சங்க இலக்கியத் தாவரங்கள்/134-150

விக்கிமூலம் இலிருந்து
 

எருவை
சைபீரஸ் ரோடன்டஸ் (Cyperus rotundus, Linn.)

எருவை ஒரு வகையான கோரைப் புல். நிலத்தில் வளர்வது;: மலர் சிறியது; ‘தோடு’ போன்றது; கார்காலத்தில் மலர்வது; மலைப்புறத்திலும் காணப்படுவது என்ற குறிப்புகளைச் சங்க இலக்கியங்களில் காண முடிகிறது.

சங்க இலக்கியப் பெயர் : எருவை
பிற்கால இலக்கியப் பெயர் : பஞ்சாய்க் கோரை
தாவரப் பெயர் : சைபீரஸ் ரோடன்டஸ்
(Cyperus rotundus, Linn.)

எருவை இலக்கியம்

கபிலர், ‘எருவை செருவிளை மணிப்பூங்கருவிளை’ (குறிஞ். 68) என்பர். ‘எருவை’ என்பதற்கு, நச்சினார்க்கினியர் ‘பஞ்சாய்க்கோரை’ என்றும் ‘கொறுக்கச்சியுமாம்’ என்றும் உரை கண்டார். இவற்றுள் பஞ்சாய்க் கோரை என்பது பொருந்தும் போலும். இக்கோரையைக் கொண்டு மகளிர் பாவை செய்து விளையாடுவதும், இதனைக் கொண்டு கோதை புனைவதும் வழக்கம். ஓரம்போகியார் ‘பைஞ்சாய்க் கோதை மகளிர்’ (ஐங். 54:5) என்பாராதலின் இது புலனாம். ‘எருவை’ எனும் இக்கோரை பெருவரைப்புறத்தே வளருமென மூன்று நற்றிணைப் பாடல்கள குறிப்பிடுகின்றன.

“எருவை நீடிய பெருவரைச் சிறுகுடி” -நற். 156 : 7

“தாஇல் பெரும்பெயல் தலைஇய யாமத்து
 . . . . . . . . . . . . . . . .
 எருவை நறும்பூ நீடிய
 பெருவரைச் சிறுநெறி வருத லானே”
-நற். 261 : 5-10

“எருவை நீடிய பெருவரை யகம்தொறும்” -நற். 294 : 4

பரிபாடல், இதனை “எருவை நறுந்தோடு”(பரி. 19 : 77) என்று குறிப்பிடுகின்றது. இதற்குப் பரிமேலழகர், எருவையது நறுந் தோட்டையுடையது; எருவை என்பது ‘எருவை செருவிளை மணிப்பூங்கருவிளை’ எனக் கபிலர் பெருங் குறிஞ்சியிலும் வந்தது என்று விளக்கம் தருகிறார்.

இவற்றைக் கொண்டு பார்த்தால், எருவை என்பது, ஒரு வகையான கோரை; குறிஞ்சி நிலத்தது. மலர் நறியது; தோடு போன்றது; கார்காலத்தில் மலர்வது என்பனவற்றை அறியக் கூடும். எனினும், இதன் மலர் பிற மலர்களை ஒப்பதன்று.

எருவை தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் ஒரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : குளுமேசி என்ற ஒரு வித்திலைத் தாவரத் தொகுப்பைச் சார்ந்தது. புல்லினம்.
தாவரக் குடும்பம் : சைபிரேசி (Cyperaceae)
தாவரப் பேரினப் பெயர் : சைபீரஸ் (Сyperus)
தாவரச் சிற்றினப் பெயர் : ரோடன்டஸ் (rotundus)
தாவர இயல்பு : கோரைப் புல். புதர் போல அடர்ந்து வளரும். மீசோபைட். 20 செ. மீ. உயரம். 6000 அடி உயரம் வரையிலான மலைப் புறத்திலும் வளரக் கூடியது.
தண்டு : முப்பட்டையானது.
இலை : பல இலைகள். 9-10 செ.மீ. நீளமும், 1-2 மி. மீ. அகலமும் உள்ளது. நடு நரம்பு எடுப்பானது. இலையடி தண்டை மூடியிருக்கும்.
மஞ்சரி : 4-6 செ.மீ. நீளமானது. 3-7 இணர்க் காம்புகள், அடியிலிருந்து வட்டமாக வளர்ந்து, நீண்டு இருக்கும். மலரில் பசிய, நீண்ட 3 செதில்கள் (பிராக்ட்) உள்ளன. மலர்க் காம்பில் 2-8 ‘ஸ்பைக்லெட்’ உண்டாகும்.
ஸ்பைக்லெட் 
: குறுகி, நீண்ட 5-25 X 1-2 மி. மீட்டர் அளவானது. ஒவ்வொரு காம்பிலும் 10-20 மலர்கள் நேராக மலர்க் காம்பின்றி இணைந்துள்ளன.
மலர் : மலரில் ‘ராக்கில்லா’ நிலைத்திருக்கும். ‘விங்’ 1-2 மி. மீ, வெளுப்பானது. ‘குளும்’ விளிம்பொட்டியது. 3-4 மி.மீ. நீளமானது. மெல்லியது. சூல்களை அடக்கியது. நுனி கூரிய முள் போன்றது. பக்கத்தில் 5 நரம்புகளை உடையது. ‘கீல்’ பசுமையானது. 3 நரம்புடையது. சூல்முடி நீண்டு 3 பிரிவானது.
மகரந்த வட்டம் : 3 தாதிழைகளை உடையது. இழைகள் மெல்லியவை. 4 மி. மீ. நீளமானவை. தாதுப் பைகள் 3 மி.மீ. நீளமானவை. மேல் நுனி சிவப்பாக இருக்கும்.
விதை : ‘நட்’ எனப்படும் முப்பட்டையானது. சற்று நீண்டது. 1 மி. மீ. நீளம்.

சைபிரேசி என்ற இத்தாவரக் குடும்பத்தில் உள்ள சைபீரஸ் என்னும் இப்பேரினத்தில் இந்திய நாட்டிலுள்ள 61 சிற்றினங்களை ஹூக்கர் விவரித்துள்ளார். தமிழ் நாட்டில் 36 சிற்றினங்கள் வளர்வதாகக் காம்பிள் என்பவர் கூறுவர்.

இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 108 என தனாக்கா என் (1937, 1948) ஜின்னோ (1965 பி), செய்சர். விட்டாக்கர் (1948) முதலியோர் கணித்துள்ளனர். இக்கோரை பாய் முடைவதற்குப் பயன்படுகிறது.