உள்ளடக்கத்துக்குச் செல்

முல்லைக்காடு/அம்மானை ஏசல்

விக்கிமூலம் இலிருந்து

அம்மானை ஏசல்

(எல்லாரும் போனாப்போலே என்ற மெட்டு)

மந்தை எருமைகளில் வளர்ந்திருந்த காரெருமை
இந்தவிதம் சோமன்கட்டி மாப்பிள்ளையாய் இங்கு வந்தீர்
மாமா—எங்கள் இன்ப மயிலை நீர் மணக்க லாமா?

ஆந்தை விழி என்பதும் அம்மிபோன்ற மூக்கென்பதும்!
ஓந்தி முதுகென்பதும் உமக்கமைந்து கிடப்பதென்ன?
மாமா—எங்கள் ஓவியத்தை நீர் மணக்க லாமா?

கோடாலிப் பல் திறந்து குலுங்கக் குலுங்க நகைக்கையிலே
காடே நடுங்கிடுமே கட்டை வெட்டக் கூடுமென்று!
மாமா—எங்கள் வாசமலரை நீர் மணக்க லாமா?

வெள்ளாப்பம்போலுதடு வெளுத்திருக்கும் வேடிக்கையில்
சொள்ளொழுகிப் பாய்வதுதான் சொகுசு மிகவும் சொகுசு சொகுசு!
மாமா—எங்கள் சுந்தரியை நீர் மணக்க லாமா?

ஆனைக்குக் காதில்லையாம் அளிப்பதுண்டோ நீர் இரவல்?
கூன்முதுகின் உச்சியிலே கொக்குக்கழுத்து முளைத்ததென்ன?
மாமா—எங்கள் கொஞ்சுகிளியை நீர் மணக்க லாமா?

எட்டாள் எடுக்க ஒண்ணா இரும்புப் பீப்பாய் போலுடம்பு
கொட்டாப்புளிக் கால்களால் குள்ளவாத்துப் போல் நடப்பீர்!
மாமா—எங்கள் கோகிலத்தை நீர் மணக்க லாமா?