ஆவலுடன் எதையோ பார்க்கிறான். நடக்கிறான் மேலும்! ஊரின் மேற்குப் புறத்தில் ஏரிக்கரையை அடைகிறான்: ஏரியைச் சுற்றிச் சுற்றிப் பார்க்கின்றன அவன் விழிகள். அவன் முகத்தில் சிறிது மகிழ்ச்சியரும்புகின்றது. ஏரி நிறைய நீர் இருக்கிறது. ஏரியின் மறுமுனையைப் பார்க்கிறான். ஊர் தோன்றுகிறது. அவ்வூருக்கும் இந்த ஏரிக்கும் இடையில் தடைச் சுவர் ஒன்று மட்டமாய்க் கட்டப்பட்டிருப்பதை அறிகிறான். மற்றும் ஏரியின் அருகில் குறவர் குடிசைகள் தோன்றுகின்றன. உற்றுப் பார்க்கிறான் மண்ணாங்கட்டி. ஒரு குறவன் மூட்டம்போட்டு அதில் உயிருடன் நாய் ஒன்றை வதக்கிக் கொண்டிருக்கிறான். அதன் தசையை எதிர் பார்த்துப் பல குறவர் ஏங்கி நிற்கிறார்கள். மண்ணாங்கட்டி விரைந்து சென்று குடிசையொன்றில் நுழைகிறான். சிறிது நேரத்தில் அக் குடிசையினின்று ஒரு குறவன் வெளிச் செல்லுகிறான். அவன் உடனே பல குறவர்களுடன் தன் குடிசைக்குள் நுழைகிறான். பகலவன் மேற்றிசையில் வீழ்கிறான். கையெழுத்து மறைகிறது. பல குறவர்கள் மண்ணாங்கட்டியுடன் செல்லுகிறார்கள் கையில் கடப்பாரைகளுடன்.
ஏரியின் அக்கரையில் கட்டப்பட்டிருக்கும் தடைச்சுவர் இடிபடுகின்றது. மண்ணாங்கட்டியின் தோள் விரைவாக அவ்வேலையில் ஈடுபடுகின்றது. குறவர்கள் தம் தலைவருடன் போட்டியிடுகின்றார்கள். மண்ணாங்கட்டி ஏரியைப் பார்க்கிறான். அவன் மகிழ்ச்சி கொண்ட முகத்தை மற்றும் குறவர்கள் காணுகிறார்கள். குறவர்களும் மண்ணாங்கட்டியும் குறவரின் குடிசைகளை நோக்கிச் செல்கிறார்கள்.
18