உள்ளடக்கத்துக்குச் செல்

ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்/பறவையும் விலங்கும் பரமன் உருவில்

விக்கிமூலம் இலிருந்து

பறவையும் விலங்கும்
பரமன் உருவில்


குற்றாலத்தில் குரங்குகள் எல்லாம் கூடி ஒரு மகாநாடு நடத்தியது. ஒரு பெரிய சம்மேளனமே நடந்தது. அந்தச் சம்மேளனத்துக்கு எனக்கு அழைப்பு இல்லை. என்றாலும் நம் மூதாதையர் ஆயிற்றே அவர்கள். ஆதலால் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று அறியும் ஆவலுடன் நானும் சென்றிருந்தேன். சம்மேளனம் மண்ட பங்களில் நடக்கவில்லை, மாடியிலும் நடக்கவில்லை. மரக்கிளைகளிலேயே நடந்தது. ஆதலால் மரம் ஏறத் தெரியாத நான் அவர்களுடன் நெருங்கியிருந்து அங்கு நடந்த பேச்சுகளைக் கேட்க முடியவில்லை. என்றாலும் அங்கு சென்றிருந்த நிருபர் ஆம் குரங்கு நிருபர் ஒருவரைத் தான் கைக்குள் போட்டுக் கொண்டு, நடந்த பேச்சுகளின் சாரத்தை மட்டும் தெரிந்து கொண்டேன்.

ஒரு சிறு குரங்கு பேசிற்றாம் - குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்கிறார்களே, இந்த மனிதர்கள், இது நமக்குப் பெருத்த அவமானத்தைத் தருகிறது. நம்மைப் போல அழகு வாய்ந்தவனாகவா இந்த மனிதன் இருக்கிறான், மேனி அழகினிலும், விண்டுரைக்கும் வார்த் தையிலும், கூனியன யேடுகாலு நேர்த்தி துள்ளிலுமே வானரராம் நம் சாதிக்கு மனிதர் நிகர் ஆவரோ? அவர்களுக்கு வாலுண்டா! நம்மைப் போல் வடிவுண்டா? இல்லை, குண நலத்திலாவது நமக்கும் அவர்களுக்கும் ஒற்றுமை உண்டா? மனிதன் அடுத்தவனைக் கெடுக்கிறான். அவனைப் பற்றிப் புறம் பேசுகிறான். பொறாமை கொள்கிறான். பொன்னும் பொருளும் தேட தகாத முறைகளை எல்லாம் கையாளுகிறான். களவு செய்கிறான். கொலை புரிகிறான். இன்னும் என்ன என்ன எல்லாமோ செய்கிறான்.

இப்படி யெல்லாம் குணம் கெட்டு அலைகிற மனிதன் பல குண நலம் படைத்த நமது சந்ததியார் என்று சொல்லி நமது பெருமையையே குலைக்கிறான். ஆதலால் 'குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்' என்ற கூற்றை நாம் வன்மையாகக் கண்டிக்க வேண்டும். அப்படிக் கண்டிக்கிறோம், என்று கூறி ஒரு தீர்மானம் நிறைவேற்றி அமரர் உலகில் இருக்கும் அந்தப் பழைய மனிதன் டார்வினுக்கே அனுப்பி வைக்க வேணும். அவன் தானே இந்த எண்ணத்தை மனிதன் உள்ளத்தில் ஊன்றியவன் என்று காரசாரமாகவே பேசிற்றாம். அச்சிறு குரங்கின் தீர்மானத்தை ஏக மனதுடன் மற்ற குரங்குகளும் ஆமோதித்து நிறை வேற்றி வைத்தன.

இதைக் கேட்ட நான் அவமானத்தால் கூனிக் குறுகி மற்ற தீர்மானங்களைப் பற்றி எல்லாம் கேட்காமலேயே திரும்பி விட்டேன். உண்மை தானே, நல்ல பழுத்த சைவ நெறியிலே அல்லவா இந்தக் குரங்குகள் வாழ்கின்றன.

புலால் உணவையே தொடுவதில்லை. ஒன்றுக் கொன்று, அன்புகொண்டவையாக வாழத் தெரிந்திருக்கிறதே பொய், கொலை, களவு, முதலிய பாதகங்களைச் செய்கிறதில்லையே - இத்தகைய நற்பண்புகள் எல்லாம் இழந்தவனாக அல்லவா மனிதன் வாழ்கிறான். அப்படியிருக்க குரங்குக்கும், அவை போன்ற மற்ற விலங்கினங்களுக்கும் ஆறறிவு கிடையாது. ஆகவே அவைகள் உயர்திணை வகுப்பைச் சேர்ந்தவை அல்ல என்று மனிதர்கள் கருதுவது சரிதானா என்றே எண்ணினேன்.

இப்படி நான் மட்டும் எண்ணவில்லை. நமது முன் னோர்களில் அறிவில் சிறந்த பலருமே எண்ணியிருக்கிறார்கள். இந்த உலகத்தை எல்லாம் படைத்துக் காத்து அழிக்கின்ற பரம் பொருளுக்கு வடிவம் இல்லை என்பதை உணர்ந்த அவர்கள், இப்படியன், இந்நிறத்தன், இவ் வண்ணத்தன், இவன் இறைவன் என்று எழுதிக்காட்ட ஒண்ணாது என்றும் கூறியிருக்கிறார்கள்.

அதே சமயத்தில் அந்த இறைவன் எல்லா இடத்தும் பரவி இருக்கிறான். அவன் இல்லாத இடமே இல்லை என்பதையும் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் பார்க்கும் மரங்களில் எல்லாம் அவன் பசிய வடி வினைக் கண்டிருக்கிறார்கள். காக்கை சிறகினிலே, அவன் கரிய நிறத்தைக் கண்டு மகிழ்ந்திருக்கிறார்கள். கேட்கும் ஒலியில் எல்லாம் அவன் கீதத்தைக் கேட்கிறார்கள். ஏன், எரிகின்ற தீயில் விரலை விட்ட போது கூட அவனைத் தீண்டும் இன்பத்தையே அல்லவா பெற்றிருக்கிறார்கள். இப்படி எங்கும் நிறைந்த இறைவனைத் தான் மலையில் கண்டிருக்கிறார்கள். மரத்தில் பார்த்திருக்கிறார்கள். ஏன் பறக்கும் பறவையாகவும், பாயும் விலங்காகவுமே அவனை உருவகப்படுத்தியிருக்கிறார்கள்.

இதை எல்லாம் உணர்ந்த, அறிஞர் பெர்னாட்ஷாவும், இந்த இந்தியர்கள் பொல்லாதவர்கள், பறவைகளையும் விலங்கினங்களையுமே தாங்கள் வழிபடும் மூர்த்திகளாக அமைத்துக் கொண்டு வணங்கத் தெரிந்திருக்கிறார்களே என்று அதிசயித்திருக்கிறார்.

சாதாரணமாக நாம் சொல்வோம். எல்லாம் வல்ல இறைவன் எங்கும் நிறைந்தவனாக தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான் என்று. சொல்லும் போது துண் என்பது ஒன்று, துரும்பு என்பது ஒன்று, இறைவன் என்பது வேறு ஒன்று. அது வந்து தூணில் புகுந்து கொண்டிருக்கிறது. துரும்பில் ஒட்டிக் கொண்டிருக்கிறது என்று தானே எண்ணத் தோன்றும். ஏன் அந்த துனே இறைவன், அந்தத் துரும்பே இறைவன் என்று எண்ணு தல் கூடாது என்று நமக்கு கேட்கத் தோன்றும் அல்லவா. இப்படிக் கேட்பவர்களை நினைந்தே அருள் அரசராகிய அப்பர் பெருமான்.

            நின்னாவார் பிறர் இன்றி
                  நீயே ஆனாய்
            நினைப்பவர்கள் மனத்துக்கோர்
                  வித்தும் ஆளாய்

என்று பாடத்துவங்கியவர். அவன் எப்படி எல்லாம் உருப் பெறுகிறான் என்ற சொல்ல முடியாமல் திணறித் திணறி:

            பொன்னானாய் மணியானாய்
                  போகம் ஆனாய்
            பூமிமேல் புகழ்த்தக்க பொருளே உன்னை
                  என்னானாய் என்னானாய்
            என்னின் அல்லால்
                  ஏழையேன் என் சொல்லி ஏத்து கேனே

என்றும் மயங்கி நிற்கிறார். அப்பர் போன்ற பெரு மக்களே இப்படித் திக்கித் திணறும் போது நம் நாட்டுக் கலைஞர்கள் மட்டும் எங்கும் நிறைந்த இறைவனைப் பறவை உருவிலே காணுகிறார்கள். விலங்கினமாகவுமே மதிக்கிறார்கள். பறவையையும் விலங்கினத்தையும் பரமன் உருவிலே அமைத்து அந்த உருவங்களை மனிதன் விழுந்து விழுந்து வணங்கவும் வகை செய்திருக்கிறார்கள். கலைகளில் எல்லாம் சிறந்த சிற்பக் கலை உலகிலே, இந்தப் பறவையும் விலங்கும். எப்படிப் பரமன் உருவிலே காட்சி தருகிறது என்பதை ஒரு சில உதாரணங் களால் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

தெய்வ வடிவங்களில் எல்லாம் எல்லோருக்கும் முன்னவனாய் முன் நிற்பவர் யார் என்பது நமக்குத் தெரியும். அவரே யானை வடிவினர். ஐந்து கரத்தவன், ஆனை முகத்தான், இந்தின் இளம் பிறை போலும் எயிற்றன், என்று அன்றே திருமூலரால் பாராட்டப் பட்டவர். மக்கள் மாக்களுடனே உருவத்தாலும் அறிவாலும் ஆற்றலாலும் சிறந்து விளங்கும் யானைக்கே தெய்வ வடிவில் முதலிடம் கொடுத்தது பொருத்தம் தானே. நூற்றி இருபது வயது வரை வாழக் கூடிய விலங்கு அது. எவ்வளவோ வலியுடையதாக இருந்தாலும் ஒரு கட்டுக்குள் அடங்கி நிற்கும் இயல்பும் உடையது. விரிந்த மனத்திற்கும் நிறைந்த அறிவிற்கும் உருவம் கொடுத்து கடவுளை உருவாக்க எண்ணிய கலைஞன், யானையின் வடிவிலேயே அதனை கற்பித்திருக்கிறார். அந்தக் கடவுளையே,

            பாசத்தளை அறுத்துப்
                  பாவக் கடல் கலக்கி
            நேசத்தளை பட்டு
                  நிற்குமே - மாசற்ற
            காரார் வரை ஈன்ற
                  கன்னிப்பிடி அளித்த
            ஓரானை வந்தென்
                  உள்தது

என்று குமரகுருபர அடிகள் பாடி மகிழ்கிறார்.

இந்த அண்ணனுக்கு ஏற்ற தம்பியோ அறுமாமுகவனாக அமைகிறான். அவன் மனித உருவினனே என்றாலும், அவனை எல்லா இடத்திலேயே இட்டுச் செல்லும் ஆற்றல் பெற்றது மயில் தான். விரிந்து பரந்த ஆகாயத்தையே மயிலென உருவகித்து, அதில் தோன்றும் செஞ்சுடராகவே முருகனை உருவகித்திருக்கிறார்கள். கலைஞர்கள் அவனை மயில் வீரன் என்றே வர்ணித்திருக்கிறார்கள். முருகனையும் விட அவன் ஏறி வரும் மயிலும் அவன் ஏந்தி நிற்கும் வேலுமே தொழுதற்குரியது என்றும் நினைத்திருக்கிறார்கள். அதனால் தானே அருணகிரியார் வழிக்குத் துணை அவன் வடிவேலும் செங்கோடன் மயூர முமே என்று பாடினார். இத்துடன் திருப்தி அடையாமல்,

            எட்டும் குலகிரி எட்டும் விட்டு
                  ஒட எட்டாத வெளி
            மட்டும் புதைய விரிக்கும்
                  கலாப மயூரத்துனே

என்று பாடிப்பரவசம் அடைகிறார். முருகனால் மயில் தெய்வீகம் அடைகிறதா, இல்லை, மயிலால் முருகன் பெருமையுறுகிறானா என்று கூறுவது எளிதானதில்லை தான்.

இவ்விருவரின் தந்தையாம் சிவபெருமானோ அன்பு நிறைந்தவர். மூவர் முதற் பொருளாய் முத்தொழிற்க்கும் வித்தாகி நாவிற்கும் மனத்திற்கும் நாடறிய பேரறிவாய் விளங்குபவன். அந்த அன்பு விகசிக்க அறம் போன்ற அடிப்படை வேண்டுமே அந்த அறத்தின் உருவத்தில் அவன் ஏறும் விடை எருது எழுகிறது. தோடுடைய செவியனாய் - அம்மை அப்பனாய் வரும் இறைவன் விடை ஏறியே துவெண் மதி சூடி வருகிறான் என்பர் ஞான சம்பந்தன். நன்றுடை யான். அவன் தீயதில்லான் அவன் நரை வெள்ளேறு ஒன்றுடையவனாக இருப்பதின் காரணமாகத் தான் இந்த ஒன்றையே நந்தியம் பெருமான் என்று கோயில் உள்ளே முன்னமேயே கண்டு வணங்குகிறோம். திருவாவடுதுறை என்னும் தலத்திலே நந்திக்கு தனிக் கோயிலே கட்டி வணங்கியிருக்கிறார்கள். திருநெல்வேலி மாவட்டத்திலே சிவசைலம் என்னும் திருப்பதியிலே கலை உலகு கண்டு அதிசயிக்கும் நந்தியின் வடிவினை அமைத்து வழிபடுகிறோம்.

இப்படியே சிவனையும் அவனது மக்கள் இருவரையும் பறவையோடும் விலங்கினத்தோடும் சேர்த்து இணைத்து வழிபடுகிற மக்கள், கடவுளான பரந்தாமனையே ஊர்வன, பறப்பன, நடப்பன முதலிய வடிவங்களிலே பலபல கோலங்களில் காண்கிறார்கள். பெருமான் எடுத்த திரு அவதாரம் பத்து என்பதை அறிவோம். அந்த பத்தும் உலகப் பரிணாமத்தை விளக்க. எடுத்தவை என்பதையுமே உணர்வோம். உலகப் பரிணாமத்தைப் பற்றிப் பேசும் போது ஆகாயத்திலிருந்து காற்றும், காற்றிலிருந்து தீயும், தீயிலிருந்து தண்ணிரும் தண்ணிலிருந்து மண்ணும் வந்தது என்பர். உலகம் முழுவதுமே முதலில் தண்ணிராகத் தான் இருந்திருக்கிறது. அந்த தண்ணிரிடையே மண் தோன்றி பின்னரே மண் உருப்பெற்றது என்றும் கூறுவர். உயிரினங்கள் இந்த முறையிலேதான் வளர்ந் திருக்க வேண்டும். ஆதலால்தான் ஆதியில் தோன்றிய உயிர் மீனாக, ஆம் நீரில் மட்டுமே வாழ்கின்ற உயிராக இருந் திருக்கிறது. அதன் பிறகுதான் நீரிலும் நிலத்திலும் வாழும் உயிராகிய ஆமை = கூர்மம் தோன்றியிருக்கிறது.

அதன் பின்னரே நிலத்திலே தங்கியிருந்து அதை குத்திக் கிளறி பயிர் விளைக்கும் உயிராகிய வராகம் தோன்றியிருக்கிறது. பின்னரே மிருகம் பாதியாகவும் மனிதன் பாதியாகவும் உருவாகிய நரசிம்மம் வெளி வந்திருக்கிறது. அதன் பின்தான் வளர்ச்சியில்லாத மனிதனாக. வாமனன் தோன்றியிருக்கிறான். இதற்கும் அப்பால் தான் பூரண வளர்ச்சி பெற்ற மனிதனான ராமன் பிறந்திருக்கிறான். ராமனுக்கும் பின்னரே கண்ணன் தோன்றியிருக்கிறான், என்றெல்லாம் சொல்லுகிறார்கள் அறிஞர்கள். மீனாக, ஆமையாக, கூர்மமாக, வராகமாக உருவெடுத்தவனுக்கு தெய்வத்திரு உருவங்கள் அமைத்து வணங்க நாமும் மறக்கவில்லை. இவர்களில் இருவரையே இங்கு காண்கிறீர்கள். பூரீ முஷ்ணத்திலே பூவாரகன் கோயில் கொள்கிறார் என்றால், நாமக்கல்லில் நரசிம்மர் பிரதான மூர்த்தியாக விளங்குகிறார். இவர்கள் எல்லாம் நமக்கு நீண்ட காலமாக அறிமுகமானவர்கள். இன்னும் இந்தப் பரந்தாமனை குதிரை வடிவிலும் வணங்கத் தெரிந்திருக்கிறோம் என்றால், அது என்ன சார். அது நம் நாட்டு மிருகமே இல்லையே அரேபியர்களிடமிருந்து வந்த தாயிற்றே என்பிர்கள். எங்கிருந்து வந்தாலும் அது இந்தியாவில் நிலைத்து நின்றிருக்கிறதே. நம் வீடுகளில் வளக்கும் மாட்டை போல் மனிதனுக்கு உழைக்கும் உழைப்பாளியாக அல்லவா குதிரை இருக்கிறது. நன்றி மறவாத நாயுடன் போட்டியிடும் வரிசையில் மனிதனுக்குத் தோழனாகவும் அமைகிறதே. இம்மட்டோ அழகு நிறைந்த உடலும், அறிவும் அடக்கமும் நிறைந்த உள்ளமும் உடையதாகவும் இருக்கிறதே. பல்லாயிர வருஷ காலமாக மனிதனை சுமந்து அவன் ஆடும் வேட்டையிலும் அவன் விளையாடும் விளையாட்டுகளி லும் கலந்துகொள்வதுடன் அவன் வீரம் எல்லாம் வெளிப் பட போர்க்களம் வரையிலும் அவனை இட்டுச் சென்று துணை நின்றிருக்கிறதே! அத்தகைய தொரு விலங்கினை தெய்வமாக வழிபட மறப்பார்களா தமிழர்கள்.

ஆம் குதிரை வடிவிலும் பரந்தாமனை வணங்கினார் கள். அவ்வடிவிற்கே ஹயக் கிரீவன் என்று நாம கரணம் சூட்டியிருக்கிறார்கள். திருப் பாதிரிப் புலியூரை அடுத்த திருவஹீந்திரபுரத்திலே மலை மீது ஏற்றி இருத்தி வைத் திருக்கிறார்கள். இவ்வடிவையுமே பார்த்திருக்கிறீர்கள் பக்கத்திலே.