறுவர்.

“ஆத்திசூடி அமர்ந்த தேவனை”

‘கொக்கு மந்தாரை’ (கொக்கிறகு) என்பது வெள்ளை மந்தாரம் ஆகும்.

‘வெள்ளை மந்தாரம், முல்லை’ என்றார் பிறரும்.[4] இம்மலர் மாலையில் வண்டு ‘காந்தாரம்’ எனும் இசையை முரலும் என்பர் திருத்தக்க தேவர்.[5]

மணிவாசகர், “விரையார் நறவம் ததும்பும் மந்தாரத்தில்
தாரம் பயின்று மந்தம் முரல்வண்டு”

என்றிசைப்பர். [6]

இங்ஙனமெல்லாம் சிறப்பிக்கப்படும் மந்தாரம் ஒரு சிறு மரம் ஆகும். அந்தி மந்தாரை எனப்படும் அந்தி மல்லிகைச் சிறு செடியாதலின் மந்தாரமாதற்கில்லை. ஆகவே ‘காட்டு ஆத்தி’, ‘திருவாத்தி’ என்று கூறப்படும். ‘ஆர்’ என்னும் ஆத்தி மரத்தைக் காடாகக் கொண்ட தென்னார்க்காட்டிலே, இத்திருவாத்தியை, ‘மந்தாரை’ என்று கூறுகின்றனர். இம்மலர், வெளிர் மஞ்சள் நிறமானது. இம்மரம், தாவரவியலார் கூறும் பாகினியா பர்பூரியாவாக இருக்கக் கூடும் என்று துணிய முடிகிறது. இதனை வலியுறுத்துமாப் போல், காம்பிள் என்பவர் பாகினியா பர்பூரியா (Bauhinia purpurea, Linn.)என்னும் இச்சிறு மரத்தை ‘மந்தாரை’ எனத் தமிழில் வழங்குவர் என்று கூறுகின்றார்.

ஆர்—மந்தாரம்
(Bauhinia purpurea)

ஆர்—மந்தாரம் தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம். அல்லி விரிந்தது.
தாவரத் தொகுதி : காலிசிபுளோரேயில் ரோசேலீஸ் (Rosales)
தாவரக் குடும்பம் : சீசல் பினியே (Caesalpinieae)
தாவரப் பேரினப் பெயர் : பாகினியா (Bauhinia)
தாவரச் சிற்றினப் பெயர் : பர்பூரியா (purpurea)
தாவர இயல்பு : மீசோபைட்
இலை : மிக அகன்றது; இரு நீண்ட சிற்றிலைகளும் அடி ஒட்டி இருக்கும்.
மஞ்சரி : தனி மலர் அல்லது கலப்பு மஞ்சரியாகக் கிளை துனியில் உண்டாகும்.
மலர் : வெளிர் மஞ்சள் நிறமானது, நறுமணமுள்ள, சற்று நீளமானது. ஐந்தடுக்கானது..அகவிதழ்கள் ஒரே அளவுள்ளவை. இருபக்கச் சமச்சீரானது.
புல்லி வட்டம் : 5 சிறு விளிம்புகள் பசுமையானவை.
அல்லி வட்டம் : 5 நீளமான ஒரே மாதிரியானவை. மேல் இதழ் உட்புறமானது.
மகரந்த வட்டம் : பொதுவாக 10 இருக்கும். இவை அருகிப் போய் ஒன்று மட்டும் காணப்படும்.
சூலக வட்டம் : ஒரு சூலிலைச் சூலகம். பல சூல்கள்.
சூல் தண்டு : மெல்லியது: குறுகியது சூல்முடி.
கனி : வெடியாத உலர்கனி, பட்டையானது.
விதை : முட்டை வடிவானது. ஆல்புமின் உள்ளது.

இச்சிறு மரம் மலருக்காகக் கோயில்களிலும், அழகுக்காகப் பூந்தோட்டங்களிலும் வளர்க்கப்படுகிறது. இதனைத் திருவாத்தி என்றும், வெள்ளை மந்தாரை என்றும் கூறுவர்.


  1. சீ. சிந்: 1710
  2. சிலப் : 26 : 133
  3. பாண்டிக்கோவை. 71
  4. திரு. வி. பு : இ.மு.ப. 12
  5. சீ. சிந். 1959
  6. திருவா. 6 : 36