உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசாண்ட ஆண்டி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24


வேறு பல நண்பர்களுக்கும் எழுதியிருந்தான் ரிஷ்லு. வாய்ப்புக் கிடைக்கவில்லை. மேரி தேவியாருக்கே எழுதினான், "அடியேன் என்றும் தங்களுக்குச் சேவை செய்யச் சித்தமாக இருக்கிறேன். உத்தரவுக்கு எதிர்பார்க்கிறேன்" என்று. உத்தரவு கிடைக்கவில்லை. கான்சினிக்கும் எழுதினான்--கட்டளைக்குக் காத்திருப்பதாக. கட்டளை கிடைக்கவில்லை. அதுவரையில் கர்த்தர் தொண்டு செய்துவருவோம் என்று இருந்துவந்தான். அதிலேயும் இலாபம் இல்லாமற் போகவில்லை.

கார்டினல் ரிஷ்லு. வேண்டாவெறுப்புடனோ, எதிர்பாராத நிலையிலோ, பதவி பெறவில்லை. அதற்காக, அவன் எடுத்துக்கொண்ட முயற்சி கொஞ்சமல்ல--பூஜாரியாக இருந்து கொண்டே இந்த முயற்சியில் ஈடுபட்டது, அறமா, அழகா, என்பீர்கள், அந்நாளில் அது அறமா, அழகா என்பதல்ல பிரச்னை, அதுதான் முறை! கார்டினல் ரிஷ்லு, செந்நெல் வயலிலே பதுங்கிக் கிடந்த புலி! இரை வேண்டும்--இருட்ட வேண்டும்--அதுவரை, வயலில்! மாடா, கதிர் தின்று பசி தீர்த்துக்கொள்ள? ரிஷ்லுவும், பாரிஸ்மீது பாய்வதற்குத் தக்க சமயம் வருகிறவரையில், இங்கு இருப்போம், என்றுதான், லூகான் நகரைத் தங்குமிடமாகக் கொண்டான்--தேவபூஜையின் மேன்மையை உணர்ந்து அல்ல!

ரிஷ்லு, எளிய குடியில்தான் பிறந்தான். 1558ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ம் நாள், பாரிஸ் பட்டிணத்தில் ரிஷ்லு பிறந்தான். உடன் பிறந்த ஆடவர் மூவர், இரு பெண்கள். ஆரிமாண்டு ஜீன், என்ற பெயர், ரிஷ்லுவுக்கு! ரிஷ்லு என்பது ஊரின் பெயர், அதுவே அந்தக் குடும்பத்தினரின் பொதுப் பெயருமாயிற்று, ஐந்து வயதுப் பாலகனாக ஆர்மாண்டு ஜீன் இருக்கும்போதே, தந்தை காலமானார்-ஜீன், தாயாரால் வளர்க்கப்பட்டுவந்த செல்லப்பிள்ளை. சுசானே என்பது தாயின் பெயர். ஜீன் சிறு பிராய முதலே, நோயாளி--துள்ளித் திரிவதில்லை, சோர்ந்து காணப்படுவான். தாயார் அவனை மிகவும் பக்குவமாக வளர்க்க வேண்டி இருந்தது. அடிக்கடி வடுமையான காய்ச்சல். சிறுவன், ஓங்கி வளருவதற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசாண்ட_ஆண்டி.pdf/24&oldid=1549083" இலிருந்து மீள்விக்கப்பட்டது