சங்க இலக்கியத் தாவரங்கள்/106-150

விக்கிமூலம் இலிருந்து
 

குல்லை
ஆசிமம் கேனம் (Ocimum canum,Sims.)

சங்க நூல்கள் குறிப்பிடும் ‘குல்லை’ என்பதற்கு நச்சினார்க்கினியர் ‘கஞ்சங்குல்லை’ என்று உரை கண்டார். இது தழைத்துக் கிளைத்து வளரும் ஒரு வகைச் செடி.

இச்செடி துளசிச் செடியைப் பெரிதும் ஒத்தது. இதனைப் புனத் துளசி என்றும், நாய்த் துளசி என்றும் கூறுவர்.

சங்க இலக்கியப் பெயர் : குல்லை
ஆங்கிலப் பெயர் : வொயில்டு பேசில் (Wild Basil)
தாவரப் பெயர் : ஆசிமம் கேனம்
(Ocimum canum,Sims.)

குல்லை இலக்கியம்

“குல்லை பிடவம் சிறுமா ரோடம்”-குறிஞ். 78

என்று கூறிக் குல்லைக்கு இடங்கொடுத்தார் கபிலர். இதற்கு நச்சினார்க்கினியர் ‘கஞ்சங்குல்லைப்பூ’ என்றே உரை கூறினார்.

“குல்லையும் குருந்தும் கோடலும் பாங்கரும்”-கலி. 103 : 3

குல்லை குளவி கூதளம் குவளை”-நற். 376 : 5

“குல்லையம் புறவில் குவிமுகை அவிழ்ந்த”-சிறுபா. 29

என்றெல்லாம் சங்க நூல்கள் குல்லையைக் கூறுகின்றன. இவற்றைக் கொண்டு இதனை இக்காலத்துச் செடிகளில் எதுவெனத் துணிந்து கூற இயலவில்லை.

நற்றிணை உரைகாரர். இதனை ‘மலைப்பச்சை’ என்கிறார். பிங்கலம் இதனைப் ‘புனத்துளசி’ என்று கூறுகிறது. சேந்தன் திவாகரம்[1] இதனைக் கஞ்சாச் செடி என்று கூறுகிறது. மருத்துவ நூலார் இதனை நாய்த் துளசி என்பர்.

குல்லை இலையினையும், பூவையும் வாலிணர் இடையிட்டுத் தொடுத்த தழையுடையாக இது பயன்பட்டது என்பர் நச்சினார்க்கினியர்.

“முடித்த குல்லை இலையுடை நறும்பூ”-திருமு. 201

‘வடுகர் குல்லையைக் கண்ணியாகக் கொண்டனர்’ என்று கூறுவர் மாமூலனார்.

“குல்லைக் கண்ணி வடுகர் முனையது”-குறுந் 11 : 5

இச்செடிகள் மலிந்த காடாக வளர்ந்து இருக்கும் என்பதை ‘குல்லையம்புறவு’ என்றார் நத்தத்தனார்.

குல்லை மிகுந்த வெப்பத்திற் காற்றாது என்பதைக் ‘குல்லை கரியவும்’ (பொருந. 234) என்பதால் அறியலாம்.

ஆகவே, குல்லை என்பது துளசி இனத்தைச் சேர்ந்தது என்றும், இது நாய்த் துளசி, புனத் துளசி எனப்பட்டது என்றும், இதன் இலைகளில் நறுமணமிருத்தலின், இக்குல்லை கண்ணியாகக் கட்டிச் சூடப்பட்டது என்றும் அறிய முடிகிறது. இதனை ஆங்கிலத்தில் வொயில்டு பேசில் (Wild Basil) என்று கூறுவர்.

குல்லை தாவர அறிவியல்

|

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : பைகார்ப்பெல்லேட்டே, லாமியேலீஸ்- அகவிதழ் இணைந்தவை.
தாவரக் குடும்பம் : லேபியேட்டே (Labiatae)
தாவரப் பேரினப் பெயர் : ஆசிமம் (Ocimum)
தாவரச் சிற்றினப் பெயர் : கேனம் (canum)
சங்க இலக்கியப் பெயர் : குல்லை
பிற்கால இலக்கியப் பெயர் : கஞ்சங்குல்லை
உலக வழக்குப் பெயர் : நாய்த் துளசி, புனத் துளசி
ஆங்கிலப் பெயர் : வொயில்டு பேசில் (wild basii)
தாவர இயல்பு : வெற்றிடங்களில் 2-4 அடி உயரம் வரையில் தழைத்துக் கிளைத்து வளரும் செடி. இது துளசிச் செடியைப் பெரிதும் ஒத்தது.
இலை : துளசி இலையைக் காட்டிலும் சற்று அகன்று, நீண்டிருக்கும். (1.5" X .5") இலைக் காம்பு நீண்டது. இலையில் நுண்மயிர் இருக்கும்.
மஞ்சரி : நறுமணமுள்ளது. கிளை நுனியில் நுனிவளர் பூந்துணர். துணர்க்காம்பில் இதன் மலர்கள் அடுக்கடுக்காக உண்டாகும்.
மலர் : மங்கிய வெண்ணிறமானது. துளசி மலரை ஒத்தது.
புல்லி வட்டம் : 4 அகவிதழ்களும் இணைந்து, பசிய குவளை வடிவாக இருக்கும். இதற்குள் நுண்மயிர் அடர்ந்திருக்கும்.
அல்லி வட்டம் : அகவிதழ்கள் இணைந்து, அடியில் குழல் போன்றும், மடல்கள் மேலே இரு உதடுகளைப் போன்று வாயவிழ்ந்தும் இருக்கும்.
மகரந்த வட்டம் : இரு மகரந்தத் தாள்கள் உயரமாகவும், மற்ற இரு தாள்கள் குட்டையாகவும் இருக்கும்.
சூலக வட்டம் : 2 செல் உடையது. எனினும், நான்கு ‘நட்லெட்’ என்ற உலர் கனி.
கனி : நான்கும் சிறியவை. மிக நுண் குழிகள் காணப்படும். வழவழப்பானவை.

இச்செடியின் இலைகளில் நறுமணமிருத்தலின், கண்ணி தொடுக்குநர் இதனை இடையிட்டுத் தொடுப்பர். இச்செடி மருந்துக்கு உதவும் என்பர்.

இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 24 என்று மார்ட்டன் ஜே.கே. (1952) என்பவரும், 2n = 64 என்று டோயோச்சுக்கி (1936, 1937) என்பவரும் கண்டுள்ளனர்.


  1. கஞ்சங் குல்லை. கஞ்சாவாகும் -திவாகரம்