பாரதிதாசன்/சில சிறப்புச் செய்திகள்
11
சில சிறப்புச் செய்திகள்
ஒருவன் புகழ்வான் ஒருவன் இகழ்வான்
இரண்டுக்கும் அப்பால் இரு.
பொற்கிழி வழங்கும் விழா
தமிழ்நாட்டின் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் தமிழ் இலக்கியத்துக்கும். தமிழ்ச் சமுதாயத்துக்கும் சேவை செய்ததைப் பாராட்டும் முகத்தான் அவருக்கு நிதிதிரட்டிப் பொற்கிழி வழங்குவதென நாமக்கல்லைச் சேர்ந்த எம். செல்லப்ப ரெட்டியார், என்.கிருஷ்ணராஜ் ரெட்டியார், கே. கருப்பண்ணன் என்ற மூவரும் திட்டமிட்டனர். அது தொடர்பான அறிக்கை ஒன்றும் கீழ்க்கண்டவாறு வெளியிட்டனர்.
'பாரதிதாசன் பெருந்தொண்டிற்கு நன்றி செலுத்தும் பான்மையோடு ஒரு நிதி திரட்டிக் கவிஞர் அவர்கட்குக் கூடியவிரைவில் அளிப்பதெனத் தீர்மானித்துள்ளோம். தமிழ் அன்பர்கள் அனைவரும் இந்நிதிக்குத் தாராளமாக நன்கொடைகள் தந்துதவுமாறு கேட்டுக் கொள்கிறோம். நிதிக்குப் பணம் அனுப்பும் அன்பர்கள் 'பாரதிதாசன் நிதிக்காக என்று குறிப்பிட்டுக் கீழ்க்கண்ட முகரிக்கு அனுப்பி வைக்கக் கோருகிறோம்"
என். கிருஷ்ணராஜ் ரெட்டியார்
நாமக்கல் (சேலம் ஜில்லா)
பாரதிதாசன் நிதிக்குழுவில் பெரியார் ஈ.வெ.ரா. அறிஞர் அண்ணா, மாஜி அமைச்சர்கள் எஸ். இராமநாதன், எஸ். முத்தையா முதலியார், எஸ்.ஆர். சுப்பிரமணியம், சேலம் கல்லூரி முதல்வர் அ. இராமசாமிக் கவுண்டர், ஏ.வி.பி. ஆசைத் தம்பி முதலிய பிரமுகர்களும் வேறு சிலரும் இடம் பெற்றிருந்தனர்.
அன்பர்கள் அனுப்பிவைத்த நிதியும், வீரவாலி நாடக வசூலுமாகச் சில ஆயிரங்கள் சேர்ந்தன. பெரியார் ஈ.வெ.ரா. ரூ.150-ம், கவிஞர் கம்பதாசன் ரூ.500-ம், தமிழறிஞர் கி.வ.ஜ. ரூ.25-ம் நிதி வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நாமக்கல் அன்பர்கள் இந்நிதி வசூல் பொறுப்பை அறிஞர் அண்ணாவிடம் ஒப்படைத்தனர். அண்ணாவின் தலையீட்டால் நிதி வசூல் விறுவிறுப்பும் விளம்பரமும் பெற்றது. தமிழகத்தில் மட்டுமன்றி இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய இடங்களிலிருந்தும் நிதி குவிந்தது.
29.7.46ஆம் நாள் பாரதிதாசனின் நிதியளிப்பு விழா சென்னை பச்சையப்பன் திடலில் நடைபெற்றது. நாவலர் ச. சோமசுந்தர பாரதியார் எம்.ஏ., பி.எல். அவர்கள் விழாவுக்குத் தலைமை தாங்கினார். குளிக்கரை பிச்சையப்பாவின் நாதசுர இசையோடும், இசையரசு தண்டபாணி தேசிகரின் தமிழிசையோடும் விழா துவங்கியது.
திருவாளர்கள் செங்கல்வராயன் டாக்டர். ஏ. கிருஷ்ணசாமி, டாக்டர். ஆர்.பி. சேதுப்பிள்ளை, முத்தமிழ்க் காவலர் கே.ஏ.பி. விசுவநாதம், ப. ஜீவானந்தம், இரா. நெடுஞ்செழியன், திருமதி. குஞ்சிதம் குருசாமி ஆகியோர் பாராட்டுரை வழங்கிச் சிறப்பித்தனர். அறிஞர் அண்ணா தமிழக மக்கள் சார்பில் பொன்னாடை போர்த்திப் பாரதிதாசனுக்கு ரூ. 24,300 அடங்கிய பொற்கிழியை வழங்கினர். சலகை ப. கண்ணனும், டி.என். இராமனும், நிதியளிப்பு விழா மலர் ஒன்று வெளியிட்டனர். தமிழ்நாட்டின் சிறந்த அறிஞர் பலர், அதில் பாவேந்தரைப் பற்றி அரிய கட்டுரைகள் எழுதியுள்ளனர்.
அனைத்துலகத் தமிழ்க் கவிஞர் பெருமன்றம்
இம்மன்றம் 26.01.62 வெள்ளி மாலை பாரதிதாசன் குடியிருந்த தியாகராயநகர் இராமன் தெரு இல்லத்தில் தொடங்கப்பட்டது. சென்னைக் கவிஞர்களான நா.ரா. நாச்சியப்பன், வல்லம் வேங்கடபதி, வேழவேந்தன். முருகுகந்தரம், தமிழ்முடி, தமிழழகன், நா.க.முத்தையா, பொன்னடியான், நாரண துரைக்கண்ணன், செந்தாமரை, பேராசிரியர் சி. பாலசுப்பிரமணியம், ஆகியோர் இல்லத்தில் கூடியிருந்தனர்.
பாரதிதாசன் இளையமகள் சகுந்தலா பாரதியும் பாரதிதாசனின் அழைப்பின் பேரில் வந்திருந்தார். வயது ஐம்பதிருக்கும். நன்றாகப் பழுத்த எலுமிச்சம் பழத்தின் நிறம், ஒற்றை நாடி உடம்பு உட்காருவது கூடப்பாரதி போலச் சப்பணம் போட்டு மார்பையும் தலையையும் நிமிர்த்து உட்கார்ந்திருந்தார். பேசுவதும் பாரதி போலவே வெடுக்கென்று பேசினார்.
அனைத்துலகத் தமிழக்கவிஞர் பெருமன்றத் துவக்கவிழாவில் பாரதிதாசன் பேசிய பேச்சில் பொதிந்திருந்த கருத்துக்கள் பின் வருமாறு:
"உலகின் பல நாடுகளிலும் வாழும் தமிழ்க் கவிஞர்கள் எல்லோரையும், ஒன்றாகத் திரட்டி ஒரு பெரிய சக்தியாக உருவாக்குவது இம்மன்றத்தின் முதல் நோக்கம். அவர்கள் பாடல்களையெல்லாம் ஒன்றாகத் திரட்டி நூலாக வெளியிட வேண்டும். அப்பாடல்களை ஆங்கிலத்திலும், பிற மொழிகளிலும் மொழி பெயர்க்க வேண்டும். தில்லிக்கும், பிற மாநிலங்களுக்கும் தமிழே அறியாத சிலர், தாங்கள்தாம் தமிழ்க் கவிஞர்களின் முகவர்கள் என்று கூறிக்கொண்டு செல்கிறார்கள். அத்தகைய வேற்றுமாநில மன்றங்களுக்குக் கவிஞர் மன்றம் தனது முகவரை அனுப்ப வேண்டும்".
அனைத்துலகத் தமிழ்க் கவிஞர் பெருமன்றத்தை இயக்க பாரதிதாசன் தலைமையில் ஒரு செயற்குழு அமைக்கப்பட்டது. மன்றத்தின் சார்பில் திங்கள் இருமுறை இதழாகக் 'குயில்' ஏடு துவக்கப்பட்டது. பாரதிதாசன் இறப்பிற்குப் பிறகு தமிழ்க்கவிஞர் பெருமன்றம் கவிஞர் சுரதாவாலும், கவிஞர் பொன்னடியானாலும் தொடர்ந்து பேணப்பட்டு உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறது.
இறுதிப் பயணம்
பாரதியின் வாழ்க்கையை உடனிருந்து கண்டவர் பாரதிதாசன். பாரதியாரின் வரலாற்றை எப்படியாவது எழுதி முடிக்க வேண்டும் என்பது அவர் நீண்டநாள் அவா. தம் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் அதை எழுதி முடிக்க முழு மூச்சோடு பாரதிதாசன் ஈடுபட்டார். இரவு பகலாக உழைத்துப் பாரதியின் வாழ்க்கையை நாடக வடிவில் எழுதிமுடித்தார்.
இடையறாத எழுத்துப் பணியும், திரைப்பட முயற்சியால், ஏற்பட்ட மனஉளைச்சலும் அவரைக் கடுமையாகப் பாதித்தன. 20.04.1964 அன்று மாரடைப்பால் கடுமையாகத் தாக்கப்பட்டு சென்னை அரசாங்கப் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அடுத்த நாள் காலை அவர் ஆவி பிரிந்தது.
21.04.1964இல் தமிழகச் செய்தி ஏடுகள் பாரதிதாசன் இறப்புச் செய்தியைத் தலைப்புச் செய்தியாகப் படங்களுடன் வெளியிட்டன. பாரதிதாசன் உடல் இராமன் தெரு இல்லத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. சென்னைப் பிரமுகர்களும், நடிகர்களும், இலக்கிய அன்பர்களும் பாரதிதாசனைக் கடைசி முறையாகக் காணத் திரளாக வந்திருந்தனர்.
பிறகு கவிஞரை எங்கு அடக்கம் செய்வது என்ற பிரச்சனை எழுந்தது. மன்னர் மன்னன் புதுச்சேரியில் தான் அடக்கம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினார். கவிஞரின் உடல் காரில் புதுச்சேரிக்குக் கொண்டு செல்லப்பட்டது.
பாரதிதாசன் வீடு தொட்டிக் கட்டுவீடு. நடுவில் இருந்த தொட்டியில் தென் வடலாக அவர் படுக்க வைக்கப்பட்டிருந்தார். அவரைச்சுற்றி மாலைகளும், மலர் வளையங்களுமே தென்பட்டன. மக்கள் கூட்டம் ஓயாமல் உள்ளே வருவதும் போவதுமாக இருந்தது. கவிஞரின் மனைவியாரும் மக்களும் காலடியில் அமர்ந்து அவர் பாதங்களைக் கண்ணீரால் கழுவிக் கொண்டிருந்தனர். கவிஞரின் மகன் மன்னர் மன்னன் சுவரில் தலையை மோதிய வண்ணம் கதறிக் கொண்டிருந்தார். கவிஞர் பொன்னடியான் அருகிலிருந்து அவருக்கு ஆறுதல் கூறிக் கொண்டிருந்தார். தமிழ்நாடு-புதுவை மாநிலங்களைச் சேர்ந்த முக்கிய அரசியல்வாதிகளும், கவிஞர்களும், புலவர்களும், பெருமாள் கோயில் தெருவெங்கும் நின்று கொண்டிருந்தனர்.
பாவேந்தரின் இறுதி ஊர்வலம் 22.04.64 ஆம் நாள் காலை பத்து மணிக்கு அவர் வீட்டிலிருந்து துவங்கியது. மகாகவி பாரதி திருவல்லிக்கேணியில் இறந்தபோது, அவரை அடக்கம் செய்வதற்காகப் புறப்பட்ட இறுதி ஊர்வலத்தில் இருபதுக்கும் குறைவானவர்களே கலந்து கொண்டனர் என்று பாரதியின் நண்பர் நீலகண்ட பிரம்மச்சாரி வருந்திக் கண்ணி வடித்திருந்தார். ஆனால் பாரதிதாசன் இறுதி ஊர்வலத்தில் 10,000 பேர் கலந்து கொண்டனர்.
ஊர்வலம் ஒருகல் தொலைவு இருந்தது. புதுவை முதலமைச்சர் குபேர் வழியில் பாவேந்தருக்கு மாலையிட்டு வணங்கினார். வேறு இரண்டு புதுவை அமைச்சர்களும் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். ஊர்வலம் நடுப்பகல் 12 மணியளவில் மயானத்தை அடைந்தது, எந்தச் சடங்குகளும் இல்லாமல் கவிஞர் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
பாவேந்தர் அடக்கம் செய்யப்பட்டதும், அம்மயானத்திலேயே ஓர் இரங்கற் கூட்டமும் நடைபெற்றது. திருவாளர்கள் ம.பொ. சிவஞானம், ஈ.வி.கே. சம்பத், இரா. நெடுஞ்செழியன், மு. கருணாநிதி, என்.வி. நடராசன், கண்ணதாசன், சுப்பையா (புதுவை பொதுவுடைமைக் கட்சித் தலைவர்), கவி. கா. மு. ஷெரீஃப், குத்தூசி குருசாமி ஆகியோர் பேசினர். அவ்வை திரு.டி.கே. சண்முகம் 'துன்பம் நேர்கையில்' 'உலகப்பன்' ஆகிய பாவேந்தர் பாடல்களைப் பாடினார்.
நெருங்கி வந்த ஞானபீடம்
இந்தியாவிலேயே மதிப்பிற்குரிய மிக உயர்ந்த இலக்கியப் பரிசு ஞானப்பீடப் பரிசு. தமிழ்நாட்டில் முதன் முதலாக இவருக்குத் தான் 1964ஆம் ஆண்டு அப்பரிசு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் அப்பரிசு முடிவு வெளியாவதற்கு முன்பே பாரதிதாசன் இறந்து விட்டார். அப்பரிசு வாழும் கவிஞர்களுக்கு வழங்கும் பரிசு ஆதலால், அது மலையாளக் கவிஞர் சங்கர் குருப்புக்கு அவ்வாண்டு வழங்கப்பட்டது.
பெற்ற சிறப்புக்கள்
1935 | இந்தியாவில் முதல் பாட்டேடு துவங்கினார் |
(ஸ்ரீசுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம்) | |
1955 | தேர்தலில் வெற்றி பெற்றுப் புதுவைச் |
சட்டமன்ற உறுப்பினர் ஆனார். | |
1962 | மூதறிஞர் இராஜாஜியைக் கொண்டு |
பொன்னாடை அணிவித்துக் கேடயம் வழங்கிப் | |
புரட்சிக் கவிஞருக்குத் தமிழ் எழுத்தாளர் சங்கம் | |
சிறப்புச் செய்தது. | |
1965 | ஏப்ரல் 21ஆம் நாள் புதுவைக் கடற்கரை |
சார்ந்த பாப்பம்மாள் கோயில் இடுகாட்டில் | |
நினைவுமண்டபம் எழுப்பப்பட்டது |
1968 - | இரண்டாம் உலகத் தமிழாராய்ச்சி |
மாநாட்டை யொட்டி பாரதிதாசன் உருவச்சிலை | |
சென்னைக் கடற்கரையில் நிறுவப்பட்டது. | |
1969 - | பாரதிதாசனின் பிசிராந்தையார் |
நாடகத்திற்குச் சாகித்திய அகாதமி பரிசு | |
வழங்கியது. | |
1971 - | ஏப்ரல் 29ஆம் நாள் பாரதிதாசன் பிறந்த |
நாள் விழா புதுவை அரசு விழாவாகக் | |
கொண்டாடப்பெற்றது. ஒவ்வோராண்டும் அரசு | |
விழா நிகழ்கிறது. பாவேந்தர் வாழ்ந்த 95ஆம் | |
எண்பெருமாள் கோயில் இல்லம்,அரசுடைமை | |
ஆக்கப்பட்டு நினைவு நூலகமும், காட்சிக் | |
கூடமும் நிறுவப்பட்டன. | |
1972 - | ஏப்ரல் 29இல் புதுவை அரசினரால் |
பாவேந்தர் முழு உருவச்சிலை புதுவையில் | |
திறந்து வைக்கப்பட்டது. | |
30.4.1982 - | |
ஏப்ரல் திங்களில் பாரதிதாசன் பெயரில் | |
பல்கலைக்கழகம் திருச்சிராப் பள்ளியில் | |
உருவாக்கப்பட்டது. | |
15.5.1993 - | |
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 'பாரதிதாசன் | |
உயராய்வு மையம்' அமைக்கப்பட்டது. |
இவைகளன்றித் தமிழக அரசால் பாரதிதாசன் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டன. தமிழகத்திலும் புதுவை மாநிலத்திலும் பாரதிதாசன் பெயரில் தெருக்கள், ஊர்கள், நகர்கள், உருவாக்கப்பட்டுள்ளன; கலைக்கல்லூரிகளும், பொறியியற் கல்லூரிகளும் நிறுவப்பட்டுள்ளன; பல அமைப்புகளும் தோற்றுவிக்கப்பட்டுள்ளன: தமிழக அரசும் புதுவை அரசும் பல இலக்கிய விருதுகளும், பரிசுகளும் ஆண்டுதோறும் அவர் பெயரால் வழங்குகின்றன.