52
என்று வாதாடினான். ஏன்? அவன் அவ்விதம் நம்பும்படி ரிஷ்லு, சில காலமாக, நடந்துகொண்டு வந்தான்.
கான்சினியின் நிலை, திடீரென்று சாயும் என்பதையும், லைனிஸ் மன்னனைப் பயன்படுத்தி, சூத்திரக் கயற்றினைப் பிடித்துக் கொள்ளப் போகிறான் என்பதையும், உணர்ந்த ரிஷ்லு, "கான்சினியின் போக்கே எனக்குப் பிடிக்கவில்லை, எனக்கு அவன் தயவில் பதவியில் இருக்கவே கஷ்டமாக இருக்கிறது, மேரி அம்மையின் இயல்பும் எனக்குப் பிடிக்கவில்லை, என் உள்ளம், மன்னன் சார்பாகத்தான், மன்னனிடம்தான் அதிகாரம் இருக்கவேண்டும் என்பது. என் நோக்கம் என்றெல்லாம், லைனிசிடம், அவன் நம்பும்படி பேசி வந்திருக்கிறான். எனவேதான், பலருக்குத் தலைபோன அந்த நேரத்திலும், ரிஷ்லு, சேதமின்றி இருக்க முடிந்தது.
மேரியும் கான்சினியும் அல்லவா, நமது இன்றைய உயர்வுக்குக் காரணம், அவர்களிடம் உள்ளன்பு கொள்வதும், நன்றியறிதல் காட்டுவதுந்தானே, நமது கடமை, அவர்களில் கான்சினி கொல்லப்பட்டு விட்டான், மேரியோ தாழ் நிலைக்குத் தள்ளப்படுகிறாள், அவர்கள் சார்பிலே நின்று லைனிசின் அக்ரமத்தைக் கண்டிப்பதல்லவா அறம், என்றெல்லாம் ரிஷ்லு எண்ணவில்லை. மூவர் இருந்தனர், முட்டுக் கட்டைகள்--ஒருவன் காண்டி; சிறை சென்றான்; மற்றொருவன், கான்சினி, சுட்டுச் சாம்பலாக்கி விட்டனர்-மூன்றாமவன் இந்த லைனிஸ், இவன் தொலையுமட்டும், துதிபாடித் தப்பித்திருக்கத் தான் வேண்டும்--இவனும் தொலைவான், பிறகு, நான்தானே மன்னன் பக்கத்தில், என் கரத்தில்தானே பிரான்சு!--என்று இப்படி எண்ணினான் ரிஷ்லு. அவன் படித்த மார்க்க ஏடுகளும் அறநூற்களும் இத்தகைய சுயநலத்தைத்தானா தந்தன, என்று கேட்கத் தோன்றும். அந்த ஏடுகளிலே இருந்து ரிஷ்லு இந்த குணத்தைப் பெற்றானோ இல்லையோ, நாமறியோம். ஆனால் ஒன்று அறிவோம் அவன் அந்த ஏடுகளைப் படித்ததே கூட, சொந்த ஆதிக்கத்தைப் பெற அவை தரும் அறிவு பயன்படட்டும் என்ற நோக்குடன்தான்! அறநூல் படித்தவன்! அபாரமான திறமைசாலி!--என்று புகழப்பட