குறட்செல்வம்/தன் குற்றம் நீக்கிப் பிறர் குற்றம் காண்க
46. தன் குற்றம் நீக்கிப்
பிறர் குற்றம் காண்க
அரசு பொறுப்புள்ள ஒன்று. அரசின் அதிகாரத்திற்கு 8எல்லைகளுண்டு. ஆனால் அரசினுடைய பொறுப்புகளும் கடமைகளும் மிகப் பரந்தன. நாட்டு மக்களிடையே நல்லொழுக்கமும் நன்னெறிச் சார்பும் நிலைபெற்றிருக்கும்படி செய்யவேண்டிய பொறுப்பு அரசினுடையதேயாகும்.
அதனாலன்றோ 'நன்னடை நல்குதல் வேந்தர்க்குக் கடனே' என்று புறநானூறு பேசுகிறது. நன்னடை நல்குதல் என்றால் உத்தரவுகள் மூலம் என்பது பொருளன்று. சட்டங்கள் மூலமும் அன்று. கட்டுப்பாடுகள் மூலமும் அன்று, தண்டனைகள் மூலமும் அன்று.
அரசன், தான் வாழ்தலின் மூலம் நாட்டு மக்களுக்கு நல்லொழுக்கத்தை எடுத்துத் தரவேண்டும். மேலும் நாட்டில் தனிமனிதனுடைய - சமுதாயத்தினுடைய ஒழுக்கச் சார்பு நல்வாழ்க்கைக்கு அரசே பொறுப்பு.
ஒழுக்க நெறிகளைப் பற்றி உரத்துப் பேசினால் போதாது. அல்லது, தண்டனையைக் காட்டி அரசும், நரகத்தைக் காட்டி மதத் தலைவனும் மிரட்டினால் ஒழுக்கம் வளர்ந்து விடுமா என்ன? போக்குமடை கட்டாமல் அணையில் தண்ணீரைத் தேக்கினால் உடைப்பெடுப்பதைத் தவிர, வேறு வழி யென்ன?
அதுபோலவே வாழ்க்கையின் தேவைகளை பெற்று சீராக வாழும் வழிவகைகளைக் காட்டாமல் — பெற துணை நிற்காமல் — அல்லலுற்று அழச் செய்தால் ஒழுக்கமா வளரும்? நரகத்தைத்தான் காட்டுங்களேன்? ....... ஒருக்காலும் முடியாது.
குற்றம் இருக்கிற இடம் மட்டுமே நமக்குத் தெரிகிறது. ஆனால் அந்தக் குற்றத்தின், பிறப்பிடம் நமக்குத் தெரிவதில்லை. தெரிந்தாலும் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ள மறுக்கிறோம். காரணம் நாமேகூட அந்தக் குற்றங்கள் தோன்றக் காரணமாக இருப்பதனால்தான்.
பொய் சொல்லுவது குற்றம். ஆனால் அதைவிடப் பெரிய குற்றமுடையது பொய் சொல்ல உருவாக்கிய சமுதாயமேயாம். திருடுவது பெரிய குற்றம். ஆனால் அதைவிடப் பெரிய குற்றம் திருடக்கூடிய சூழலில் சமுதாயத்தை அமைத்திருக்கிறோம்.
அழுக்காறு கொள்வது குற்றம். ஆனால் அதைவிடப் பெரிய குற்றம் அழுக்காறு தோன்றுமளவுக்கு ஏகபோக மாக வாழ்வதை அனுமதிப்பது. மேற்கண்ட குற்றங்களின்றி சமுதாயத்தின் நடைமுறையை ஒழுங்கு படுத்தி எல்லோரும் எல்லாவற்றையும் பெற்று வாழும் இயல்புடைய சமுதாயமாக அமைப்பது அரசின் பொறுப்பு.
ஆனால் இன்றோ அரசுகள் இந்தப் பொறுப்பினையா மேற்கொண்டு செய்கின்றன? இன்றோ அரசு வல்லாளர்கள் கையிலேயே சிக்கி அவர்கள் கைப்பொம்மையாக இருக்கிறது.
அரசு நாட்டு மக்களிடையே குற்றத்தைப் பார்க்குமானால், அந்தக் குற்றம் மக்களிடையே தோன்றி வளர்வதற்கு அரசின் ஆட்சிமுறையின் குறைபாடே காரணம் என்பதை அறியவேண்டும். இது முற்போக்கான அரசாங்கத்தின் சிறந்த கருத்தும் அமைப்புமாகும். ஆதலால் அரசு மக்களிடமுள்ள குற்றத்தை காணுமானால் அந்தக் குற்றங்கள் தோன்றுதற்குரிய தன்னுடைய குற்றத்தை நீக்கிக் கொள்ள வேண்டும்.
அப்பொழுதுதான் நாட்டு மக்களிடையே குற்றங்கள் தோன்றுவதற்குரிய வாய்ப்புகள் இல்லாமற் போகும். எவ்வளவு சிறந்த முற்போக்கான அரசியல் கருத்து என்பதை எண்ணி மகிழ்ந்து செயற்படுத்த வேண்டும். இதனை,
தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்
என்குற்றம் ஆகும் இறைக்கு.
என்று திருக்குறள் பேசுகிறது.
அரசின் தன் குற்றம் நீங்கிய அளவிலேயே, பிறர் குற்றம் ஒன்று இல்லை யென்பது உணரத்தக்கது. ஆனால் இன்றைய நடைமுறையில் அரசுகள் அதிகார அமைப்பின் மேல்மட்டங்களாக விளங்குகின்றனவே யொழிய, அற நெறியின் மேல்மட்ட அமைப்புகளாக விளங்கவில்லை.
ஆட்சியின் வட்டங்களைச் சார்ந்தவர்களுக்கு இலாபம் இருப்பதாக மக்கள் கருதுகிறார்கள். பலரும் அந்த மையத்தைப் போட்டா போட்டி மனப் போக்குடன் வட்ட மிடுகிறார்கள். அங்கு ஆர்ப்பாட்டமிருக்கிறது. ஆரவாரம் இருக்கிறது. போட்டா போட்டிகள் இருக்கின்றன. தந்திரங்களும் மந்திரங்களும் தலைகாட்டத் தொடங்கி விட்டன.
இவைகள் அரசு அறநெறிச் சார்பினின்றும் பிறக்கின்றனவோ என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது. அதுமட்டுமின்றி அரசின் அறிக்கைகளும்கூட குற்றங்களை கண்டுபிடிப்பதில் அரசு சாதித்த சாதனைகளைப் பட்டியல் போட்டுக் காண்பிக்கின்றன. அதற்கு மாறாக மக்கள் மன்றத்தின் நிறைநல வளர்ச்சி குறித்து மதிப்பிடுவதில்லை.
பொதுவாக இன்று ஒரு அரசு மிக மிகச் சாதாரணமான காவல் உத்தியோகத்தையே வகிக்கிறது. ஆனால் அரசினுடைய பொறுப்போ தன் குடிமகனுடைய அறிவைத் தொட்டுத் தோண்டி வளர்ப்பது, ஆள்வினையாற்றலை வளர்ப்பது; ஒழுக்க நெறியில் நிறுத்துவது.
என்னுடைய தேவைகளை நான்பெற என்னை முறையான வழியில் வழி நடத்துவது. பெற வேண்டுவனவற்றைப் பெற்று வாழத் துணை நின்று பாதுகாப்பது. இவ்வளவும் அரசின் பொறுப்பு.
இத்தகைய எந்தவொரு பொறுப்பினின்றும் அரசு நழுவினால் மக்கள் மன்றத்தில் குற்றம் மலியும். குற்றத்தைக் கூறிப் பயனில்லை. அரசு குற்றமுடையதாக இருந்து கொண்டு மக்களுக்குத் தண்டனை வழங்குவது அறநெறியும் அன்று.
அதனாலேயே தன் குற்றம் கண்டு தன்னுயிர் தந்தனன் பாண்டியன் நெடுஞ்செழியன். கோவலனிடத்தில் குற்றமில்லை. பாண்டியனிடத்திலிருந்த குற்றம் கோவலனிடத்தில் குற்றத்தை உண்டாக்கியது என்பதையும் அடியிற்கண்ட குறளையும் இணைத்து நோக்கினால் தமிழர் அரசியலின் விழுமிய சிறப்புக்கள் விளங்கும்.
தன்குற்றம் நீக்கிப் பிறர் குற்றம் காண்கிற்பின்
என்குற்றம் ஆகும் இறைக்கு.
என்பது திருக்குறள்.
ο ο ο