உள்ளடக்கத்துக்குச் செல்

ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்/கோதையின் அழகிய கோலம்

விக்கிமூலம் இலிருந்து

கோதையின் அழகிய கோலம்


எழில் உடைய அம்மனையீர்
தென் அரங்கத்து இன்ன முதர்
குழல் அழகர், வாய் அழகர்
கண் அழகர், கொப் பூழில்
எழுகமலப் பூ அழகர்
எம்மானார் என்னுடைய
கழல்வளையைத் தாமும்
கழல்வளையே ஆக்கினரே

என்று பாடுகிறாள் சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாம் ஆண்டாள். அரங்கனது அழகை இப்படி துணித்து நுணித்து அனுபவித்து இருக்கிறாளே, இவள் எவ்வளவு அழகு வாய்ந்தவளாக இருத்தல் வேண்டும் என்று எண்ணினேன். அதற்காக திவ்யப் பிரபந்தத்தைப் புரட்டினேன். கோதை தான் தன் அழகைப் பற்றிப் பேச நாணி நிற்கிறாள். நிற்கட்டும். இந்தப் பெரியாழ்வார் தன் மகள் அரங்கனிடம் கொண்ட காதலைப் பற்றியெல்லாம் பலபல சொல்லுகிறாரே அவராவது கோதையின் அழகைப் பற்றிச் சொல்ல மாட்டாரா என்று ஏங்கினேன். அவருமே 'கம்' என்று இருந்து விடுகிறார். பின்னர் திவ்ய சூரி சரிதையையும் குருபரம்பரைப் பிரபாவத்தையும் தேடி எடுத்துப் படித்தேன்.


பெரியாழ்வார் நந்தவனத்தில் களை எடுத்துக் கொண்டிருந்தபோது அங்கே திருத்துளாய் வேரின் கீழ் சுவர்ண கலசத்தில் காஞ்சன மயமான பசுங்குழந்தை ஒன்று பிரகாசித்துக் கொண்டிருந்தது என்று ஆண்டாளின் அவதார விசேஷத்தைக் கூறுகிறது, திவ்ய சூரி சரிதை. குரு பரம்பரை பிரபாவம் என்னும் பன்னிராயிரப்படி பூதேவியே இறைவனை வேண்டி பெரியாழ்வாருக்கு குழந்தையாகத் தோன்றினாள் என்று கூறுகிறது.

இல்லா விட்டால். அந்த அரங்கன் என்ன ஏமாந்த சோணகிரியா? அழகு குறைந்திருந்தால் ஆண்டாளை மணம் செய்து கொள்ள ஓடி வந்திருப்பானா! லட்சணங்கள் அப்படி ஏற்றுக் கொள்ளப்பட்ட கோதையும் நிறைந்த அழகுடையவளாகத்தானே இருந்திருக்க வேண்டும்.

ஆகவே அவளது அழகை இந்தக் கலைஞர்கள் எப்படி உருவாக்கியிருக்கிறார்கள் என்று காணும் வேட்கை மிகுந்தது. ஆதலால் அன்று அவள் பிறந்து வளர்ந்த பதியாகவும் இன்று கோயில் கொண்டிருக்கும் பதியாகவும் இருக்கும் ஶ்ரீ வில்லிபுத்துாருக்கே சென்றேன். ஆண்டாளும் அரங்கனும் பெரிய திருவடியும் சேர்ந்து நின்று சேவை சாதிக்கும் சந்நிதிக்கே சென்றேன். நல்ல காலமாக ஆடிப்பூர உத்சவத் தினமாக இருந்ததால் உற்சவ மூர்த்தமாக மூவரும் வெளி மண்டபத்திலேயே எழுந்தருளியிருந்தனர். என்றாலும் அணிகளும் பணிகளும் நிறைய அணிந்து பட்டாடை புனைந்து நின்றார்கள். ஆதலினால் முக விலாசத்தை மட்டுமே காண முடிந்தது சர்வஅங்கசுந்தரியாக அவள் நிற்பதைக் காண முடியவில்லை. மூலத்தானத்திலுமே இதே கதை தான்.

அதுவும் மண்டபத்திலிருந்து எட்டி நின்று பார்க்கும் போதோ ஒன்றுமே தெரியவில்லை. பட்டாச் சாரியார்களோ மாலைகளையோ இல்லை அணிகளையோ களைந்து காட்டத்தயாராக இல்லை. இதனால் இந்த சூடிக் கொடுத்த சுடர்க்கொடியின் அழகு முழுவதையும் காண வாய்ப்பு இல்லாது போய் விட்டது.

நானோ விடாக் கண்டன். கோயிலில் வேறு எங்காவது சிலை வடிவில் நிற்க மாட்டாளா அவள், என்று ஏங்கும் உள்ளத்தோடேயே கோயிலைச் சுற்றிச் சுற்றி வந்தேன்.

அப்போது பட்டாச்சாரியர் பையன் ஒருவன் என்னுடன் வந்தான். அவன் சொன்னான், சார், இங்கு அந்தப் பெரியாழ்வார் பாதுகாத்து வந்த நந்தவனம் ஒன்றிருக்கிறது. அங்கு ஒரு சிறு கோயில் இருக்கிறது. அங்கு ஆண்டாளின் வடிவம் ஒன்றும் இருக்கிறது. அதைப்படம் கூட எடுக்கலாம் என்றான். சரி, என்று அந்தப் பையனைக் கையில் போட்டுக் கொண்டு, வேறு பட்டாச்சாரியர்களுக்கோ, இல்லை, நிர்வாக அதிகாரிக்கோ தகவல் ஒன்றும் கொடுக்காமல் நானும் பையனும் பெரியாழ்வர் வளர்த்த நந்தவனத்தை நோக்கி நடந்தோம். அது ஆண்டாள் கோயிலுக்கும் வடபத்ரசாயி கோயிலுக்கும் இடையே இருக்கிறது. நல்ல மதிற் சுவர்களால் சூழப்பட்டு இருக்கிறது. நந்தவனத்தில் புஷ்பங்கள் அதிகமில்லை. முன் மண்டபத்தோடு கூடிய சிறிய கோயில் ஒன்று இருக்கிறது.

அக்கோயிலுள் சுமார் மூன்றடி வடிவத்தில் சிலை உருவில் ஆண்டாள் நிற்கிறாள். அவளோ என் வருகையை எதிர் நோக்கியிருந்தவள் போல கதவுகளை எல்லாம் திறந்து வைத்துக் கொண்டே நின்றாள். நந்த வனத்தில் கோடி சூரியப் பிரகாசத்துடன் அன்று துளசியடியில் கிடந்த குழந்தையாம் கோதை, அங்கு குழந்தையாக இருக்கவில்லை. கொஞ்சம் வளர்ந்து பெரியவள் ஆகியிருந்தாள். கட்டுக்கட்டென்று நின்ற அவள் வடிவிலே நிறைந்த அழகு காணப்படவில்லை. அவளைப் படம் பிடித்து உங்கள் முன் இங்கு நிறுத்தியிருக்கிறேன். நீங்களே பார்த்துக் கொள்ளுங்க உருவெடுத்தவள் என்று கருதப்படுகின்ற ஆண்டாளின் திவ்ய்ருபம் காணும் என் ஆவல் தீர்ந்த பாடில்லை.

வட ஆற்காடு மாவட்டத்தில் நான் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது உத்தாரவியம் என்று கருதப்படும் பள்ளி கொண்டான் என்ற தலத்திற்கே சென்றேன். பாலாற்றின் கரையிலே பள்ளி கொண்ட பரந்தாமனைத் கண்டு வணங்கினேன். பின்னர் கோயிலின் மேலப் பிராகாரத்தில் உள்ள ராமன், கண்ணன் சந்நிதிகளுக்கும் சென்று வணங்கிய பின் வடகோடி மூலையில் உள்ள ஆண்டாள், சந்நிதிக்கும் சென்றேன். அங்குள்ள சிலை வடிவிலும், செப்பு படிமமாகவும் உருவாக்கியிருக் கிறார்கள்.

ஆண்டாளைக் கண்டேன் இருவருமே என் கற்பனை யில் உருவாகி இருந்த அழகிகளாகக் காணப்படவில்லை. திரும்பவும் கோயில் பிராகாரங்களிலேயே சுற்றிக் கொண் டிருந்தேன். கருவறையை அடுத்த பிராகாரத்திலே ஒரு மூலையிலே கண்ணன் ஒரு வனும் இன்னொரு மூலை யிலே ஆண்டாளும் சிலை யாகச் சின்னச்சிறு வடிவில் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களை வெளிக் கொணர்ந்து நோக்கினேன்.

அந்த ஆண்டாள் ரீ வில்லிபுத்துர் நந்தவனத்து ஆண்டாளைப் போல கட்டு முட்டென்று நிற்கவில்லை. அதற்கு மாறாக கம்பீரமாக வளர்ந்து நின்றாள்.

சொல்லப்போனால் இடுப்பிற்கு கீழே உள்ள கால்கள் கொஞ்சம் அளவுக்கு மீறி நீண்டிருந்தது போல் தோன்றிற்று, எனக்கு. ஆனால் முழங்காலுக்கு மேலே அவளது வடிவம் மிக்க வனப்புடையதாக இருந்தது. கையில் தாமரை மலர் ஒன்று ஏந்தி அவள் எழிலாக நிற்கிற கோலம் கண் கவர் வனப்புடையதாக இருந்தது. அவளையும் என் காமிராவுக்குள் அடைத்துக் கொண்டு வந்து உங்கள் முன் நிறுத்தி யிருக்கிறேன்.

இத்துடனும் நான் திருப்தி அடையவில்லை என்னுடைய லகஷ்ய சௌந்தர்ய தேவியான ஆண்டாளை யான் இன்னும் காணவில்லை என்றே ஏங்குகிறது என் உள்ளம். மணம் செய்துகொண்டு நின்ற கோலம் இன்னும் எவ்வளவோ அழகுடையதாக இருந்திருக்க வேண்டும் என்றே என் உள் உணர்வு சொல்லிற்று. ஆதலால் கோதையின் அழகிய கோலத்தை தேடித்திரியும் பணியை நிறுத்தவில்லை. திருக்கோயிலுக்கு மேற்கே பெண்ணை நதிக் கரையில் ஒரு திருவரங்கம் இருக்கிறது என்றார்கள். அந்தக் கோயிலைக் காண சென்றேன்.

அங்கே பெரிய ஆகிருதியாய் இருபத்தி நாலு அடி நிலத்தில் அனந்தன் மேல் துயிலில் அமர்ந்திருக்கும் அரங்கனைக் கண்டேன். நல்ல அழகனாக உருப் பெற்றிருக்கும் அவனை வந்தித்து வணங்கினேன். அங்குள்ள சுற்றுக் கோயில்களை எல்லாம் சுற்றிச் சுற்றி வந்தேன். ஒரு சிறு சந்நிதியிலே செப்புச் சிலை வடிவில் நிற்கும் ஆண்டாளைக் கண்டேன். சுமார் மூன்றடி உயரமே உடையவளாக அவள் நின்றாலும், அவள் பாசுரங்களில் கண்ட அழகையெல்லாம் அவள் வடிவிலேயும் காண முடிந்தது. -

தலையைக் கோதி முடித்துக் கொண்டையிட்டு நிற்கும் அழகைச் சொல்வதா? இல்லை வலக்கையை உயர்த்தி இடக்கையைத் தாழ்த்தி ஏதோ பரத நாட்டியம் ஆட முடியாது நிற்கும் கோலத்தைச் சொல்வதா? இன்னும் வலது காலை அழுத்தமாக ஊன்றி இடது பிட்டியை வளைத்து நிற்கும் அவளது ஒயிலைச் சொல்வதா? எதைச் சொல்லுவதென்றே தெரியவில்லை. அத்தகைய அழகிய வடிவிலே நிற்கிறாள் அவள்.

தோளையே சொல்லுகேனோ
சுடர் முகத்து உலவு கின்ற
வாளையே சொல்லுகேனோ
அல்லவை கேனோ
மீளவும் திகைப்பதல்லால்
துளித் துளி விளம்பல் ஆற்றேன்

என்று சீதையை வர்ணிக்க முனைந்த கவிச் சக்ரவர்த்தி கம்பன் எப்படிக் கையை விரிக்கிறானோ அவனைப் போலவே நானும் கையை விரிக்க வேண்டியிருக்கிறது. சொல்லால் உருவாக்கி நிறுத்த முடியாது போய் விடுகிறது. ஆனால் கவிஞனுக்கு புகைப்படக் கலைஞனான எனக்கோ அவ்வடிவினை அப்படியே படம் பிடித்து உங்கள் முன் நிறுத்த முடிகிறது.

ஒரு மகள் தன்னை உடையோன்
உலகம் நிறைந்த புகழால்
திரு மகள் போல வளர்த்தேன்
செங்கண் மால்தான் கொண்டுபோனான்

என்று ஏங்குகிறாரே, பெரியாழ்வார், அந்தத் திருமகளை, இங்கல்லவா கொண்டு வைத்து ஒளித்து வைத்து நமக்கு இத்தனை அலைச்சலைக் கொடுத்து விட்டார்கள் என்றாலும் கோதையின் கோலம் கண்ட பெருமிதத்தில் ஒரு வெற்றி நடையே போட்டுத் திரும்பினேன் நான்.