விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்
79
அவமரியாதையான நடவடிக்கையை புறக்கணித்து விட்டால், இராமநாதபுரம் மன்னரைச் சார்ந்த ஏனைய பாளையக்காரர்களும் கும்பெனியாரது உத்தரவுகளுக்கு கீழ்ப்படியாது உதாசீனமாக நடந்து கொள்ளும் நிலை தோன்றிவிடும் என்ற குறிப்பினையும் சேர்த்திருந்தார். திருமலை நாயக்க மன்னரது ஆட்சிக்காலம் தொட்டு மதுரை நெல்லை சீமையிலுள்ள எழுபத்து இரண்டு பாளையக்காரர்களுக்கும் மறவர் சீமையின் மன்னர்தான் தலைவராக அப்பொழுது கருதப்பட்டு வந்தார்.[1]
இந்தச் சூழ்நிலையில் தூத்துக்குடியில் இருந்து பாம்பன் நீர்வழியைக் கடந்து, சென்னை செல்லும் கும்பெனியாரது இரண்டு சரக்குக் கப்பல்களை பாம்பன் துறைமுகத்தில், மன்னரது பணியாளர்கள் தடுத்து நிறுத்தினர். ஒரு கப்பலுக்கு சுங்கச் சோதனையிலிருந்து விலக்குப் பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கும்பெனியார் தரப்பில் விளக்கம் தரப்பட்டும், ஏனைய கப்பல்களைப் போன்று வரிசைக் கிரமத்தில் உரிய சோதனையையும், சுங்க விதிப்பையும் முறையாக முடித்தபிறகுதான் கும்பெனியாரது இரண்டு கப்பல்களும் பாம்பனை விட்டு புறப்படுவதற்கு சேதுபதி மன்னரது பணியாளர்கள் அனுமதித்தனர். இதனால் திட்டமிட்டபடி அவைகள் சென்னைக்குப் போய்ச் சேர்வதில் வீணாகத் தாமதம் ஏற்பட்டு அதனால் சென்னையிலிருந்து இங்கிலாந்திற்கு புறப்படும் கப்பலும் தாமதமாகப் புறப்படும் நிலை ஏற்பட்டதென கும்பெனியார் ஆயாசப்பட்டனர்.[2] மன்னர் மீது ஆத்திரங் கொண்டனர். சர்வ வல்லமை படைத்த ஆங்கிலேயருக்கு மறவர் சீமையில் தகுந்த மதிப்பு இல்லை என்பதும், சேதுபதி மன்னரது நிர்வாகம் தங்களுக்கு சிறிதளவு கூட வளைந்து கொடுக்க முன்வரவில்லை என்பதும் அவர்களுக்கு உள்ளப் புழுங்கல். மன்னரது உதாசீனத்திற்கு இந்த நிகழ்ச்சியையும் ஒரு எடுத்துக்காட்டாகக் கலெக்டர் தமது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.[3]