உள்ளடக்கத்துக்குச் செல்

குறட்செல்வம்/துறவும் துய்த்தலும்

விக்கிமூலம் இலிருந்து


37. துறவும் துய்த்தலும்


மனித குலத்தின் ஏக்கம் பெரும்பாலும் ஏன்? முழுமையும்கூட பொருளியலின் அடிப்படையிலேயே நிகழ்கிறது. பொருள், உலக இயக்கத்தின் அச்சாணியாக அமைந்து விளங்குகின்றது. மண்ணோடு தொடர்புடைய வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் அன்னவருக்கும் பொருள் தேவை.

அதனால் அன்றோ, ஞான நிலையில் நின்ற மாணிக்க வாசகரும். 'முனிவரும் மன்னரும் முன்னுவ பொன்னால் முடியும்' என்றார். அருள் பழுத்த நெஞ்சினராய் அவர் எடுத்த திருப்பெருந்துறைக் கோயில் திருப்பணிக்கும் பொருள் வேண்டுவதாயிற்று.

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மிக மிக இன்றியமையாது வேண்டப்படுவதாகிய இப் பொருளினிடத்து மக்களுக்குப் பற்றிருத்தல் இயற்கையேயாம்—முரண் பாடன்று.

எனினும், பொருளை நாம் அடையும் வழிவகைகளில் நன்றும் தீதும் தோன்றுகின்றன. பிறர் பொருளை விரும்புதலும், வழி தவறிய முறைகளில் பொருள் பெறுதலும், நேரிய வழியாகா.

துறவற இயலில் திருவள்ளுவர் கள்ளாமையை வைத்திருக்கிறார். முறை வைப்பு திருவள்ளுவர் வைத்ததா, இல்லையா என்ற ஆராய்ச்சி ஒருபுறம் நடந்து கொண்டிருக்கிறது. அதன் முடிவு எப்படியாயினும், ஆகுக.

திருவள்ளுவர் அதிகார முறைவைப்பைச் செய்யாமல் அவருக்குப்பின் வந்தோர் எவரேனும் செய்திருப்பாரேனும் முறைவைப்புக்கும் பொருள்காண வேண்டுமல்லவா? துறவி பொருட்பற்றிலாதவர்; பொருள் தேடும் முயற்சியினின்றும் தன்னை விடுதலை செய்துகொண்டவர்.

அத்தகைய வாழ்வில் களவுக்கு இடமேது? களவினும் இருவகையுண்டு. வறுமையின் காரணமாக ஏற்படும் களவுணர்ச்சி ஒருவகை, பொருள் வந்தடைந்தபின் அதைப் பாதுகாத்துத் தமக்கே அல்லது தம்மை சார்ந்த ஒரு சிலருக்கே உரிமையாக்கிக் கொள்ள வேண்டும் என்று தோன்றும் களவுணர்ச்சி பிறிதொரு வகை. இவற்றில் முன்னையது பெருங்குற்ற்மன்று — மன்னித்தற்குரியது.

அறவிகள் சான்றோராக வாழ்வர். பலருடைய நலனுக்குப் பாதுகாப்பாளராகவும் இருக்க வேண்டியவர்கள். அதன் காரணமாகப் பொது மக்கள் தமது ஆன்ம நலன் உள்ளிட்ட பெருநலனைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டுத் துறவிகளிடம் (தமக்குரியனவற்றை உரிய போழ்து செய்வார் என்று கருதி) நம்பிப் பொருளைக் கொடுத்து வைத்தல் உண்டு.

பின்னர், தரையில் ஒடிய நீர், தரையினை ஈரம் ஆக்குதல் போல, தீரத் துறவாதார் கையில் பொருள் புழங்கினாலும் பொருள்வழிப் பற்று அவர்களைச் சாரும்; அதுபோழ்துதான் துறவுடையவர்களைச் சார்புடைய பெருநிறுவனங்கள் தோன்றுகின்றன.

நிறுவனங்களின் தொடக்கம் அன்பு, அருள், துறவு ஆகியவைகளின் வழியதாகத் தோன்றிய பொதுமக்களின் நம்பிக்கை காலப்போக்கில் இது தலைகீழ்ப் பாடமாகி வரலாறு கறைபடுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு, இப்படி ஒரு நிறுவனம் தோன்றியது. தோன்றுதற்குக் காரணமாக இருந்தவர் தமது கடைசிகாலத்தில், அந்நிறுவனத்தை தம்முடைய நெருங்கிய உறவினர் ஒருவருக்கு (கொள்கைவழி உறவல்ல - குருதிவழிஉறவு) எழுதி வைத்துவிட்டார். அறநிலையங்களின் அடிப்படை நம்பிக்கையே யாகும்.

ஆதலால் துறவு வழியில் பொருள் சேரும். அங்ஙனம் சேர்வதியற்கை. அங்ங்னம் சேர்ந்த பொருளை அதாவது பிறர் நலனுக்காகத் தம்மிடம் விடப்பெற்றிருக்கும் பொருளைத் தமக்காக்கிக் கொள்ளுகின்ற கீழ்மையைத் துறவற இயலில் ‘கள்ளாமை’ என்ற அதிகாரத்தின் மூலம் கடிந்துரைக்கின்றது திருக்குறள்.

பாபிலோனியாவில் ஓர் அரிய அனுபவ வாக்கு உண்டு. “எவனொருவன் தன்னுடையதை உன்னுடையது தென்றும், உன்னுடையதை உன்னுடையதே என்றும் கூறுகின்றானோ அவன் சாது; எவனொருவன் தன்னுடையதைத் தன்னுடையது என்றும் பிறருடையதைத் தன்னுடையது என்றும் கூறுகின்றானோ அவன் இழிந்தவன்” என்பதே அந்த அனுபவ வாக்கு.

அதனால்தான், தமிழகத் திருமடங்களின் தலைவர்கள் பலகாலும் ‘நாம்’ என்றும், ‘நம்முடையது’ என்றும் வழங்கி வருகின்றனர் போலும்!

இச் சொல்வழக்கு பொருள் விளக்கமாக வளர்ந்து, வாழ்க்கையில் பொருளின் பெரும்பயன் விளையும். ஆதலால், துறவற இயலில் கள்ளாமை அதிகார இயல்பு இயல்புடையதே யாகும்.

அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்.

என்ற திருக்குறள் சிந்தனைக்குரியது. முன்னர் விளக்கியுள்ளது போல, பொருள் வரலாம், அங்ங்னம் வருவது துறவிகளின் நலன் கருதி மட்டுமல்ல — பலர் நலன் கருதியே யாகும்.

ஆயினும், பலன் நலன் கருதிப் பொதுப் பணி ஆற்றுவோருக்கும் துறவு நெறி மேற்கொண்டோருக்கும்கூட வாழ்க்கையுண்டு — அவர்களுக்கும் தேவையுண்டு. அத் தேவையை அவர்கள் அளவோடு அடைந்து அனுபவித்தல் தவறன்று.

அங்ஙனமின்றி, பொதுப் பணியின் பேரால் துறவு நிலையை முதலாகக் கொண்டு தோன்றிய பொருளைத் தவறான வழிகளிலும், தேவையற்ற ஆடம்பரங்களிலும் செலவழித்து, துய்த்தலும் — அனுபவித்தலும், அவ்வழி அச்சம் தோன்றுதலால் தன்னலம் கருதி, தனி நிதி சேர்த்து வைத்துக் கொள்ளுதலும் களவேயாகும்.

ஆதலால், பெரும் பொருள் தேட வேண்டும் — அனுபவிக்க வேண்டும், என்ற விருப்பத்தோடு “தவம் மறைந்து அல்லவை செய்வார் அளவின்கண் நின்றொழுகார்” தம்முடைய வாழ்க்கைக்கு தேவைகளை எளிய முறையில், அளவுக்கு உட்படுத்திக் கொள்ளமாட்டார்கள். அளவிறந்த ஆடை ஆபரணங்கள் சுகபோக வசதிகள் ஆகியவற்றில் வாழ்வார்கள். அவர்கள் மகிழ்வார்கள்.

ஆனால் அந்தப் பொருளின் தோற்றம் அவர்கள் மகிழ்தற்கல்ல — பிறரை மகிழ்வித்து வாழ. பிறரை மகிழ்விக்கத் தோன்றிய பொருளில் தாம் மகிழ்தல் துறவின் பாற்பட்டதன்று. இதனையே திருக்குறள் வலியுறுத்து கின்றது.

அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்.