உள்ளடக்கத்துக்குச் செல்

சங்க இலக்கியத் தாவரங்கள்/090-150

விக்கிமூலம் இலிருந்து

எருக்கு
கலோடிராப்பிஸ் ஜைஜான்டியா
(Calotropis gigantea,R. Br.)

நல்லவும் தீயவும் அல்லவாய் உள்ள எருக்க மலரைத் தரும் புதர்ச் செடிக்குச் சங்க இலக்கியங்களில், புறநானூற்றில் கபிலர் இடந்தருகின்றார். இதில் மலர் நிறத்திற்கேற்ப வெள்ளெருக்கொன்றும், யாங்கணும் வளரும் வெளிர் நீல எருக்கம் ஒன்றும் உண்டு. வெள்ளெருக்க மலரைச் சடையில் சூடியவர் சிவபெருமான் என்பர் கம்பர்.[1]

சங்க இலக்கியப் பெயர் : எருக்கு
தாவரப் பெயர் : கலோடிராப்பிஸ் ஜைஜான்டியா
(Calotropis gigantea,R. Br.)

எருக்கு இலக்கியம்

கபிலர் புறநானூற்றில் எருக்கம் புதர்ச் செடிக்கு ஓர் இடம் வைத்துள்ளார். பூக்களில் நல்லனவும் உள்ளன. தீயனவும் உள்ளன. புல்லிய இலை (கெடுமணத்தால்) உடைய எருக்கம் பூவையும் கடவுளர் ஏற்றுப் போற்றுவது போன்று, பாரி வள்ளல் தன்னிடம் வரும் அறிவற்ற எளியவரையும் வரவேற்றுப் பரிசளிப்பதைக் கடமையாகக் கொண்டவன் என்பதைப் பாடுகின்றார்.

“நல்லவும் தீயவும் அல்ல; குவியிணர்ப்
 புல்லிலை எருக்கம் ஆயினும் உடையவை
 கடவுள் பேணேம் என்னா; ஆங்கு
 மடவர் மெல்லியர் செல்லினும்
 கடவன் பாரி கைவண் மையே
-புறநா. 106

இது கொத்தாகப் பூக்கும் என்பதால் ‘குவியிணர் எருக்கு’ என்றார் புலவர். மலரில் ஐந்து புறவிதழ்கள் விரிந்தும், அகவிதழ்கள் ஐந்தும் ஒரு குமிழாகத் தோற்றந்தரும், இக்குமிழின் வடிவம் ஐந்து பட்டையாக ஒட்டிய அகவிதழ்களின் முனை மொட்டையாகவும், அழகாகவும் காட்சி தரும். இதனைக் குவிந்த முகிழ் எனபர் புலவர்.

“குறுமுகிழ் எருக்கங்கண்ணி”-நற். 220 : 3
“குவிமுகிழ் எருக்கங்கண்ணியும்”-குறுந். 17 : 2

எருக்கு இருவகையானது. வெள்ளிய நிறமுடைய பூக்களை உடையது வெள்ளெருக்கு ஆகும். இச்செடி அருகியே காணப்படும். சிறப்பானது. இது சிவபெருமான் சடை முடியில் உள்ளதென்பார் கம்பர். வெளிர் நீல நிறமான பூக்களை உடைய எருக்கு வெற்றிடங்களில் யாங்கணும் காணப்படும்.

இம்மலர் நறுமணம் அண்டாதது என்றார் ஒரு புலவர்.[2] இது மணமற்றது என்பதை மறைமுகமாகக் கூறும் ஒரு பாடல், தொல்காப்பிய உரையின் மேற்கோளாகக் காட்டப்படுகிறது. பரத்தை வீட்டிலிருந்து மீளும் தலைவன், மணமிக்க குவளைப் பூமாலையைச் சூடி வந்தான். தெருவில் எருக்கம்பூவை வைத்து விளையாடிய குழந்தையும் உள்ளே வந்தது. குவளைக் கண்ணி சூடிய தலைவனைப் பரத்தை தழுவியதால், அதனை ஏற்காமல் மகன் சூடியிருந்த எருக்கு நன்றென அவனைத் தழுவினாளாம்.

“ஒல்லேம் குவளை புலாஅல் மருங்கின்
 புல்லெருக்கங் கண்ணி நறிது”

-தொல். சொல்: 57-உரை மேற்கோள்


மணமிக்க எருக்கை ‘நறிது’ என்றது குற்றமாகாது என்பதை விளக்கும் உரையாசிரியர் செந்நாவரையர், ‘எருக்கங் கண்ணி நறிதாதற்கு மகிழ்நன் செய்த துனிகூர் வெப்பம், முகிழ்நகை முகத்தால் தணிக்கும் புதல்வன் மேல் ஒரு காலைக் கொருகால் பெருகும் அன்பு காரணம்’ என்றார்.

மணமற்றதாயினும், இதன் எழிலான தோற்றம் கருதிப் பூ கிடைக்காத இடங்களில் இதனையும் சூடி ஆடுவர் பாலை நில வழியில் கூத்தர் என்கிறார் அதியன் விண்ணத்தனார்.

“குவியிணர் எருக்கின் ததர் பூங்கண்ணி
 ஆடுஉச் சென்னி தகைப்ப”
-அகநா. 301 : 11-12

எருக்கம் பூவை, மடலேறும தலைமகன் கண்ணியாகச் சூடிக் கொள்வான்.

“மாஎன மடலும் ஊர்ப்பூ எனக்
 குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப”
-குறுந். 17 : 1-2

இச்செடியில் உண்டாகும் பால் கொடியது. ஆனால், மருந்துக்குப் பயன்படுவது. வெள்ளெருக்கின் நாரை எடுத்துக் குழந்தைகட்குக் கடிப்பகையாகக் கட்டுவர்.

எருக்கு தாவர அறிவியல்

|

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : பைகார்ப்பெல்லேட்டே (Bicarpellatae)
அகவிதழ்கள் இணைந்தவை.
தாவரக் குடும்பம் : ஆஸ்கிளிப்பியடேசி (Asclepiadaceae)
தாவரப் பேரினப் பெயர் : கலோடிராப்பிஸ் (Calotropis)
தாவரச் சிற்றினப் பெயர் : ஜைஜான்டியா (gigantea)
தாவர இயல்பு : புதர்ச் செடி. பாழ்பட்ட வெற்றிடங்களில் வளர்வது. வெள்ளிய மலரின் நிறத்தைக கொண்டு வெள்ளெருக்கும், வெளிர் நீல மலரின் நிறத்தினால் யாண்டும் வளரும் மற்றொரு எருக்கஞ் செடியும் உள்ளன.
மஞ்சரி : நுனி வளராப் பூந்துணர்; கலப்பு மஞ்சரியாகவும் வளர்வதுண்டு. கிளை நுனியில் கொத்துக் கொத்தாகத் தோன்றும்.
மலர் : குமிழ் போன்றது
புல்லி வட்டம் : 5 புறவிதழ்கள் பசிய நிறத்தன.
அல்லி வட்டம் : 5 அகவிதழ்கள் இணைந்து, 5 பட்டையாகி நீண்டு, நுனி மொட்டையாக இருக்கும். உட்கூடுள்ள இதற்குக் ‘கரோனா’ என்று பெயர். இதற்குள் சூல்தண்டு நீண்டிருக்கும். இதன் செதில்கள் சதைப் பற்றாக 5 மகரந்தப் பொறிகளை நுனியில் உள் அடக்கிக் கொண்டிருக்கும். இப்பொறிகளைப் பொலினியம் (Polinium) என்று கூறுவர்.
மகரந்த வட்டம் : கரோனாவில் நுனி 5 கோணமான சூல்முடிச் செதில்களால் மூடியிருக்கும், கரோனாவின் 5 பட்டைகளின் மேலே ‘பொலினியம்’ என்ற தாதுக்களைக் கொண்ட 5 பொறிகள் இருக்கும்.
தாது : பட்டையான அகன்ற தாதுப்பைகளில் விளையும். இப்பைகளை இழை ஒன்று இணைக்கும். இதற்குப் ‘பொலினியம்’ (பொறி) என்று பெயர்.
சூலக வட்டம் : 2 செல் உடைய சூலறைச் சூலகம். சூல்தண்டு மெல்லியது. சூல்முடி 5 கோணமான மெல்லிய செதிலால் ஆனது. (இதன் 5 கோணத்திலும் 5.பொலினியம் புதைந்திருக்கும்).
கனி : இரண்டு அகன்ற பெரிய சதைப்பற்றான தடித்த ‘பாலிக்கிள்’ எனப்படும்.
விதை : முட்டை வடிவானது; பட்டையானது; மெல்லியது. நுனியில் பல நீண்ட வெண்மை நிறமான நுண் மயிர் இழைகள் அடர்ந்திருக்கும். கனி வெடித்து விதைகள் சிதறுங்கால், இம்மயிர் இழைகள் விரிந்து, விதைகளைக் காற்றில் மிதக்கச் செய்து, வேறிடம் சேர்க்கும்.



  1. “வெள்ளெருக்கஞ் சடைமுடியான்”
    -கம்பராமா. உயுத்த காண்டம்
  2. ‘விரைசார்ந்து அறியாத புல்லெருக்கங் கண்ணி’ -வாட்போக்கிக் கலம்பகம்