உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

திருக்குறள்

தமிழ் மரபுரை


நாடகம் நடிப்பவன். ஆதலால் இவ் விருவரும் அரசர் தொடர்பே கொண்ட அரண்மனைப் பணியாளராவர். சிலர் கருதுகின்றவாறு. வள்ளுவன் அரசன் பள்ளியறைக் கண்காணிப்பாளனான மாளிகை நாயகம்(Chamberlain) அல்லன்.

பெருங்கணி குறித்த நன்னாளிலேயே வள்ளுவன் பறையறைய வேண்டியிருந்ததினாலும், வள்ளுவனைப் புள் (நிமித்தம்) அறிவிப்பவன் என்று சிந்தாமணி கூறுவதனாலும், வள்ளுவர் என்பார் இன்றும் கணியராயிருந்து வருவதனாலும், பண்டை வள்ளுவனும் கணியம் அறிந்தவனே என்று கருத இடமுண்டு. நாள்கோள்களின் இயக்கத்தை யறிந்து ஐந்திறம் (பஞ்சாங்கம்) வகுத்தற்கும் அரசர்க்குப் பிறப்பியம் (சாதகம்) எழுதுதற்கும் நுண்மாண் நுழைமதி வேண்டியிருத்தலின் கணியருள் ஒரு பிரிவார் வள்ளுவர் எனப்பட்டதாகத் தெரிகின்றது.

நாஞ்சில் வள்ளுவனைப் பாடிய ஒருசிறைப்பெரியனார், மருதனிள நர்கனார், ஒளவையார், கருவூர்க் கதப்பிள்ளை ஆகிய நால்வரும் அவனை நாஞ்சிற் பொருநன் என்றே குறிக்கின்றனர். பொருநன் போர்மறவன் அல்லது படைத்தலைவன்.


"பொருந ரென்ப பெரும்போர்த் தலைவர்”
(பிங்.5:119)

என்பது பிங்கலம்,

பாண்டிநாட்டிற்கும் சேரநாட்டிற்கும் இடைப்பட்ட நாட்டை யாண்டதினால், ஒருகாற் பாண்டியனுக்கும் மற்றொருகாற் சேரனுக்கும் படைத் தலைவனாக இருந்ததாகத் தெரிகின்ற நாஞ்சில் வள்ளுவனை, வலிமையிலும் வண்மையிலும் சிறந்தவனாக மருதனிளநாகனாரும் ஒளவையாரும் கதப்பிள்ளையும் பாடியிருத்தலால், அவன் பெயர் வலிமையாலோ வண் மையாலோ வந்ததாகவு மிருக்கலாம்: இயற் பெயராகவு மிருக்கலாம்.

வல்லப என்னும் வடசொல், வேரில்லாததாகவும் காதலன், நண்பன், கணவன், மேலோன், கண்காணி என்றே பொருள்படுவதாகவும் இருத்த லால், அது வள்ளுவன் என்னும் தென்சொற்கு மூலமாயிருத்தல் முடியாது. கல்வெட்டுகளில் வரும் வள்ளுவன், வல்லுவன் என்னும் சொற்களும், தூய தென்சொற்களேயன்றி வல்லப என்னும் வடசொல்லின் திரிபாகா. உண்மை யெதுவெனின், வல்லவன் என்னும் தென்சொல் வடமொழியில் வல்லப என்று திரிந்துள்ளது என்பதே. வகரம் பகரமாவது வடமொழிக் கியல்பே.